திங்கள், 28 டிசம்பர், 2009

பழைய பேரூந்தும் புதிய சாரதியும்

கெடி கலங்கிப்போச்சு! இருக்காதாபின்னை? பஞ்சிகாவத்தை சுற்றுவட்டத்திலை நிண்டு கொண்டு எந்தப் பக்கம் வெட்டவேணும் எண்டு கேட்டா! நானும் வந்த புதிசிலை கொழும்பு தெரியாதுதான். கொழும்பு மட்டுமில்லை சிங்களமும். ஆரார் தமிழ் கதைப்பான் ஆரார் சிங்களம் கதைப்பான் எண்டு கண்டு பிடிக்க ஏலாம எல்லாரும் ஒரே மாதிரி இருந்ததாலை ஒருத்தரிட்டையும் கேட்காம எத்தினை ரோட்டை நடந்தே கடந்திருப்பன்!!! யாழ்பாணத்திலை நான் மூண்டு வரிசமா ஒரு பாட்டா செருப்பை பாவிப்பன். கொழும்பிலை அது மூண்டு மாதத்திலை தேஞ்சது எண்டா கொழும்பிலை நான் நடந்த நடைதான் காரணம். எண்டாலும் நானே கொழும்பை பழசிட்டன் எண்டா...நடுச்சாமத்திலை சி ரி பியிலை 45 பேரை ஏத்திக் கொண்டு வெளிக்கிடுற றைவர் முதலாவதாக கொண்டக்டரிட்டை கேட்டு திருப்பினால் வயிறு பகீர் எண்ணாம பாலை வார்த்த மாதிரி குளிந்துபோயா இருக்கும்.




கொட்டேனாவில இருந்து பஸ் எடடா எண்டு வழிகாட்டியதே சுதாதான். கொட்டேனாவிலை இருந்தும் வெள்ளவத்தையிலை இருந்தும் வெளிக்கிடுமடா. நீ கொட்டேனா பஸ் எடு எண்டு சொன்னவன் இந்த பஸ்சிலை பாட்டு போடுவாங்கள் எண்டு சொன்னான். என்ன சீ ரி பி பஸ்ஸிலை பாட்டு போடுறவங்களோ? என்னாலை நம்பேலாம இருந்தது. ஓமடா. அந்த பஸ் றைவர் எம் பி 3 பிளேயர் வைச்சு பாட்டு போடுறவன். சுதித் தமிழ்ப் பாட்டு. சத்தியம் பண்ணாத குறையாக சொன்னான் சுதா. அப்ப நான் ஐ பொட்டை கொண்டு போகத் தேவையில்லையே எண்டு கேட்க உன்னட்டை கிடந்தா கொண்டு போவன் எண்டான் நக்கலாக. குறுக்காலை போவார் என்னட்டை உதுகள் ஒண்டும் இல்லையெண்டதை உவனுக்கு சொல்லிப் போட்டாங்கள் போலை.

எனக்கென்ன? கொழும்பிலை வீடா வாசலா? கொட்டேனாவிலை பஸ் எடுக்கிறதெண்டா நீரோ வீட்டை படுக்கோணும் வெள்ளவத்தையிலையெண்டா அச்சுதன் வீட்டை படுக்கோணும். எல்லாம் ஒண்டுதானே! நிரோ வீட்டையே படுப்பம்.

எடே காலமை நாலுமணிக்கே போய் நிண்டு ரிக்கட் எடுத்துப்போடு என்று குண்டைப் போட்டான் அவன். காலமை நாலுமணியோ? அது நடுச்சாமமெல்லோ எனக்கு! அப்பத்தான் எப்பன் நித்திரையும் கனவும் வாற நேரம்.அவள் பாவி படிப்பு படிப்பு எண்டு திரியுறதாலை என்னவோ கனவிலை கூட லேற்றாத்தான் வருவாள். அதிகாலையிலை கனவு கண்டா பலிக்கும் எண்டு உவங்கள் சொல்லுறதாலை நானும் அவ லேற்றா வாறதைப் பற்றி ஒண்டும் சொல்லுறேல்லை. இண்டைக்கு ரிக்கெட் எடுக்கிறதெண்டா நித்திரையும் போச்சு! கனவும் போச்சு!

ஜீவனிட்டை சொன்னன். எடே என்னை ஒருக்கா நாலுமணிக்கு தட்டிவிடு. ரிக்கட் எடுக்க போகோணும். ஜீவன் அந்தக் காலத்திலை இருந்தே காலமை நாலுமணிக்கு அதுவும் மார்கழி மாதத்திலை குளிச்சுப்போட்டு சேமக்கலம் தட்டிக்கொண்டு பஜனைக் கோஷ்டியோடை போறவன். அதுக்காக அவனை பக்திமான் எண்டு நினைக்கக் கூடாது. நிண்ட நிலையிலை மழைமாதிரி தூசணம் பேசக் கூடியதும் அவன்தான். நான் சிவராத்திரிக்கே நித்திரை முழிக்காத ஆள். அவன் சொன்னான் “இரண்டு தரம் தட்டிப்பார்ப்பன். எழும்பேல்லை எண்டா மூஞ்சியிலை மூத்திரம் அடிச்சுப் போடுவன்”. உம் செய்யக் கூடிய ஆள்தான். ரிக்கட் எடுக்கிற நினைவிலை முழிச்சு முழிச்சு பார்த்திலை என்க்கு முழு இரவும் நித்திரை குழம்பிப் போச்சு!!!

ரிக்கட் எடுத்தாச்சு. 11.30 க்கு பஸ் கொட்டேனாவாலை வெளிக்கிடும். அப்பிடியே போய் பெற்றா பஸ் ஸ்டாண்டிலை நிண்டு இரவு 12.30 க்கு யாழ்ப்பாணம் வெளிக்கிடும் --ரிக்கட் எடுக்கேக்கை சொல்லித்தான் விட்டவை.

11 மணிவரை நித்திரை கொள்ளலாம் எண்டா நித்திரை வராதாம். அவள் வேற படிச்சுக்கொண்டிருப்பாள். அது பாவம் கண் முழிச்சு படிச்சுக் கொண்டிருக்க நான் விசரன் மாதிரி நித்திரை கொள்ளுறதோ! நான் நித்திரை கொள்ளேல்லை. பஸ்ஸிக்கை பார்ப்பம்.

பஸ் ஏறியாச்சு. பாட்டுப் பெட்டிக்கு வைச்சிருந்த இடத்தை கொண்டக்ரர் வாடகைக்கு விட்டிட்டான் போலை. அந்த இடத்தை எலி வாடகைக்கு எடுத்திருந்ததால் றெடியோ பெட்டி கிடக்கிற இடத்திலை பொந்துதான் கிடந்தது. எம் பி 3 கிளேயராயும் காணோம். சுதாக்கு போனைப் போட்டன். என்னடா இப்பிடி செய்து போட்டியே!!! “றைவர் மீசை வைச்ச ஆளோ?”அவன் கேட்டான்.

“ஓமடா”
யாழ்ப்பாண றைவருக்கு மீசை இருக்கிறது ஒரு பெரிய விசயமா!
“டிரௌசர் போட்ட ஆளா?”இது அவன்.

எனக்கு பத்திக் கொண்டு வந்தது. இனி அவர் அண்டவெயார் போட்டிருக்கிறாரோ எண்டு கேட்டாலும் கேட்பான்.!

“என்னடா சத்தத்தை காணேல்ல”

“இல்லை. வெள்ளைச் சாரம் கட்டியிருக்கிறார்.”

“அப்ப உது வேறை பஸ். வேறை றைவர்”

சரி. இனியென்ன செய்யுறது! நித்திரையாவது கொள்ளுவம் எண்டு பார்க்கத்தான் உது நடந்தது.

“உதாலையோ தம்பி வெட்டுறது?” மூன்றாந் தரமும் றைவர் கொண்டக்ரரிட்டை கேட்கேக்கை எனக்கு சுவராய் விளங்கிட்டுது. ஆள் புதுசு! முதன் முதலா கொழும்பு ரூட்டை குடுத்திருக்கிறாங்கள். பேந்தெங்கை நித்திரை கொள்ளுறது!

என்னைப் போலத்தான் எல்லாரும். பஸ் மதவாச்சி பொயிண்டுக்கு பதிலாய் மாத்தறைக்கு போயிடுமோ எண்ட பயத்திலை முழிச்சிருந்தினம். பின் சீட்டுக் காரர்களுக்கு விசயம் வெளிக்கேல்லை அவை நல்ல நித்திரை.

றோட்டுக்கு நடுவிலை பதித்த பூனைக் கண்ணிலை ஏறேக்கை பஸ் குலுங்கியது. முடக்கிலை பிறேக் அடிக்கேக்கை கிறீச்சிட்டது. பழைய வில்லுத் தகடுகள் குலுங்கின. பஸ்ஸிலை இருந்த எல்லாரும் எழும்பியிட்டினம்.

கொண்டக்ரரின் வழிகாட்டிலுடன் பஸ் குருநாகலுக்கால் போய்க்கொண்டிருந்தது. எனக்கு சாதுவா நித்திரை தூக்கியது. அயர்ந்து போனன்.

சர்ர்ர்ர்ர்

மூஞ்சியிலை ஜீவன் மூத்திரம் அடிச்சிட்டான்.
“ எடே நாலு மணியாச்சே!?”

கத்திக்கொண்டே நான் எழும்பியதில் மீண்டும் முழு பஸ்ஸூம் முழித்துக் கொண்டது.

நாலுமணிதான். ஆனால் பெஞ்சது ஜீவன் இல்லை. பஸ் முகடு. மிகிந்தலை. வெளியே மழை பெய்துகொண்டிருந்தது. மழைத்தண்ணி பஸ்ஸின் முகடுக்கால் மூஞ்சியில் வழிந்தது. சேட் நனைஞ்சு காற்சட்டை நனைந்து மூலஸ்தானத்துக்கையும் தண்ணி போட்டுது.

அரைச் சொகுசு பஸ்தானே. அதனாலோ என்னவா ஏசிக்கு பதிலாக ஓசிக் குளியல் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

திருவெம்பாவைதானே தம்பி! காலமை குளிக்க வேணும்! பக்கத்திலை இருந்த அன்ரி நக்கலா சொன்னா!!!!

பஸ்ஸின் முன் கண்ணாடியை துரைக்கும் வைப்பர்கள் வேலை செய்யாததால் பஸ் மெதுவாய் போய்க்கொண்ருந்தது.

தண்ணீர் தாராளமாக முகட்டால் ஒழுகிக் கொண்டிருந்தது.

