புதன், 18 மார்ச், 2009

18.03.2000

தலைப்பை பார்த்த உடனே இது என்ர பிறந்த நாளோ அல்லது அவளை முதல் முதல் கண்ட நாளோ இல்லை அல்லது அவவின்ர பிறந்தநாளோ ( ம். நிறைய குறும்பு உங்களுக்கு) எண்டு நினைச்சிடாதையுங்கோ. எனக்கு ஏதோ நேற்று நடந்த மாதிரிக் கிடக்கு. அண்டைக்குத்தான் நான் முதன்முதலிலை விமானம் ஏறினது. விமானம் எண்டா ஏதோ லண்டனுக்கு போற போயி்ங் அல்லது கனடாவுக்கு போன ஜெட் எண்டெல்லாம் கண்ட பாட்டுக்கு கற்பனையை அவிட்டு விட்டிட்டு கஸ்டப் படாதையுங்கோ. நானே சொல்லுறன். அதுபாருங்கோ எங்கடை யாழ்ப்பாணம் கொழும்பு பிளைட்தான். இப்ப விளங்கியிருக்கும் உங்களுக்கு - இது லண்டன் பிளைட்டை விட விசேசமானதெண்டு.

கொழும்புக்கு வாறதெண்டா தமிழனுக்கு எப்பவும் பிரச்சனைதான். எங்கடை அப்பு , முட்காவின்ர ( முட்கா யார் எண்டு உங்களுக்கு தெரியாது தானே- அது எங்கட அம்மா சாட்சாத் செல்வராணியே தான்.) இன்ர சிட்டி ரெயினிலை செகண்ட கிளாஸ் வாரண்டிலை அதிஷ்டம் கிடைச்சா சிலிபிறேற்று சீட்டிலை போன காலம் ஒண்டு இருந்தது எனக்கும் சாடையா ஞாபகம். ஆனாப் பாருங்கோ எனக்கு நினைவில நிக்கிறதெல்லாம் பாஸ் எடுத்து கொழும்பு போறதுதான். அதுவும் 1990 -1995 காலப்பகுதியெண்டா அவயிற்றையும் 1996 இலிருந்து இப்பவரை இவையிற்றையும் பாஸ் எடுத்தாதான் கொழும்பு போகலாம். அவையிவை யாரெண்டு தெரியாத ஆக்கள் பேசாமல் மூடிவைச்சிட்டு நித்திரையை கொள்ளுங்கோ. எனக்கு விசர் வந்திடும். நாட்டு நிலை தெரியாத நீஙகள் எல்லாம் மனிசரே? சரிசரி. ஏதோ என்ர வயித்தெரிச்சலிலை நானும் “வள்சுள்” எண்ணுறன் எண்டுட்டு கோபிச்சு கொண்டு போயிடாதையுங்கோ. உங்களை விட்டா எனக்கு வேற யார் இருக்கினம்?







அது ஒருபெரிய கதை பாருங்கோ. நான் கடைசியா கொழும்பு வந்தது 1989 இல.அப்ப வந்தது ரெயினிலை. அப்ப வந்து முந்தி நான் படிச்ச மூர் றோட்டு நேசரி, அப்பாவோட வேலை செய்த குசும் அன்ரி இப்பிடி கொஞ்ச ஞாபகங்களை புதுப்பிச்சு போட்டு போனதுதான். குசும் அன்ரியை என்னெண்டு நினைவு வச்சிந்தாய் எண்டு கேளாதையுங்கோ. பருப்பு திண்டா வாறதுக்கும் அவவின்ர பெயருக்கும் கிட்டத்தட்ட கனெக்சன் ஒண்டு இருக்கிறமாதிரி ஒரு ஹலுசினேசன்தான்.

1996 இல காங்கேசன்துறையிலை இருந்து திருகோணமலைக்கு தமிழ் தினத்துக்கு கப்பலிலை ( ஓசியிலதான்) போனது ஒரு பயணம். அதுக்குப்பிறகு 2000 இலதான் யாழ்ப்பாணத்தால குடிபெயர்ந்தது.