எனக்கு திருவெம்பாவை சிவராத்திரியாக மாறி கடைசியில் ஆருத்திரா தரிசனம் நடந்துகொண்டிருந்தது.

27 12 2009

வெள்ளி, 4 செப்டம்பர், 2009

ஒரு காகமும் உஞ்சுவும்

நான் ஒரு கிழமைக்கு லீவு எண்ட உடனேயே அங்கை அல்லோல கல்லோலப் பட்டது. எப்ப ஊருக்கு போறியள் எப்ப வாறியள் எண்டு கேட்டால் நான் என்னத்தை சொல்ல? யாழ்ப்பாணம் போறதெண்டா என்ன சாதாரணமான விசயமே? உந்த குறுக்கால போவாரின்ர பிளைட்டிலை போனா ஒரு மாத சம்பளம் அப்பிடியே கரைஞ்சு போகும் எண்டதாலை நானும் ஆடிக்கொருக்கா அமாவாசைக்கு ஒருக்காதான் வெளிக்கிடுறது.

“யாழ்ப்பாணத்துக்கு பஸ்ஸிலை போறதெண்டா எவ்வளவு நேரம் எடுக்கும்?” கேட்டது ஒண்டுமே தெரியாத சிங்களப் பிளளை எண்டாதாலை சினப்பட முடியாமல் இருந்தது.

அது ஓடுற றைவரையும் பாதையின்ர கொண்டிசனையும் பொறுத்தது என்று பதில் சொன்னேன்.

“எப்பிடியெண்டாலும் கன நேரம் பஸ்ஸுக்கை இருக்க வேணும் என்ன?”

ஓ. குறைஞ்சது 10 மணித்தியாலம்.

“ஆ ஆ அப்ப பஸ்ஸுக்கை எறினா என்ன செய்வியள்?”

இதென்ன கேள்வி? ஒரு மூலைக்கரை சீட்டா பிடிச்சு நல்ல நித்திரை கொள்ளுறதுதான்!!!

“ஏக்கநம் வடன்நா” ( அப்பிடியெண்டா உதவாது)

ஏதோ சுற்றி வளைச்சு ஏதோ விசயத்துக்கு வருகினம் எண்டு விளங்கினாலும் என்ன விசயம் எண்டு பிடிபடவில்லை.

“நீண்ட தூரப் பயணங்கள்தான் உறவுகளை உருவாக்குகிறது. ”

ஆ! விசயம் பிடிபட்டிட்டுது.

“அநியாயத்துக்கு நித்திரை கொள்ளாம யாரையாவது பார்த்துக் கீத்து....”

கல கல எண்டு சிரிக்கேக்கை எல்லாப் பொம்பிளையயும் வடிவுதான்!!!!!!

-- -- -- -- -- -- -- -- -- -- -- -- --- ------------------------------------------

யாழ்ப்பாண புகையிரத நிலையம்.
பஸ் எடுக்கலாம்.
கப்பலுக்கு ஆட்கள் ஏற்றப்படலாம்.
விமானப் பயணிகள் ஏற்றப்படலாம்.

ஆனா புகைவண்டியிலை மட்டும் ஏற ஏலாது.

உது எங்கடை மசுக்குட்டியின்ரை கண்டு பிடிப்பு. மசுக்குட்டியின்ரை உண்மைப் பெயர் எனக்கும் மறந்து போச்சு. உடம்பு முழுக்க மயிர் வளர்ந்து இருந்ததாலை மசுக்குட்டி எண்டாதான்அவனை எல்லாருக்கும் தெரியும்.

மசுக்குட்டியும் நானும் அண்டைக்கு கொழும்புக்கு வெளிக்கிட்டம். ஆறுமணிக்கே வந்திட்டம். பத்து பஸ்ஸிற்கும் சனம் ஏற்றி எல்லா பஸ்ஸும் ஒண்டாதான் வெளிக்கிடும் எண்டதாலை பத்து பஸ் சனமும் சிங்கள மகாவித்தியாலய முன்றலில் திரண்டு இருந்தது.

கிடந்த ஒண்டிரண்டு கதிரையளை தூக்கிப் பாட்டுக் கொண்டு எல்லாரும் கொஞ்சம் நிழல் பக்கமாக ஒதுங்கி இருந்தினம்.

தங்களை விட்டிட்டு பஸ் வெளிக்கிட்டாலும் எண்ட பயமுள்ள ஆக்கள் பஸ்ஸின் நிழலிலேயே குந்தியிருந்தினம்.

நேற்றே டிக்கட் புக் பண்ணியிட்டம் எண்ட துணிவிலை கொஞ்சம் தொலைவாக ஒரு நிழலில் கதிரையை போட்டு ஆசுவாசமாக சாய்ந்தேன். பஸ் வெளிக்கிட இன்னும் 2 மணித்தியாலத்துக்கு மேலே இருந்தது.




கலகலவெண்டு ஒரு சிரிப்புச் சத்தம்!

கம்பஸ் பிள்ளையள் மாதிரி இருந்தது.

“சும்மா போற வாற வழி எல்லாம் நித்திரை கொண்டா வேலையில்லை!!!” அண்டைக்கு அதுகள் சொன்னது நினைவுக்கு வந்தது.

காதைத் தீட்டிக் கொண்டேன்.

ஒரே சிரிப்பும் கும்மாளமுந்தான்.
மூன்று பேர்.

கைக்கெட்டும் தூரத்திலேதான் கதிலை போட்டு இருந்தார்கள் என்றாலும் நான் மற்றப்பக்கமாக இருந்ததிலை வடிவாத் தெரியேல்லை.

“கையை கழுவிப்போட்டு வாறமடி”

ஒருத்தியை காவலுக்கு வைத்துவிட்டு இரண்டு பேர் போனார்கள்.
போற போக்கிலை எனக்கம் ஒர பார்வை வீசிப் போனார்கள்.

நீங்கள் அமரர் கல்கி எழுதின பொன்னியின் செல்வன் நாவலிலை வாற வந்தியத் தேவனை கண்டிருக்கிறியளா?
அப்பிடியில்லை எண்டா என்னை பார்த்துக் கொள்ளலாம்.
வந்தியத்தேவனுக்கு அடிக்கடி கிளுகிளுப்பு வாற மாதிரித்தான் எனக்கு அண்டைக்கு!!

கையை கழுவிவிட்டு வந்த இரண்டும் கதிரையை இழுத்துப்போட்டுக் கொண்டு சாப்பாட்டு பாசலை அவிழ்க்கத் தொடங்கியது.

ம்ம்
புட்டும் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பும். பார்க்காமலே வாசனையை வைத்து தெரிந்து கொண்டேன்.

கையை கழுவாம நிண்டது கையை பிசைஞ்சு கொண்டு நிண்டது. இனி கையை கழுவப்போனா திரும்பி வாறதுக்கு இடையிலை எல்லாம் முடிஞ்சு போம் எண்டு பயத்திலையாக்கும்.

மற்ற இரண்டும் புட்டை பிசைந்து , “ ம், ஆக்காட்டு ” என்று ஒரு வாய் ஊட்டி விட்டுதுகள்.

ம்.

நாங்கள் உனக்கு ஏன் சீத்தினனாங்கள் தெரியுமே?

புட்டு வாய்க்குள்ள இருந்ததாலை வாயைத் திறக்காமலே தலையை அப்பிடியும் இப்பிடியும் ஆட்டினது.

அம்மா சொன்னவா சாப்பிடத் தொடங்கமுன்னம் காக்காக்கு போட வேணும் எண்டு!!!

ஹாஹாஹா

வெடிச்சிரிப்பு சிரித்ததில் புட்டுச் சன்னங்கள் எனக்கு அருகிலும் வந்தன.

இரண்டு அன்னங்களும் காக்காவும் ( அதுதான் பாருங்கோ ஒராள் கறுப்பு மற்ற இரண்டும் கொஞ்சம் வெள்ளை) பிறகு சண்டை பிடியாமல் சாப்பிட்டு முடித்தன.

சாப்பிடும் போதும் கல கல எண்டு சிரிப்புத்தான்.


சாப்பாடு காணுமோடி?- மூன்றிலை ஒன்றுதான் கேட்டிருக்க வேணும்.

“ம்.ம்” இது மற்ற இரண்டும்.

அப்பிடியெண்டா மிச்சத்தை உஞ்சுவுக்கு எறியுங்கோ! அப்பவிலை இருந்து பார்த்தக் கொண்டிருக்குது!!!

நான் கதிரையை தள்ளிப்போட்டு உட்கார்ந்து கொண்டேன்.

நல்லவேளை! மசுக்குட்டி தண்ணி குடிக்கப் போயிருந்தான்!!







சனி, 13 ஜூன், 2009

சைவக்கடை

பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் எண்டு சொன்னதாலைதான் பசி வரமுன்னம் கிள்ளுற வயிற்றை கவனிக்க நான் முன்னுரிமை குடுக்கிறது. சாப்பாடு எண்டது கொழும்பிலை லேசுப்பட்ட விசயமில்லை. கொழும்பிலை மட்டுமில்லை எங்கையும் அது அப்பிடித்தான். எண்டாலும் என்னைப்போல தாவர பட்சணியளுக்கு சுத்த சைவக்கடையை தேடிப்பிடிக்கிறது இப்ப வேணுமானால் சுகமாக இருக்கலாம். ஏனெண்டா சந்திக்கு சந்தி சைவக்கடை இருக்கு. ஆனா நான் வந்த 2000 ஆண்டிலை உந்தளவுக்கு சைவக்கடையள் இருக்கேல்லை எண்டது உண்மை. அதைவிட திக்கும் தெரியாம பாசையும் தெரியாம இருந்த என்க்கு பக்கத்து றோட்டிலை இருந்த கடையை கண்டுபிடிக்கவேபத்துநாளாய்ப் போச்சு.

அப்ப இடியப்பம் ஒண்டு ஒரு ரூபா ஐம்பது சதம். இடியப்பம் எண்டாலும் அது ஆமான இடியப்பம்தான். ஐந்து இடியப்பந் திண்டாலே வயிறு நிரம்பிவிடும். ஆனா பாருங்கோ வரவர எல்லாம் விலையேறுறதுதானே. இப்ப இடியப்பம் ஒண்டு ஆறு ரூபா. விலையேறுறது மட்டுமல்ல எங்கடை சனம் மாதிரி அதுவின்ர சைசும் மெலிஞ்சுகொண்டே போகுது. இப்பிடித்தான் பாருங்கோ ஒருநாள் ஐஞ்சு இடியப்பத்துக்கு ஓடர் பண்ணி விட்டு குந்திக்கொண்டு இருக்க இடியப்பம் வந்து சேர்ந்துது. ஏதோ ஒரு சந்தேகத்திலை எண்ணிப் பார்த்தா நாலு இடியப்பந்தான் இருக்குது. வந்ததே கோபம். இடியப்பம் கொண்டு வந்து வைச்சவனுக்கு சொன்னன். இருந்கோ எங்கை பார்ப்பம் எண்டிட்டு அந்தாள் என்ன மாணம் பண்ணிச்சோ தெரியாது ஒரு இடியப்பத்தை பிடிச்சு உதற அது இரண்டு இடியப்பமானது. இப்ப சரியே எண்டு கேட்டிட்டு அந்தாள் போட்டுது. என்க்கெண்டா பணமா போச்சு. நல்லவேளை அந்த நாலு இடியப்பத்தையும் உந்தாள் உதறி அந்தநாலும் எட்டு இடியப்பமாய் குட்டிபோட்டிட்டுது எண்டால்....
பொக்கட்டிலை வேற காசில்லை. பேந்து தேத்தண்ணியை குடிக்காம தியாகம் செய்துதான் பில் கட்ட வேணும். எங்களுக்கு கொழுப்பொ கொலஸ்ரோலோ சேர்ந்து போடக்கூடாதெண்டு சாப்பாட்டு கடைக்காரருக்கு எவ்வளவு அக்கறை பாருங்கோ. இல்லாட்டா மெலிஞ்ச ஸ்லிம்மான இடியப்பமெல்லாம் எங்களுக்கு தருவினமே?

சிக்கனத்துக்கு பெயர்போனது சைவக்கடையள்தான். முதல்நாள் சோறு அடுத்தநாள் தோசையாகவும் முதல்நாள் வடை அடுத்தநாள் சாம்பாறாகவும் வாற அவதாரங்கள் கடவுள் கூட எடுத்திருக் மாட்டார். இப்பித்தான் ஒருநாள் இட்டலி கேட்க ஒரு வெண்பொங்கல் மாதிரி ஒண்டை கொண்டு வந்து தந்திட்டினம். என்னப்பா இது எண்டு  கேட்டதற்கு அது அரிசி கொஞ்சம் அரைபடவில்லை எண்டு பதில் வந்தது.



என்னோட வெளியிலை சாப்பிட வாறதுக்கு என்ர பிரண்ஸ்க்கு கூட அவ்வளவு விருப்பமில்லை. ஏதாவது காரஞ்சாரமாய் மச்சம் சாப்பிடாமல் எப்ப பார்தாலும் சைவம் சைவம் எண்டு சாகிற என்னை பார்த்து அவங்களுக்கு எரிச்சடீலா தெரியாது.  இதுக்குத்தான் ஒரு நாள் , “வாங்கோடா சாப்பிடுவம்” எண்டு கூட்டிக்கொண்டுபோய் ஒரு சில்லி பரோட்டாவை வாங்கி ( போடேக்கையே நல்லா மிளகு போடச்சொல்லிப்போட்டு) கொடுத்தது தான் ... அண்டையிலை இருந்து ஒருத்தரும் என்னட்டை காரஞ்சாரமாய் சாப்பிட கேட்டதே இல்லை. இதிலையும் வந்து மாட்டுப்பட்ட இப்பாவி ஒருத்தன், சாப்பிடேக்கை தொண்டை எரிந்தாகவும் பிறகு இரவு வயிறு எரிந்ததாகவும் அடுத்தநாள் வெளிவாசல் பற்றி எரிந்ததாகவும் முறைப்பட்டுக் கொண்டான்.



இப்பிடித்தான் பைனல் எக்சாம் அண்டைக்கு சைக்கிளிலிலை ஓடிப்போய் மருதானையிலை சாப்பிட்டிவிட்டு பின்னேரம் வேர்த்து விறுவிறுக்க வந்த என்னைப் பார்த்து எல்லா எக்சாமினரும் பாவம் பெடி எக்ஸாமை கண்டு வேர்த்து விறுவிறுக்குதாக்கும் எண்டு முணுமுணுத்தது என்ர காதுவரை கேட்டது.

எங்கடை வேலைசெய்யிற இடத்துக்கு சிலவேளை கேக் வரும். முட்டை போட்டிருக்கும் எண்டதாலை நான் சாப்பிடுறதில்லை. ஆனா என்ர பேரிலை கேக்கின்ர அரைவாசி முடிஞ்சிடும். எப்பிடி எண்டு கேக்கிறியளோ?! 
அவற்றை துண்டை நான் எடுக்கிறன் எண்டு எல்லாரும் என்ர எக்கவுண்டிலை சாப்பிட்டா அது முடியாம என்ன செய்யும்.!!

நான் சந்தோசமாய் போறதெண்டா தமிழ்க் கல்யாணவீடுகள் தான் பாருங்கோ. சுத்த சைவமாய் சாப்பாடு போட அதுதான் நல்ல இடம். ஆனா பாருங்கோ வந்த கனபேர் திட்டித் திட்டித் தான் சாப்பிடுறவங்கள். இண்டைக்கும் சைவம் சாப்பிட வேண்டி வந்திட்டுது எண்டு.

கேகாலைக்கு வேலைக்கு வரேக்கை ஒரு பயம் இருந்தது. அங்கை சைவக்கடை இருக்குமோ எண்டு. பஸ்ஸாலை இறங்கி தலை நிமிர்ந்து பார்த்தா தட்டுப்பட்டது சைவக்கடை போட்தான்.

தமிழன் எங்கை இருக்கிறானோ அங்கை சைவக் கடையும் இருக்கும்!!!


வியாழன், 21 மே, 2009

லீவும் கல்யாணவீடும்.

கலியாணவீட்டுக்கு போகோனும். அதுவும் ஐஞ்சு வருசமாய் எங்களோட படிச்சதின்ர கலியாணவீடு. அஞ்சு வருசமாய் அவையள் படிச்சிருக்கலாம் ஆனா நீ படிச்சனியோ எனக் கேட்டு என்ர அடி மடியிலை கை வைக்கக் கூடாது. கலியாணவீடெண்டா சும்மா இல்லை. லீவு எடுக்கிறதெண்டா கூட வேலை செய்யுறவன் ஒவ்வொருத்தனும் ஏதோ எதிரியை பார்க்கிற மாதிரிப் பார்ப்பான். பின்னை சும்மாவே. கவர் அப்புகுக்கு சைன் வைச்சவன் தானே நிண்டு வேலைக்கு முறியோணும். அது வேற இப்ப டெங்கு காய்ச்சல் டைம். வேலை சொல்லி மாளாது. எண்டாலும் ஒரு சாக்குப் போக்கும் சொல்லேலாது. ஒரு மாததுக்கு முன்னமே காட் கிடைச்சிட்டுது. இப்பபோய் லீவு இல்லை எண்டு சொன்னா கற்பூரம் அணைச்சு சத்தியம் பண்ணினாலும் நம்பாதுகள். 

19ம் திகதியும் ஆச்சு இன்னும் லீவு போட இல்லை. நாட்டிலை வேற நடக்கிறதுகள் அவ்வளவு நல்லாத் தெரியேல்லை. உந்த லட்சணத்திலை கலியாணவீடாவது ....

மததியானம் எஸ் எம் எஸ் வந்தது. நாளைக்கு பொது விடுமுறையாம். ஆனாலும் மனது சந்தோசமாய் இல்லை.எதப் பிரச்சனை தீராட்டாலும் ஏதோ ஒரு வழியா லீவுப் பிரச்சனை தீர்ந்ததே. சரியொருக்கா போட்டு வருவம் எண்டு நினைக்க மழை ஊத்தத் தொடங்கியது. மழையெண்டா மோட்டர் பைக் ஓடுறது கஸ்டம். பைக் எண்டா ஒள்றரை மணித்தியாலத்திலை போய்ச் சேரலாம். பஸ் என்டா அது ஆடிஆடி போறதுக்கிடையிலை தாலிகட்டு முடிஞ்சிடும். பஸ்வேற ஓடுமோ தெரியாது... வெள்ளன வெளிpக்கிடுற அவசரத்திலை காலமை சமைக்கவும் இல்லை. ரீ போடவும் இல்லை. எல்லாம் போய் கொழும்பிலை பார்ப்பம்.

கேகாலையிலை இருந்து கொழும்புக்கு டிரெக்ட் பஸ் இருக்கு. கொழும்பு கண்டி றோட்டுத்தானே. கண்டி பஸஸிலும் ஏறலாம். 





பஸ் ஸ்டாண்டுக்கு போனா பஸ் நிற்குது ஆனா ஓடாதாம். என்னடாப்பா இது விடுமுறையோ இல்லை ஹர்த்தாலோ? விடுமுறை எண்டா சாப்பாட்டுக் கடை மருந்துக்கடை திறக்கவேணும். போயா எண்டா பார் பூட்டவேணும். பஸ் ஓட வேணும்.

ஏதோ ஒருமாதிரி வந்த கண்டி பஸ்ஸில் தொற்றிக் கொண்டேன். அப்பிடியே பெற்றா போய் அங்கையிருந்து வெள்ளவத்தை போறதுதான் திட்டம். நல்லசேளை பெற்றாவிலை பஸ் நிண்டது. ஆனா சாப்பாட்டு கடையளும் மற்றக் கடையளும் பூட்டு.

சரியெண்டு வெள்ளவத்தைக்கு போனா. அடப்பாவமே. அஙகையும் கடை பூட்டு. யார்யாரோ கத்திக்கொண்டு ஆர்ப்பாட்ட ஊர்வலம் போண்க்கொண்டிருந்தாங்கள்.

எனக்கோ சரியான தண்ணிவிடாய். காலமை ரீ வேற குடிக்கேல்லை. பியர்கடை வைன் சொப் மட்டும் திறந்திருக்கு.

போன் கீச் கீச் எண்டது. 

என்னடா?

விசயம் தெரியுமே ? ஆள் அதுக்கை இல்லையாம்.

தண்ணிவிடாய்க்கு ஒரு மிடறு அடிச்சிட்டு போனாலும் பறவாயில்லை மாதிரி சந்தோசமாய் இருந்தது.

நீங்கள் சொல்லுங்கோ..

இது விடுமுறைபோ ஹர்த்தாலோ???

20.05.2009


புதன், 13 மே, 2009

வடையும் எஸ் எம் எஸ் உம்.