சரி வந்த விசயத்தை விட்டிட்டு...
1998 இல ஏ எல் பாஸ் பண்ணினாலும் 2000 ம் ஆண்டுவரை சும்மா றோட்டிலை திரிஞ்சதுதான் வேலை. ஏனெண்டா கம்பஸ் 2000 ம் ஆண்டு ஓகஸ்டு 21 தான் துவங்கினது. அப்ப என்னத்துக்கு உந்த மூதேவி மார்ச்சிலையே வெளிக்கிட்டது எண்டு நீங்கள் கேட்கக்கூடாது. பாஸுக்கு நான் ஜனவரியிலேயே அப்ளை பண்ணிப்போட்டன். ஏதோ கடவுள் புண்ணியத்திலை மிக விரைவாக (??!!) மார்ச்சிலையே கிடைத்துவிட்டது. பாஸ் எடுத்தா ஒருமாதத்துக்குள்ள வெளிக்கிட்டிட வேணும். இல்லாட்டா பேந்து புதுப் பாஸ் எடுக்க வேணும். தவிர இங்கிலிசு கோஸ் ஏப்ரலிலை துவங்கும் எண்டு யாரோ சொன்னதால மார்சிலையே வெளிக்கிட்டாச்சு.

பாஸ் எடுக்கிறதெண்டா அதுக்கு போம் இருக்கு. அதை நிரப்பி விதானையாரிட்டை சைன் வாங்கி ( அது வாங்கேக்கை குடும்ப காட் கொண்டு போகவேணும்) பிறகு ஏ ஜீ ஏ யிட்டை சைன் வாங்கி பிறகு உடுவில் காம்பிலை குடுக்கவேணும். அவன் பேநது கொக்குவில் காம் காரணுக்கு அனுப்ப அவங்கள் கிளியர் பண்ணி திரும்பி அனுப்புவாங்கள். அதுக்கு பிறகு பேப்ரிலை பெயர்வரும். அந்தப் பெரிய லிஸ்டிலை என்ர பேரை தடவிப்பிடிச்சு ( எப்பவரும் எண்டு தெரியாததால ஒவ்வொருநாளும் பேப்பர் வாங்கிப் பார்க்கோணும்) பிறகு நாலாம் குறுக்குத்தெருவுக்கு போகவேணும். அங்கைதான் டோக்கன் எடுக்கிறது. டோக்கன் கிடைச்சா கிட்டத்தட்ட விசா கிடைச்ச மாதிரித்தான். பிறகு டோக்கனை கொண்டு கிளியரண்ஸ் எடுக்கோணும். அந்த கிளியரண்சை கொடுத்தா ஒரு டேட்டிலை டிக்கட் போட்டு தருவினம். கையோட காசையும் கொண்டு போக வேணும். டிக்கட் எடுத்தா பிறகு பிளைட் ஷுவர்தான். எண்டாலும் பேப்பரை பார்க்கவேணும் பிளைட் நிப்பாட்டி போட்டாங்களோ இல்லை ஓடுதோ எண்டு.

எம்பெருமானின் அளப்பெரும் கருணையாலும் நாங்கள் செய்த பூர்வ ஜென்ம புண்ணியத்தாலும் பிளைட் கான்சல் ஆகேல்லை. 18ம் திகதி பிளைட்.

18.03.2000
அப்ப ஓடின பிளைட் லயன் எயார் எண்டு நினைக்கிறன். சரியா ஞாபகம் இல்லை.
செகண்ட் பிளைட்.

காலை 6மணி.
நாலாம் குறுக்குத் தெரு.
தெருச் செக்கிங்.(இராணுவம்)
பொடி செக்கிங்.

சிவில் அலுவலகம் - நாலாம் குறுக்குத்தெரு யாழ்ப்பாணம்.
மீண்டும் செக்கிங்.( மிரிடரி பொலிஸ்)

பஸ்சுக்கு காத்திருப்பு.
பஸ் வருகை.
செக்கிங் ( விமானப்படை)

பஸ் ஏறி தெல்லிப்பளை பயணம். (அப்ப தெல்லிப்பளைதான் பொயிண்டு- கப்பல் எண்டா என்ன பிளைட் எண்டா என்ன)

பஸ் மாற்றி ஏற்றப்படல். (யாழ்ப்பாண பஸ் தெல்லிப்பளைக்கு அங்கால போகாது)
ஸ்கொட்டுக்காக காத்திருப்பு ( ஸ்கொட் என்பது பாதுகாப்புக்காக பஸ்ஸை சுற்றி வரும்வாகனங்கள்.)

பஸ் எல்லாம் வெளியே பார்க்க முடியாதவாறு கறுப்படிச்ச கண்ணாடி. ஜன்னல் திறக்க முடியாது. பஸ்ஸில் ஏ சியோ பானோ இல்லை.