எங்கடை நாட்டிலை டெலிபோன் கொம்பனிகள் நல்லா உழைச்சுக் கொட்டினதுக்கு ஒரு காரணம் காதலர் பெருந்தகையள் எண்டா நீங்கள் கட்டாயம் ஒப்புப் கொண்டுதான் ஆகவேண்டும். மணித்தியாலக் கணக்கா காதுக்கை போனை ஓட்டி வைச்சு கதை கதை எண்டு கதைச்சு பில்லை சந்திர மண்டலம் மட்டும் ஏற்றி வைக்கிற பெருந்தகையள் அதுகள் தான். அதுசரி இப்பிடி யாரும் மணிக்கணக்கில அலம்புறதுக்கு கிடைக்காத பூத்தெரிச்சலிலை நான் புலம்புறதெண்டு சொன்னாலும் நான் அதை கணக்கிலை எடுக்க மாட்டன். 


ஆனாலும் பாருங்கோ இப்பிடி காதலிச்சுக் கொண்டிருக்கிற ஆக்களோட திரிஞ்சால் நிறைய விசயம் அறியலாம். எந்த ரியூசனுக்கு போனாலும் வெளிக்காத விசயங்கள் இவையளோட நடவடிக்கையால தெரியவரும். நானும் நிறைய பேரைக் கண்ட அனுபவத்தை உங்கேளோடை கதைக்காட்டா என்ர தலை சுக்கு நூறாய் எல்லே வெடிச்சிடும். 

செல்போன் கொம்பனியளிலை சில விசேச நம்பர்களை பெறவேணும் எண்டா கொஞ்சம் காசு கூடக் கட்டியால் கிடைக்கும் எண்டது உங்களுக்கும் தெரியும். கப்ஸ் வாகன நம்பருகள் மாதிரி நினைவிலை நிற்கிற நம்பருகள் அவை. ஆனா அதுக்கு செலவளிக்கிறதிலும் பார்க்க கூட அலையோணும் பாருங்கோ உங்கடை ஆளின்ர நம்பரை எடுக்க. அவவோட கூடத்திரியுறதுகளுக்கு ஏதாவது வாங்கிக் குடுத்து அல்லது அவவின்ர தம்பிக்காரனின்ரை ஒரு சில கோரிக்கைகளை நிறைவேற்றி அல்லது தெரிஞசவன் பறைஞ்சவன்ர காலிலை விழுந்து இப்பிடி செய்யிற லஞ்ச லாவணியங்கள் கொஞ்சமில்லை பாருங்கோ. 

இப்பிடித்தான் என்ர பிரண்ட் ஒருத்தனுக்கு ஒண்டு செற்றாச்சு. இடையிலை என்ன பிரச்சனையோ தெரியாது திடீரெண்டு அவவின்ர பேச்சுவார்த்தை நிண்டு போச்சு. பெடி தவியா தவிச்சிட்டுது. ஆனா என்ன போனிலைதான் எஸ் எம் எஸ் இருக்கே. பெடி அனுப்பிக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு ரீற் ரீற் எண்ட சத்தமும் டிலிவரி ரிப்போட்டாம்.  ஒரு மெசேஜுக்கு பத்து பதினைந்து டிலிவறி ரிப்போட் வருமோ என்னவோ தெரியாது அவனின்ர போன் ஒரு ஐந்து நிமிசததுக்கை இருவது முப்பது முறை ரீற் ரீற் எண்டு சத்தம் போடும். ஆனா அந்தப் பிளளையோ ஒரு றிப்ளையும் அனுப்பிறதா தெரியேல்லை. உன்ர வயிறு எரியும். என்னத்துக்கு எண்டு கேட்கிறியளே? கணக்கை பாருங்கோவன். என்னதான் ஒரு மெசேஜ் இரண்டு ரூபா எண்டு கொம்பனி சொன்னாலும் இந்த வரி இந்த வரி எண்டு போட்டு அது இரண்டுரூபா அம்பேசமாகத்தான் இருக்கும். உவன் பாவி சராசரியா 20 மெசேஜ் அனுப்பினாலும் ஏறத்தாழ 50 ரூபா. உந்தக் காசுக்கு நாங்கள் மூண்டு வடையும் இரண்டு ரீயுமாவது சாப்பிட்டிருக்கலாம். ( அப்ப வடை 9 ரூபா ரீ 10 ரூபா) குறுக்கால போறவன் அனுப்புற மெசேஜுக்கு ரிப்ளையையும் காணேல்லை. வாசிக்கிறாளோ அல்லாட்டா வந்தவுடனை அழிக்கிறாளோ தெரியாது. உந்தச் சந்தேகத்தை நான் அவனுக்கு சொன்னன். அவன் சொன்னான் அவ கட்டாயமாக வாசிப்பா எண்டு. உவங்களை என்னெண்டு நம்புறது. காதலிக்கிறவன் எல்லாம் பொய்தானே சொல்லுறவன். அந்தப் பெட்டை வேறை ஒரு பதிலும் போடவில்லை யெண்டா என்ன அர்த்தம். மெசேஜ் எல்லாம் நேரை குப்பை கூடையுக் கை போகுது எண்டுதானே.


அவனுக்கும் விளங்கியிட்டுது. நான் சந்தேகப் படுறன் எண்டு.

 ” இப்ப உன்க்கு என்ன வேணும் ? அவ வாசிக்கிறாவோ இல்லையோ எண்டுதானே?”

நானும் கோயில் மாடு மாதிரி தலையை ஆட்டினன்.

அவன் மெசேஜ் அடித்தான்.( இங்கிலிசிலைதான்)  அன்பே உனக்கு ஏதோ காரணத்தாலே என்னைப் பிடிக்கவில்லை எண்டு தெரிகிறது. நீயும் பிடிக்கவில்லை என்பதை தெரிவித்தால் நான் காத்திராமல் மறந்து விட்டு மற்றைய வேலையை பார்ப்பேன். உடன் பதிலிடவும்.

அனுப்பி ஒரு நிமிடம்கூட ஆயிருக்காது ரிப்ளை வந்தது. ”நான் உன்னை வெறுக்கிறேன். மறந்துவிடு என்னை.”

காட்டிப்போட்டு கேட்டான். என்ன இப்பவாவது நம்புறியா?

திறந்த வாய்க்கை இலையான் பூந்தது கூட தெரியாமல் வாயை பிளந்து கொண்டிருந்த நான் என்ன சொல்லுறது. அவன் போய்விட்டான்.

உது நடந்தது 2001 இல. 


கொஞ்சநாள் போக நானும் கஸ்டப் பட்டு ஒரு நம்பரை அவனின்ரை இவனின்ரை காலிலை விழுந்து எடுத்தன். போட்ட ஒரு மெசேஜுக்கும் ரிப்ளை இல்லை. அட அநியாயமே! உந்தக் காசுக்கு வடை வாங்கித் திண்டிருந்தாலும் மிச்சம். என்ன செய்யுறது. 

எழுதினேன். 
நானும் ஒரு கொள்கை(?!!)யோடதான் இருக்கிறன். பிடிக்காட்டா சொல்லும் நான் கரைச்சல் குடுக்கமாட்டன். 

ரிப்ளை வந்தது
நான் எப்பவோ சொல்லியிட்டன். இண்டையிலை இருந்தாவது மரியாதையாக(?!!) மெசேஜ் அனுப்புவதை நிப்பாட்டவும்.

ஹுஹு ஹு

வடைக்காசு வீண்போகவில்லை. 

வாசிச்சிருக்கிறா.

இப்ப வடை 25 ரூபா. மெசேஜ் 1ரூபா 50 சதம்.

கே காலையிலை வடை 15 ரூபா.

வெள்ளி, 24 ஏப்ரல், 2009

அப்பு சாமிக்கு அரோகரா


அப்பு சாமிக்கு அரோகரா எண்ட உடனே முன்னாலையும் பின்னாலையும் பொத்திக்கொண்டு நீங்களுந்தான் சின்னப் பிள்ளையிலை ஓடியிருப்பியள். அதுவரை அம்மணமாக நின்றாலும் வராத வெட்கம் அப்பு சாமிக்கு அரோகரா எண்டதும் எங்கையிருந்து வாறதெண்டு எனக்கு இப்பவும் தெரியாது. அது மந்திரச் சொல் பாருங்கோ. இல்லாததையும் வரவழைக்கும்


சின்னஞ் சிறிசுகளுக்கு காற்சட்டை போடப் பிடிக்காது. எனக்குந்தான். ஆனா உஞ்சு வந்து கௌவிப்போடும் எண்டு பயமுறுத்தினா உடனே போட்டக் கொள்ளுறது. ஒருநாள் இப்பிடித்தான் பூனைக்குட்டியோட விளையாடிக் கொண்டிருக்கேக்கை அது கையிலை விறாண்டிப்போட்டுது. எரிஞ்ச எரிவெண்டா. நல்லவேளை அண்டைக்கு காற்சட்டை போட்டிருந்தன். ஆனா அண்டையிலை இருந்து பூனை எலி கரப்பொத்தான் எல்லாத்துக்கும் பயந்து காற்சட்டை போட்டுக்கொண்டுதான் இருக்கிறது. எங்கடை வீட்டுக்கு பக்கத்திலை பிள்ளையார் கோயிலிலை வைரவர் நாயோட நிண்டார். துணிஞ்ச கட்டைதான் உஞ்சுவுக்கே உந்தாள் பயப்பிடவில்லையெண்டா......

தமிழாக்கள் தெய்வ சிந்தனை கூடின ஆக்கள் க்ண்டியளோ. சேம் சேம் பப்பி சேம் எண்டு கத்தாம அப்பு சாமியை நினைக்கிற அந்தச்சனத்தை போல முன்னேற்றமான சிந்தனையை நான் வேற எங்கையும்  காணேல்லை. இது மட்டுமே கோயில் அடிக்கிற கண்டா மணிக்கு றைமிங்காக ...........மணி எண்டு பேர்வைச்ச தமிழனை... மாலைபோட்டு கும்பிடவேணும். குஞசு எண்டால் சின்னன் எண்டு அர்த்தமாம்.


நாங்கள் ஆண்டு 5 மட்டும் படிச்சது கலவன் பாடசாலை. பள்ளிக் கூடம் எண்டா எங்களுக்கு படிப்புதானே சிந்தனை. அரிவரியிலை சொல்லித்தந்ததெல்லாம் வந்து பாத்றூமிலை தான் சுவத்திலை எழுதுறது. பென்சில் பிடிச்சு எழுதுறதை விட கஷ்டமான வேலை பாருங்கோ. நல்லா வயிறு முட்டியிருந்தால் தான் ஆவன்னா இனா ஐயன்னா எழுதலாம். அல்லாட்டா அரைவாசியிலை இங்க் முடிஞ்சிடும். இஞ்சை கொழும்பை மாதிரி டைல்ஸ் போட்டு யூரின் கொமட் எல்லாம் கட்டியிருக்காது. முழுச்சுவரும் எங்களுக்குத்தான். கோசலை ரீச்சர் கூட எங்களுக்கு அடிக்கிறது இல்லை. ஒருவேளை இந்த விசயம் அவவுக்கு தெரியாதோ அல்லது உள்ளுக்கை போக பஞ்சியிலை வாசலிலை அடிச்சுப்போட்டு வாற பெடியளை விட நாங்கள் பறவாயில்லை எண்டு நினைச்சாவோ தெரியாது. எங்கடை பெட்டையளை நினைக்க பாவமா இருக்கும். ஒரு ஆனா ஆவன்னா எழுத வக்கில்லாததுகள் எப்பிடி அரிச்சுவடி யாஸ் பண்ணப் போகுதுகள் எண்டு பரிதாபப் படுறதுதான். எது எப்பிடியிருந்தாலும் கொக்குவில் சந்தியின் மேற்குப் பகுதி நாற அங்கையிருந்த மீன் சந்தை காரணம் எண்டா, சந்தியின் கிழக்குப் பகுதி நாற எங்கடை சுவர்ச் சித்திரங்களதான் காரணம்.

உப்பிடித்தான் ஒரு பெடியன் சித்திரம் வரைஞ்சு போட்டு சிப்பை மூட மறந்து வகுப்புக்கை வந்திட்டான். அதை மற்றவன் கண்டு அரோகரா என்ன.... அதை எல்லாப் பெட்டையளும் பார்க்க.. எங்கட வகுப்பு ஆண் குலத்துக்கே அண்டு கரிநாள்.




இப்பிடி வளந்ததால குளிக்கேக்கை கூட நான் வலுங்கவனம். ஆராவது பார்த்து அப்பு சாமி எண்டா என்னாகிறது. வளந்து பெரிசான பிறகும் இந்தக் கூச்சம் மாற இல்லை.

கம்பஸ் வந்தாச்சு. ராகிங் அது இது எண்டு எதுவுமே இல்லை. புல்லரித்தது. இல்லாட்டா என்ன கூத்தெல்லாம் ஆட வேண்டி வந்திருக்கும்.

சீ வி எஸ் மொடியுல் முடியும்வரை ஹொஸ்டல் ரூம் கிடைக்கவில்லை. அந்தக் காலத்தில் ஸ்பெசல் கோட்டா ஒண்டும் இல்லாததால திவா அண்ணை ரூமிலைதான் கஷுவல்ரி நாளிலை படுக்கிறது. காலமை எழும்பி குளிக்கப்போனா.... பாத்றூமுகள் ஒண்டுக்கும் கதவில்லை. ஒவ்வொரு ஷவருக்கு கீழையும் ஒவ்வொரு வயிரவ கடவுள்கள் குளிச்சுக் கொண்டிருந்தார்கள்.  வாற ஒவ்வொருத்தரும் கட்டியிருந்த டவலை கழட்டி தணிலை போட்டுட்டு குளிச்சுக் கொண்டிருந்தார்கள். அட இந்த ஊரிலை இதுதானோ வழக்கம்? நானும் டவலை கழட்டி தூணிலை போட்டிட்டு குளிச்சாச்சு. நல்லவேளை யாரும் அப்பு சாமிக்கு அரோகரா சொல்லவில்லை. எண்டாலும் முதல் முதல் ஒரு சுதந்திரக் குளியல் எனக்கு ஒரு மாதிரித்தான் இருந்தது.

அண்டைக்கு  போஸ்ட் கஷுவலிட்டி. இரவு 2 மணிக்கு படுத்து காலைமை எழும்பி அது வேற இப்பிடி ஒரு குளியல்.... வோட்டிலை கவின்கா கவனிச்சிட்டாள்- நான் ஒரு மாதிரி நிண்டதை. நிறைய குறும்புக்கார பெட்டை. நான்வேற அவளிண்டை போய் பிரண்டோட லவ்சீனை கூட இருந்த எல்லாருக்கும் உடைச்சிட்டன் எண்ட கோபமும் இருந்துதோ தெரியாது.

” குரு என்ன ஹொஸ்டலிலையே நிண்டனி?”

ஓமோம்

”அட கள்ளா சுதந்திர குளியல்தானே”...

அட படுபாவிகள்.யாரோ காலங்காத்தாலை வேலையில்லாம வந்து உதெல்லாம் சொல்லிப்போட்டாங்களே....

அதுசரி யார் உனக்குச் சொன்னது.

” ஒருத்தருமில்லை. நான் சும்மா கதை விட்டு கதையெடுத்தனான். ஹிஹி..”

அப்பு சாமிக்கு அரோகரா...

யாரோ பிலத்து கத்தினமாதிரி இருந்தது.


புதன், 15 ஏப்ரல், 2009

கொட்டேக்கை பிடிச்சன் எண்டா....


யாழ் இந்துக் கல்லூரிப் பெடியளுக்கு படிப்பிக்கிறதெண்டா அது ஒரு கலை பாருங்கோ. அதுதான் அந்தக் காலத்தில ஒருபொம்புள ரீச்சரும் அங்க படிப்பிக்க வாறேல்லை. நான் சொல்லுறது 1990- 1998 காலப்பகுதி. அப்ப எனக்குத் தெரிஞ்சு சங்கீதத் ரீச்சரும் அதுக்கு பிறகு 1991 அளவில வந்த பொட்னி ரீச்சரையும் தவிர வேறொருவரும் பொம்பிளை ரிச்சரில்லை. பிரின்சிபல் ஒபிசில இருந்த டைபிஸ்டை தவிர ஒபிசில கூட ஒரு பொம்பிளையளும் வேலை செய்யேல்லை.







சரி பொறுங்கோ

சொல்ல வந்த விசயத்தை விட்டிட்டு நான் வேற எங்கையோ சுத்திறன். ( படிக்கப்போறன் எண்டு சொல்லிப்போட்டு சுத்திப் பழகி இப்ப அந்தப் பழக்கம் விடுகுதில்லை)

படிப்பிக்கவே பயபபடும் இடத்தில உபஅதிபராக இருக்கிறதெண்டா சின்ன விசயமா?

இருந்து காட்டினவர்

எலியர்.

என்னடா ஆசிரியரை அதுவும் ஒரு உப அதிபரை பட்டப்பெயர் சொல்லிக் கூப்பிடுறானே எண்டு கோவிக்காதையுங்கோ. மகேந்திரன் சேர் எண்டு சொன்னா கனபேருக்கு அவரைத் தெரியாது. அதுதான்.

எலியர் நாங்கள் ஆறாம் ஆண்டில 1990 இல போய்ச் சேர்ந்தபோது எங்களளவு உயரத்தில இருந்தவர். நாங்கள் வகுப்பு ஏற ஏற வளர்ந்து கொண்டு போனனாங்கள். பாவம் அவர் உயரத்தில வளரேல்லை.

ஆனாலும் எலியர் வாறார் எண்டா உந்தப் புரளிகாரனும் அடங்கிவிடுவான். காரணம் அவர் முதுகுப்புறமாய் மறைத்து (?!) வைச்சிருக்கிற வால்தான். மன்னிக்கவும் பிரம்புதான். சவல் அடி கிடைக்கிற பயத்திலை எல்லாம் அடங்கியிடும்.
உப்பிடித்தான் ஒருநாள் அதிபர் அலுவலகத்திற்கு அருகிலுள்ள வகுக்கறைகளுக்கு விஜயம்(திக்விஜயம்) செய்துகொண்டிருந்த எலியரின்ர கண்ணிலை பொறி பறந்தது. அது ஆண்டு 11 படிக்கிற அண்ணைமாரின் வகுப்பறை. அதிலை சாப்பிட்டிட்டு எறிய ஒரு குப்பைவாளி வைக்கப்பட்டிருந்தது. சாப்பிட்ட மிச்சங்களை அதுக்குள்ள போடச்சொல்லி பெரிய டிரம் வைச்சிருந்தவர்.

எங்கடை பொடியள் சாப்பிட்டு விட்டு வகுப்பிலிருந்தே எறிய (அதுவும் என்னை மாதிரி இலக்காய் எறிய முடியாத பலபேர் அந்த வகுப்பிலை படிச்சிருக்கும் எண்டு நினைக்கிறன்) அந்த குப்பையெல்லாம் வாளிக்கு வெளியே சிதறிக்கிடந்நதது.

யாரடா வெளியில கொட்டினது

வகுப்பே மௌனம்.

கொட்டேக்க பிடிச்சனெண்டா.... பிறகு தெரியுந்தானே.....

வகுப்பே கொல் எண்டு சிரிச்சது.

பிறகு என்ன நடந்தது எண்டே கேக்கிறியள்.






ஒண்டா இரண்டா எண்ணுறதிற்கு?

முதுகு பழுத்துபோச்சு முழு வகுப்பிற்கும்.

விளங்காம நீங்களும் முழுசிறியளே....

மிச்சத்தை வெளியிலை கொட்டேக்கை பிடிச்சனெண்டா அடிப்பன் எண்டு அவர் சொல்ல வந்தது டைமிங்கில வேறமாதிரி ஆகி....
சரி விடுங்கோ இன்னும் விளங்கேல்லை யெண்டா

புதன், 18 மார்ச், 2009

18.03.2000

தலைப்பை பார்த்த உடனே இது என்ர பிறந்த நாளோ அல்லது அவளை முதல் முதல் கண்ட நாளோ இல்லை அல்லது அவவின்ர பிறந்தநாளோ ( ம். நிறைய குறும்பு உங்களுக்கு) எண்டு நினைச்சிடாதையுங்கோ. எனக்கு ஏதோ நேற்று நடந்த மாதிரிக் கிடக்கு. அண்டைக்குத்தான் நான் முதன்முதலிலை விமானம் ஏறினது. விமானம் எண்டா ஏதோ லண்டனுக்கு போற போயி்ங் அல்லது கனடாவுக்கு போன ஜெட் எண்டெல்லாம் கண்ட பாட்டுக்கு கற்பனையை அவிட்டு விட்டிட்டு கஸ்டப் படாதையுங்கோ. நானே சொல்லுறன். அதுபாருங்கோ எங்கடை யாழ்ப்பாணம் கொழும்பு பிளைட்தான். இப்ப விளங்கியிருக்கும் உங்களுக்கு - இது லண்டன் பிளைட்டை விட விசேசமானதெண்டு.