காலை 9 மணி
பலாலியை அடைதல். (வாழ்க்கையில் முதன்முதல் பலாலியில் கால்வைத்த நாள்)

காத்திருத்தல் காத்திருத்தல் காத்திருத்தல்.

பகல் 2 மணி
செக்கிங் முடிந்து உள்ளே போதல்.

பசி பசி பசி
அம்மா கட்டித்தந்த புட்டுப் பாசலை நானும் அப்பாவுமாக வெட்டல்.
பேச்சுத் துணைக்கு நிசாந்தன்.
நிஷாந்தன் யாரெண்டு தெரியாதென்ன. அவன்தான் மட்ஸிலை டிஸரிறிக் பெஸ்ட்.( மாவட்டத்திலை முதலாம் பிள்ளை எண்டு தமிழிலை சொல்லடா என் நீங்கள் குளறுவது எனக்கும் கேட்குது)

மாலை 3 மணி.
பிளைட்டுக்கு ஆக்களை எடுத்தல்.

மாலை 3.30 மணி
பிளைட் வெளிக்கிடல்.

மாலை 4.30 மணி
கட்டுநாய்ககாவை அடைதல் ( அப்ப இரத்மலானையிலை இறக்கிறதில்லை)

மாலை 5.00 மணி
அழகான ஏ சி ரூரிஸ்ட் பஸ்ஸில் ஏற்றப்படல்.
( இவ்வளவு நேரமும் வெயிலிலை காய்ந்து வேர்த்து விறுவிறுத்த எங்கடை உடம்பின்ர வாசம் எங்களுக்கே தெரியதொடங்கியது.)
இந்த கட்டுநாயக்கா கொழும்பு பயணத்திற்கு பிறிம்பா 75 ரூபா வாங்கினது வேற கதை.
எண்டாலும் ஏசி சொகுசு பஸ்ஸில் முதல் அனுபவம். அதுவும் கண்ணாடி கறுப்பில்லை. வெளியே பார்க்கமுடியும்.

பஸ் கொழும்பின் நரகமான டிரபிக்கில் சிக்கிக்கொண்டது.

மாலை 7.30.00
கொழும்பு றீகல் தியேட்டர் வாசலிலை இறக்கிவிடப்படல்.கவனிக்க தியேட்டர் வாசல்.
( இது லேக் ஹவுஸ் முன்னே உள்ளது.)

மாலை 7.30.01
முச்சக்கர வண்டி சாரதிகளால் சூழப்படல்.

ஒரு ஓட்டோ காறனிடம் அப்பா சிங்களத்தில்..

இந்த இடத்துக்குபோக எவ்வளவு...

ம். ஐயா நீங்கள் இப்ப நிக்கிறது கொழும்பு 02 (அதெண்டா உண்மைதான்) இது கொழும்பு 13 ( செக்கட்டித்தெரு) ஒரு 500 ரூபா தாங்கோ.

வேண்டாம். நாங்கள் நடந்தே போறம்.

ம். 25 நிமிடங்கள் நடந்து செக்கடித்தெருவுக்கு வந்துவிட்டோம்!!!!!

1995 இல 10 மைல் நடந்தே இடம்பெயர்ந்த எங்களிடமா?

ஹாஹாஹா

கொழும்பு பொல்லாத ஊர்தான் என்ன??????!!!!

18.03.2009

ஞாயிறு, 15 மார்ச், 2009

நகம் கழட்டின கதை

வேலை செய்யும்போது ஒவ்வொருவருக்கும் கட்டாயம் நிறைய அனுபவங்கள் வரும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொருமாதிரியானவை. அப்போது நான் காசல் வீதி மகளிர் மருத்துவ மனையில் வேலை செய்துகொண்டிருந்தேன். உள்ளக மருத்துவ பயிற்சிக் காலம் (இன்ரேண்சிப்) என்றது இளமருத்துவர்களைப் பொறுத்தவரை சக்கை பிழிந்து வேலை செய்ய வேண்டிய காலம். அதுவும் காசல் வீதியில் என்றா எள் என்ன முன்னம் எண்ணையா நின்று வேலை செய்ய வேணும். எல்லா இடமும் அப்பிடித்தானே அதிலை என்ன காசல் ஸ்பெசல் எண்டு நீங்கள் கேட்கலாம். 5 எஸ் என்கிற முறையோடு நல்ல ஒரு ஸ்ராண்டட்டில் இயங்கின ஒரு வைத்தியசாலை காசல். பொறுங்கோ நான் சொல்ல வந்த விசயத்தை மறந்துபோட்டு வேற ஏதோ உளறுறன்.