கொழும்புக்கு வாறதெண்டா தமிழனுக்கு எப்பவும் பிரச்சனைதான். எங்கடை அப்பு , முட்காவின்ர ( முட்கா யார் எண்டு உங்களுக்கு தெரியாது தானே- அது எங்கட அம்மா சாட்சாத் செல்வராணியே தான்.) இன்ர சிட்டி ரெயினிலை செகண்ட கிளாஸ் வாரண்டிலை அதிஷ்டம் கிடைச்சா சிலிபிறேற்று சீட்டிலை போன காலம் ஒண்டு இருந்தது எனக்கும் சாடையா ஞாபகம். ஆனாப் பாருங்கோ எனக்கு நினைவில நிக்கிறதெல்லாம் பாஸ் எடுத்து கொழும்பு போறதுதான். அதுவும் 1990 -1995 காலப்பகுதியெண்டா அவயிற்றையும் 1996 இலிருந்து இப்பவரை இவையிற்றையும் பாஸ் எடுத்தாதான் கொழும்பு போகலாம். அவையிவை யாரெண்டு தெரியாத ஆக்கள் பேசாமல் மூடிவைச்சிட்டு நித்திரையை கொள்ளுங்கோ. எனக்கு விசர் வந்திடும். நாட்டு நிலை தெரியாத நீஙகள் எல்லாம் மனிசரே? சரிசரி. ஏதோ என்ர வயித்தெரிச்சலிலை நானும் “வள்சுள்” எண்ணுறன் எண்டுட்டு கோபிச்சு கொண்டு போயிடாதையுங்கோ. உங்களை விட்டா எனக்கு வேற யார் இருக்கினம்?







அது ஒருபெரிய கதை பாருங்கோ. நான் கடைசியா கொழும்பு வந்தது 1989 இல.அப்ப வந்தது ரெயினிலை. அப்ப வந்து முந்தி நான் படிச்ச மூர் றோட்டு நேசரி, அப்பாவோட வேலை செய்த குசும் அன்ரி இப்பிடி கொஞ்ச ஞாபகங்களை புதுப்பிச்சு போட்டு போனதுதான். குசும் அன்ரியை என்னெண்டு நினைவு வச்சிந்தாய் எண்டு கேளாதையுங்கோ. பருப்பு திண்டா வாறதுக்கும் அவவின்ர பெயருக்கும் கிட்டத்தட்ட கனெக்சன் ஒண்டு இருக்கிறமாதிரி ஒரு ஹலுசினேசன்தான்.

1996 இல காங்கேசன்துறையிலை இருந்து திருகோணமலைக்கு தமிழ் தினத்துக்கு கப்பலிலை ( ஓசியிலதான்) போனது ஒரு பயணம். அதுக்குப்பிறகு 2000 இலதான் யாழ்ப்பாணத்தால குடிபெயர்ந்தது.



சரி வந்த விசயத்தை விட்டிட்டு...
1998 இல ஏ எல் பாஸ் பண்ணினாலும் 2000 ம் ஆண்டுவரை சும்மா றோட்டிலை திரிஞ்சதுதான் வேலை. ஏனெண்டா கம்பஸ் 2000 ம் ஆண்டு ஓகஸ்டு 21 தான் துவங்கினது. அப்ப என்னத்துக்கு உந்த மூதேவி மார்ச்சிலையே வெளிக்கிட்டது எண்டு நீங்கள் கேட்கக்கூடாது. பாஸுக்கு நான் ஜனவரியிலேயே அப்ளை பண்ணிப்போட்டன். ஏதோ கடவுள் புண்ணியத்திலை மிக விரைவாக (??!!) மார்ச்சிலையே கிடைத்துவிட்டது. பாஸ் எடுத்தா ஒருமாதத்துக்குள்ள வெளிக்கிட்டிட வேணும். இல்லாட்டா பேந்து புதுப் பாஸ் எடுக்க வேணும். தவிர இங்கிலிசு கோஸ் ஏப்ரலிலை துவங்கும் எண்டு யாரோ சொன்னதால மார்சிலையே வெளிக்கிட்டாச்சு.

பாஸ் எடுக்கிறதெண்டா அதுக்கு போம் இருக்கு. அதை நிரப்பி விதானையாரிட்டை சைன் வாங்கி ( அது வாங்கேக்கை குடும்ப காட் கொண்டு போகவேணும்) பிறகு ஏ ஜீ ஏ யிட்டை சைன் வாங்கி பிறகு உடுவில் காம்பிலை குடுக்கவேணும். அவன் பேநது கொக்குவில் காம் காரணுக்கு அனுப்ப அவங்கள் கிளியர் பண்ணி திரும்பி அனுப்புவாங்கள். அதுக்கு பிறகு பேப்ரிலை பெயர்வரும். அந்தப் பெரிய லிஸ்டிலை என்ர பேரை தடவிப்பிடிச்சு ( எப்பவரும் எண்டு தெரியாததால ஒவ்வொருநாளும் பேப்பர் வாங்கிப் பார்க்கோணும்) பிறகு நாலாம் குறுக்குத்தெருவுக்கு போகவேணும். அங்கைதான் டோக்கன் எடுக்கிறது. டோக்கன் கிடைச்சா கிட்டத்தட்ட விசா கிடைச்ச மாதிரித்தான். பிறகு டோக்கனை கொண்டு கிளியரண்ஸ் எடுக்கோணும். அந்த கிளியரண்சை கொடுத்தா ஒரு டேட்டிலை டிக்கட் போட்டு தருவினம். கையோட காசையும் கொண்டு போக வேணும். டிக்கட் எடுத்தா பிறகு பிளைட் ஷுவர்தான். எண்டாலும் பேப்பரை பார்க்கவேணும் பிளைட் நிப்பாட்டி போட்டாங்களோ இல்லை ஓடுதோ எண்டு.

எம்பெருமானின் அளப்பெரும் கருணையாலும் நாங்கள் செய்த பூர்வ ஜென்ம புண்ணியத்தாலும் பிளைட் கான்சல் ஆகேல்லை. 18ம் திகதி பிளைட்.

18.03.2000
அப்ப ஓடின பிளைட் லயன் எயார் எண்டு நினைக்கிறன். சரியா ஞாபகம் இல்லை.
செகண்ட் பிளைட்.

காலை 6மணி.
நாலாம் குறுக்குத் தெரு.
தெருச் செக்கிங்.(இராணுவம்)
பொடி செக்கிங்.

சிவில் அலுவலகம் - நாலாம் குறுக்குத்தெரு யாழ்ப்பாணம்.
மீண்டும் செக்கிங்.( மிரிடரி பொலிஸ்)

பஸ்சுக்கு காத்திருப்பு.
பஸ் வருகை.
செக்கிங் ( விமானப்படை)

பஸ் ஏறி தெல்லிப்பளை பயணம். (அப்ப தெல்லிப்பளைதான் பொயிண்டு- கப்பல் எண்டா என்ன பிளைட் எண்டா என்ன)

பஸ் மாற்றி ஏற்றப்படல். (யாழ்ப்பாண பஸ் தெல்லிப்பளைக்கு அங்கால போகாது)
ஸ்கொட்டுக்காக காத்திருப்பு ( ஸ்கொட் என்பது பாதுகாப்புக்காக பஸ்ஸை சுற்றி வரும்வாகனங்கள்.)

பஸ் எல்லாம் வெளியே பார்க்க முடியாதவாறு கறுப்படிச்ச கண்ணாடி. ஜன்னல் திறக்க முடியாது. பஸ்ஸில் ஏ சியோ பானோ இல்லை.

காலை 9 மணி
பலாலியை அடைதல். (வாழ்க்கையில் முதன்முதல் பலாலியில் கால்வைத்த நாள்)

காத்திருத்தல் காத்திருத்தல் காத்திருத்தல்.

பகல் 2 மணி
செக்கிங் முடிந்து உள்ளே போதல்.

பசி பசி பசி
அம்மா கட்டித்தந்த புட்டுப் பாசலை நானும் அப்பாவுமாக வெட்டல்.
பேச்சுத் துணைக்கு நிசாந்தன்.
நிஷாந்தன் யாரெண்டு தெரியாதென்ன. அவன்தான் மட்ஸிலை டிஸரிறிக் பெஸ்ட்.( மாவட்டத்திலை முதலாம் பிள்ளை எண்டு தமிழிலை சொல்லடா என் நீங்கள் குளறுவது எனக்கும் கேட்குது)

மாலை 3 மணி.
பிளைட்டுக்கு ஆக்களை எடுத்தல்.

மாலை 3.30 மணி
பிளைட் வெளிக்கிடல்.

மாலை 4.30 மணி
கட்டுநாய்ககாவை அடைதல் ( அப்ப இரத்மலானையிலை இறக்கிறதில்லை)

மாலை 5.00 மணி
அழகான ஏ சி ரூரிஸ்ட் பஸ்ஸில் ஏற்றப்படல்.
( இவ்வளவு நேரமும் வெயிலிலை காய்ந்து வேர்த்து விறுவிறுத்த எங்கடை உடம்பின்ர வாசம் எங்களுக்கே தெரியதொடங்கியது.)
இந்த கட்டுநாயக்கா கொழும்பு பயணத்திற்கு பிறிம்பா 75 ரூபா வாங்கினது வேற கதை.
எண்டாலும் ஏசி சொகுசு பஸ்ஸில் முதல் அனுபவம். அதுவும் கண்ணாடி கறுப்பில்லை. வெளியே பார்க்கமுடியும்.

பஸ் கொழும்பின் நரகமான டிரபிக்கில் சிக்கிக்கொண்டது.

மாலை 7.30.00
கொழும்பு றீகல் தியேட்டர் வாசலிலை இறக்கிவிடப்படல்.கவனிக்க தியேட்டர் வாசல்.
( இது லேக் ஹவுஸ் முன்னே உள்ளது.)

மாலை 7.30.01
முச்சக்கர வண்டி சாரதிகளால் சூழப்படல்.

ஒரு ஓட்டோ காறனிடம் அப்பா சிங்களத்தில்..

இந்த இடத்துக்குபோக எவ்வளவு...

ம். ஐயா நீங்கள் இப்ப நிக்கிறது கொழும்பு 02 (அதெண்டா உண்மைதான்) இது கொழும்பு 13 ( செக்கட்டித்தெரு) ஒரு 500 ரூபா தாங்கோ.

வேண்டாம். நாங்கள் நடந்தே போறம்.

ம். 25 நிமிடங்கள் நடந்து செக்கடித்தெருவுக்கு வந்துவிட்டோம்!!!!!

1995 இல 10 மைல் நடந்தே இடம்பெயர்ந்த எங்களிடமா?

ஹாஹாஹா

கொழும்பு பொல்லாத ஊர்தான் என்ன??????!!!!

18.03.2009

ஞாயிறு, 15 மார்ச், 2009

நகம் கழட்டின கதை

வேலை செய்யும்போது ஒவ்வொருவருக்கும் கட்டாயம் நிறைய அனுபவங்கள் வரும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொருமாதிரியானவை. அப்போது நான் காசல் வீதி மகளிர் மருத்துவ மனையில் வேலை செய்துகொண்டிருந்தேன். உள்ளக மருத்துவ பயிற்சிக் காலம் (இன்ரேண்சிப்) என்றது இளமருத்துவர்களைப் பொறுத்தவரை சக்கை பிழிந்து வேலை செய்ய வேண்டிய காலம். அதுவும் காசல் வீதியில் என்றா எள் என்ன முன்னம் எண்ணையா நின்று வேலை செய்ய வேணும். எல்லா இடமும் அப்பிடித்தானே அதிலை என்ன காசல் ஸ்பெசல் எண்டு நீங்கள் கேட்கலாம். 5 எஸ் என்கிற முறையோடு நல்ல ஒரு ஸ்ராண்டட்டில் இயங்கின ஒரு வைத்தியசாலை காசல். பொறுங்கோ நான் சொல்ல வந்த விசயத்தை மறந்துபோட்டு வேற ஏதோ உளறுறன்.



வோட் 5 மற்றும் 6 இல் வேலை செய்தவர்களுக்கு டொக்ரர் தயானந்தா என்றா தெரியாமா இருக்காது. ஒரு சிடுமூஞ்சி என்று பெயர் இருந்தாலும் ஆள் பயங்கர கெட்டிக்காரன. கலியாணம் கட்டாம இருக்கும் அவருக்கு எங்கடை நேசுகள் பல கதைகள் சொன்னாலும் நாங்கள் அதை பொருட்படத்திறதில்லை. அது அவரவர் சொந்த விசயம் தானே. கிட்டத்தட்ட தூசணத்தில பேசக்கூடிய ஒரு கோபக்காரன் என்றாலும் அப்ப கொன்சல்டண்ட் ஆக இருந்த டொக்ரர் வர்ணகுலசூரிய உட்பட பலரும் பெருமதிப்பு வைத்திருந்தது தயானந்தாவிலதான். அந்தாளின்ர ஸ்கானிங் எல்லாம் அந்தளவு திறம். இப்பிடி இருந்ததால அவர் வந்தாலே ஒரு பயபக்தியுடன் கூடிய அமைதி அந்த இடத்திலை இருக்கும். ஆனாலும் கொஞ்சம் பஞ்சி பிடித்த மனிசன். குறிப்பிட்ட நேரத்தை விட மேலதிகமாக வேலை செய்ய கொஞசம் பஞ்சிப்படும்.







அண்டைக்கும் அப்பிடித்தான். நாங்கள் தியேட்டருக்குள்ள. தியேட்டர் என்றால் அது ஒப்பிரேசன் தியேட்டர். காசல் வீதியில மருதானை சினி சிட்டி மாதிரி மூன்று தியேட்டர் ஒரே நேரத்தில ஓடும். அதால தான் அதை தியேட்டர் கொம்பிளக்ஸ் எண்ணுறது. தியேட்டர் ஏயும் பீயு்ம் பக்கத்து பக்கத்தில. இரண்டிலும் எங்கடை வோட் படம்தான் ஓடிக்கொண்டிருந்தது. ஏ பக்கம் சீசர். பீ பக்கம் மற்ற ஒப்பிறேசனுகள். ஏ பக்கம் டொக்டர் தயானந்தாவும் உதவிக்கு நானும். பீ பக்கம் பாபுவும் சியாமளன் அண்ணையும்.

எங்கடை பக்கம் அண்டைக்கு வேலை வெள்ளண முடிஞ்சுது. சியாமளன் அண்ணை ஒன்றிரண்டு சின்னக்கேஸ் இங்கால போட்டு செய்யலாமே எனக் கேட்க.... ஓம் செய்யலாம்தான். ஆனா தயானந்தாவிட்ட ஆர் கேட்கிறது எண்டது பிரச்சனை. நான் எதுக்கும் துணிஞச கட்டை எண்டதால போய் கேட்டன். அந்தாள் மணிக்கூட்டை பார்த்துது. மத்தியானம் 12 மணிக்கு இன்னும் 10 நிமிடங்கள் தான் இருந்தது. பசியாக்கும். மேலையும் கீழையும் யோசித்துவிட்டு மாட்டன் எண்டு தலையாட்டி விட்டது. 

12 மணி விசிட்டிங் அவர். பேசண்டுகளை பார்க்க விசிட்டர்ஸ் வரும் நேரம். தியேட்டர் வாசலில் பெரிய சத்தம்.

பார்த்தால் வந்த விசிட்டர் ஒருவரின் கால் பெருவிரல் நகம் கழண்டு இரத்தம் ஒழுகிபக் கொண்டிருந்தது. அது தியேட்டர் நேர்ஸின் உறவினரோ தெரியாது - ஒருக்கால் மருந்து கட்டுவம் எண்டு தியேட்டர் வாசலுக்கு வந்திருந்தா. சும்மா மருந்து கட்டப்போன் நேர்ஸ் பார்த்துவிட்டு பயந்து டொக்ரர் இது நகம் கழட்ட வேண்டிய கேஸ்போல இருக்கு ஒருக்கா பாருங்கோ எண்டது. நேர்ஸ் கேட்டு டொக்ரர் மாட்டன் எண்ணுறதா. பார்த்தால் நகம் அரைவாசி பிய்ந்து தொங்கிக்கொண்டிருந்தது. நடந்தது என்னவெண்டால் அந்தப் பெண்மணியின் கணவர் வோட்டுக்கு போகும் அவசரத்தில் உள்ளே போக, இன்னமும் 12 மணியாகவில்லை சற்று பொறுங்கள் எண்டு வாயில் காவலன் தடுக்க, பின்னாலே ஒரு அடியெடுத்து சைத்தவர் வைத்தத தனது மனைவியின் பெரு விரலில்.

என்னதான் 5000 ரூபாவுக்கு வாங்கிய நல்ல சூ வாக இருந்தாலும் காலை மிதித்தால் நகம் பிய்யத்தானே செய்யும். பிய்ந்து விட்டது. அவர்கள் வந்த வாட்டு 9 தியேட்டருக்கு அருகில் இருந்ததால் காயத்துக்கு மருந்து போட உள்ளே வந்த பெண்மணியின் நகத்தை பிய்க்கும் பொறுப்பு மன்னிக்கவும் நகத்தை லோக்கல் அனஸ்தீசியாவில் கழட்டும் பொறுப்பு என் தலையில். மாட்டன் என்று சொல்லியிருக்கலாம். பசிவேறு. ஆனாலும் சொல்லவில்லை.

டிரெசிங் செட் தயாராகி வந்தது. அந்த நேரம் பார்த்து தியேட்டர் உடுப்பை மாற்றிவிட்டு வந்த தயானந்தாவின் பார்வையும் இதில் விழுந்தது. தான் கழட்டி தருவதாக சொல்லி வேலையை துவங்க எனது தலைப் பாரம் குறைந்தது. ஆனால் தியேட்ர் நேர்ஸ்மாருக்கு கலக்கம் கூடிவிட்டுது. ஏனென்றால் ஏதாவது சின்னப் பிழை விட்டாலும் சப்பல் பேச்சு பேசும் மனிசன். எல்லாம் ரிப்டொப்பாக வேலை நடந்தது. விறைப்பு ஊசிமருந்து ஏற்றிவிட்டு நகம் பிடுங்கவேண்டும். ஊசியை கண்டதும் வெலவெலத்து அந்தப் பெண்மணி என் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டார். ஊசியேற்றும்போதோ சொல்லவே வேண்டாம். ஒரு பெரிய குரலில் குழறி என்னை ஒரு தூண் என நினைத்து கட்டிப் பிடித்துக் கொண்டார். அட அந்த நேரம் பார்த்தா மற்ற தியேட்டர் வேலை முடிஞசு சியாமளன் அண்ணை வரவேணும்?. பிடித்தது சனி!!!

எட நான் ஒரு சின்ன கேஸாவது செய்து தாங்கோடா என கேட்க மாட்டன் எண்டு போட்டு ஆரோ ஒரு வடிவான பெட்டைக்கு ( அட அதுக்கு பிறகுதான் பார்த்தன் - உம் உண்மையிலை வடிவுதான்.) நகம் புடுங்கிக் கொண்டிருக்கிறாங்கள்!!!

நகம் பிடுங்கி முடிந்து மருந்து போட்டு அந்தப் பெண்மணி வெளியே போயும் ஆயிற்று. ஆனா சின்ன ஒப்பிறேசனுக்கு உதவாமல் வெளியில வந்து நகம் பிடுங்கின கதை சிறந்த கதை வசனம் மற்றும் டைரக்க்ஷனில் உருவாகி விட்டது.

பேந்தென்ன வந்த போன நேர்ஸ் எல்லாம் டொக்டர் நகம் புடுங்குவமே என கேட்டு கேட்டு (உம் வேற யாரை கேட்கமுடியும் டொக்ரர் தயானந்தாவையா?) அறுத்து தள்ளிவிட்டார்கள்.

தியேட்டர் முழுதிலும் இவ்வாறு எனது படமே ஓட்டப் பட்டுக்கொண்டிருந்ததால் நான் ஒரு கிழமை தியேட்டர் பக்கம் போகவே இல்லை!!!!

2007






செவ்வாய், 10 மார்ச், 2009

பஞ்சாமிருதம்





நான் கோயிலுக்கு போறதுக்கு ஒரு காரணம் அங்கை தாற பஞ்சாமிருதமும் தான். நான் மட்டுமல்ல எனது காலத்தில குஞ்சு குருமானாய் இருந்த எல்லாரும் கோயில் வருறதுக்கு காரணம் பஞ்சாமிருதம் எண்டா நீங்கள் கோவிக்கக் கூடாது. அப்ப பஞசாமிருதம் எண்டா ஊரிலை இருந்த மிக அழகான பெண்மணி என்று தப்புத்தப்பா நீங்கள் நினைச்சுப்போடக் கூடாது எண்டதுக்காகவே முதலே இதைச்சொல்லோணும். அப்ப எங்களுக்கு ஒரு ஏழு எட்டு வயதிருக்கும்.



ஐயர் தருகிற விபூதி சந்தனத்திற்கு கையை நீட்டுறமோ இல்லையோ பஞ்சாமிருதத்திற்கு இரண்டு தரம் நீளும். பஞசாமிருத்ம் குடுக்கிற ஆளும் லேசுப் பட்டதோ? கையிலை முதல் தரம் வாங்கி நக்கின ஈரத்தை கண்டு பிடிச்சு இரண்டாம் தரம் கிடைக்கிறது சிலவேளை மறுக்கப்படும். நாங்களும் பின்னை வேசுப்பட்ட ஆக்களே? முதல் தரம் வலது கையை நீட்டினா பிறகு இடது கையை நீட்டுறது.

இல்லாட்டா கோயில் தூணிலை ஒரு அப்பு அப்பீட்டு வெறுங்கையை காட்டுறது. பின்னை என்ன இவ்வளவு ருசியான சாமான் குடுக்கேக்கை...ஆனா உந்தக் கள்ளங்களை பிடிக்கவோ என்னவோ இடது கைக்குமேலே வலது கையை வைச்சு இரண்டுகையாலையும் மரியாதையாக வாங்கவேண்டும் எண்டு கோவில் ஐயா சின்னப்பெடியளுக்கு சொல்லுவார். திருநீறு சந்தனம் தீர்த்தம் வாங்கவெண்டா சரி. மரியாதை குடுக்கோணும். பஞ்சாமிருதத்திற்கு என்னத்திற்கு...
வெட்கத்தை தூக்கி கக்கத்திற்கை வைச்சுக்கொண்டு அணணை அண்ணை எண்டு பஞ்சாமிருத சட்டியை கலைச்சுக்கொண்டு....
அதையேன் கேட்கிறியள். ரேஸ்தான.


சிலவேளை பஞ்சாமிருத ஜக்பொட் அடிக்கும். யாரும் வயதுபோனவை தாங்கள் வாங்கின பஞ்சாமிருத்தையும் இந்தாடா மோனை எண்டு தந்திட்டு போவினம். அன்பிலையோ அல்லது அவைக்கு சீனி வருத்தமோ யாருக்கு தெரியும்! அதுவா எமக்கு முக்கியம்!

கொஞசம் வளர்ந்த பிறகு பஞ்சாமிருதத்திற்கு கை நீட்ட வெட்கம். அதுவும் அண்ணை அண்ணை எண்டு கலைச்சுக்கொண்டு போக முடியுமே? அதுக்கும் ஒரு வழி கண்டு பிடித்தம். கோவிலிலை தீவட்டி காவினா அல்லது தீவட்டிக்கு எண்ணைச் சட்டி காவினா கட்டாயம் கடைசியில பஞ்சாமிருத்ம் கிடைக்கும். கடவுளின்ர அருள் கிடைக்குதோ இல்லையோ பஞ்சாமிருத்ம் கிடைப்பதில் நாங்கள் வலுங் கவனம். வாழைப்பழம் மாம்பழம் பிலாப்பழம் முந்திரிகை வத்தல் தேன் சிலவேளை கசுக்கொட்டை தேசிக்காய் எல்லாம்போட்டு பஞ்சாமிருதம் படு ஜோராக இருக்கும்.

கொழும்பு வந்த புதிதில் என்ர பழைய சிநேகிதன் ஒருத்தன் எம் சிக்கு கூட்டிக்கொண்டு போனான். அங்கை மூணன்று பஞசாமிருதத்திற்கு மன்னிக்கவும் இங்கை அதன் பெயர் புரூட் சலட்டாம் - ஓடர் பண்ணினான். 
ஐயற்றை பஞ்சாமிருத்ம் மாதிரி அது ரேஸ்டும் இல்லை. பில்லை கண்ட எனக்கு மூச்சும் இல்லை. 

கோயிலிலை சும்மா நாங்கள் வேண்டிற பஞ்சாமிருத்திற்கு இங்கை 60 ரூபா ( 2000 ஆம் ஆண்டில்) எடுத்துப்போட்டான்.

கொழும்பிலையும் நாங்கள் கன்க்க கோயில் கட்டோணும்.

வெள்ளி, 6 மார்ச், 2009

கண்டூ வரூதூ


எங்கடை வீட்டு பசுக் கன்றுகளுக்கு தமிழ் நல்லா விளங்குமெண்டு நான் சொன்னால் எனக்கு விசர் முத்திப்போச்செண்டு நீங்கள் சொல்லுவியள். ஆனா எங்கடை வீட்டு கன்றுக் குட்டிக்கு கண்டு வரூது எண்டு நான் கத்தினால் வலுஞ் சந்தோசம். வந்து ஒரு உம்மா கொடுத்து விட்டு போகும். உண்மையை சொன்னா உம்மா வாங்குவதற்கு நான் செய்யிற தந்திரந்தான் அது.

பொறுங்கோ உங்களுக்கு ஒரு அறுப்பும் விளங்கேல்லை எண்டு எனக்குத் தெரியும்.அதுதான் வாறன் விசயத்திற்கு. வீட்டிலை மாடு கன்று வளர்த்திருந்தியள் எண்டா இது நல்லா விளங்கும். அதுக்காக வீட்டிலை மாடு எண்டுதானே திட்டு வாங்கிறனாங்கள். அப்ப எங்கடை அப்பா அம்மாவும் மாடு வளக்கினம்தானே எண்டு கதைச்சியள் எண்டா நான் ஒண்டுஞ் செய்ய ஏலாது.

எங்கடை வீட்டிலை முதன் முதல் மாடு வாங்கினது 1985 இல எண்டு நினைக்கிறன். அப்ப எனக்கு ஆறு வயது. முன்னாலே ஒழுங்கையிலை இருந்த கந்தையரிட்டைதான் மாடு அவிழ்த்தது. பாவம் பெடியன் ஊரிலை விற்கிற தண்ணி கலந்த பாலை குடிக்காம நல்ல பால் குடிக்கோணும் எண்டு நல்ல நோக்கத்திலை மாடு வாங்கி பிறகு மாடு ஒரு நேரம் கறக்கிற ஆறு போத்தில் பால் ஆறுநேரம் குடிச்சாலும் முடிக்கேலாதெண்டு தெரிஞ்சு ஊரில வீடு வீடாய் பால்கொண்டுபோய் விக்கிற வேலையும் என்ரை தலையிலைதான் கடைசியாய் முடிஞ்சது வேற கதை.

முதலிலை வாங்கின மாட்டுக்கு சூரி எண்டு பெயர் வைத்தாயிற்று.சூரிக்குட்டி கன்னி நாகு. அது போட்ட கன்றுதான் லச்சுக்குட்டி. இலட்சுமி என்று அழகாக பெயர்வைத்தாலும் லச்சு எண்டு கூப்பிட்டாதான் அதுக்கு விளங்கும் எண்ட படியா லச்சு என்று சுருக்கியாச்சு. ( அதுக்கு பிடிச்சத பிடிக்காதது விளங்கினது விளங்காதது எல்லாம் எப்பிடி உமக்குத்தெரியும் எண்டு கேட்டு நீங்கள் எனக்கு கரைச்சல் குடுக்கக் கூடாது. அது அப்பிடித்தான்)

எங்கடை வீட்டை வளந்த மாடுகள் எல்லாமே நல்லவை. ஒரு சின்னப்பெடின் கூட போய் பால் கறக்க விடும். அது மட்டுமில்லாமல் அசைந்தால் பால்வாளி இடறிவிடும் எண்டு தெரிஞ்சு அசையாமல் நிற்கும்.ஆனாலும் இலையான் கலைக்க வாலை நன்றாகவே விசுறும். மாட்டு வால்தானே எண்டு சும்மா நினையாதையுங்கோ. சும்மா முதுகில பட்டால் தான் தெரியும் சவுக்கால அடிச்ச மாதிரி. எனவே பின்னங்கால்களையும் கட்டி அதோட வாலையும் கட்டி மடி கழுவுற வேலையை அப்பா பார்ப்பார். அப்ப எனக்கு என்ன வேலை எண்டு கேட்கிறியளோ? அங்கை ரெடியான உடனே கன்றை அவிட்டு விடுகிற வேலை எனக்குத்தான். 

பசியோடை எப்படா அவிழ்த்து விடுவான் எண்டு பார்த்துக் கொண்டு கன்று சுற்றிச் சுற்றி வரும். கையை நக்கும். முகத்தோடை முகம் உரசும். கெஞ்சும். நானென்ன செய்ய. அப்பா அங்கை ரெடியாகும் மட்டும் ஒண்டும் செய்ய முடியாது. அதுமட்டும் பொறு பொறு எண்டு சொல்லிப் பார்க்கிறது. கேட்டாத்தானே. பழையபடி வந்து கையை நக்கும். பார்க்க பாவமாய் இருக்கும். 

அங்கையெல்லாம் ரெடி எண்டவுடன் கண்டூ வரூதூ எண்டு கத்திப்போட்டு கட்டை அவிட்டு விடுவன். பேந்தென்ன. துள்ளிக் குதிச்சு ஓட்டந்தான்.

கன்று பால் குடிச்சு முடிஞ்சவுடன் வாலைத்தூக்கிக் கொண்டு வளவெல்லாம் குதிக்கும். அந்த நேரம் அதோட சேந்து குதிக்கிறதுதான் எனக்கு வேலை. எங்கடை வீடு றோட்டுப் பக்கம் எண்டதாலை கன்றுக்குட்டிக்கு றோட்டுப் புதினம் காட்ட கூட்டிக் கொண்டு போறதும் நான்தான்.

கன்றுக் குட்டியின் நெற்றியில் கொஞ்சுறதெண்டா எனக்கு நல்ல விருப்பம். ஆனா கண்டுக் குட்டிக்கு அது பிடிக்காது. தலையை அங்கையும் இங்கையும் ஆட்டும். நெற்றியிலை கொஞ்சவேணும் எண்டு நினைத்தா.... கண்டு வருது எண்டு கத்த அதுக்கு பழைய நினைவு வர ... பேந்தென்ன என்ரை வேலை வெற்றிதான்.

ஆனா பாருங்கோ பால் குடிச்ச கண்டை பிடிச்சுக் கட்டடா எண்டு அப்பா சொன்னா போங்கப்பா படிக்கிற வேலை கிடக்கு எண்ட சாட்டை சொல்லி கன்றை கட்ட போறதில்லை. கன்றைக் கட்டி அதின்ர கோபத்தை சம்பாதிச்சு பிறகு கண்டு வருது எண்டதிற்கு கிடைக்கிற கொஞ்சலை இழக்க எனக்கு என்ன விசரே???