வோட் 5 மற்றும் 6 இல் வேலை செய்தவர்களுக்கு டொக்ரர் தயானந்தா என்றா தெரியாமா இருக்காது. ஒரு சிடுமூஞ்சி என்று பெயர் இருந்தாலும் ஆள் பயங்கர கெட்டிக்காரன. கலியாணம் கட்டாம இருக்கும் அவருக்கு எங்கடை நேசுகள் பல கதைகள் சொன்னாலும் நாங்கள் அதை பொருட்படத்திறதில்லை. அது அவரவர் சொந்த விசயம் தானே. கிட்டத்தட்ட தூசணத்தில பேசக்கூடிய ஒரு கோபக்காரன் என்றாலும் அப்ப கொன்சல்டண்ட் ஆக இருந்த டொக்ரர் வர்ணகுலசூரிய உட்பட பலரும் பெருமதிப்பு வைத்திருந்தது தயானந்தாவிலதான். அந்தாளின்ர ஸ்கானிங் எல்லாம் அந்தளவு திறம். இப்பிடி இருந்ததால அவர் வந்தாலே ஒரு பயபக்தியுடன் கூடிய அமைதி அந்த இடத்திலை இருக்கும். ஆனாலும் கொஞ்சம் பஞ்சி பிடித்த மனிசன். குறிப்பிட்ட நேரத்தை விட மேலதிகமாக வேலை செய்ய கொஞசம் பஞ்சிப்படும்.







அண்டைக்கும் அப்பிடித்தான். நாங்கள் தியேட்டருக்குள்ள. தியேட்டர் என்றால் அது ஒப்பிரேசன் தியேட்டர். காசல் வீதியில மருதானை சினி சிட்டி மாதிரி மூன்று தியேட்டர் ஒரே நேரத்தில ஓடும். அதால தான் அதை தியேட்டர் கொம்பிளக்ஸ் எண்ணுறது. தியேட்டர் ஏயும் பீயு்ம் பக்கத்து பக்கத்தில. இரண்டிலும் எங்கடை வோட் படம்தான் ஓடிக்கொண்டிருந்தது. ஏ பக்கம் சீசர். பீ பக்கம் மற்ற ஒப்பிறேசனுகள். ஏ பக்கம் டொக்டர் தயானந்தாவும் உதவிக்கு நானும். பீ பக்கம் பாபுவும் சியாமளன் அண்ணையும்.

எங்கடை பக்கம் அண்டைக்கு வேலை வெள்ளண முடிஞ்சுது. சியாமளன் அண்ணை ஒன்றிரண்டு சின்னக்கேஸ் இங்கால போட்டு செய்யலாமே எனக் கேட்க.... ஓம் செய்யலாம்தான். ஆனா தயானந்தாவிட்ட ஆர் கேட்கிறது எண்டது பிரச்சனை. நான் எதுக்கும் துணிஞச கட்டை எண்டதால போய் கேட்டன். அந்தாள் மணிக்கூட்டை பார்த்துது. மத்தியானம் 12 மணிக்கு இன்னும் 10 நிமிடங்கள் தான் இருந்தது. பசியாக்கும். மேலையும் கீழையும் யோசித்துவிட்டு மாட்டன் எண்டு தலையாட்டி விட்டது. 

12 மணி விசிட்டிங் அவர். பேசண்டுகளை பார்க்க விசிட்டர்ஸ் வரும் நேரம். தியேட்டர் வாசலில் பெரிய சத்தம்.

பார்த்தால் வந்த விசிட்டர் ஒருவரின் கால் பெருவிரல் நகம் கழண்டு இரத்தம் ஒழுகிபக் கொண்டிருந்தது. அது தியேட்டர் நேர்ஸின் உறவினரோ தெரியாது - ஒருக்கால் மருந்து கட்டுவம் எண்டு தியேட்டர் வாசலுக்கு வந்திருந்தா. சும்மா மருந்து கட்டப்போன் நேர்ஸ் பார்த்துவிட்டு பயந்து டொக்ரர் இது நகம் கழட்ட வேண்டிய கேஸ்போல இருக்கு ஒருக்கா பாருங்கோ எண்டது. நேர்ஸ் கேட்டு டொக்ரர் மாட்டன் எண்ணுறதா. பார்த்தால் நகம் அரைவாசி பிய்ந்து தொங்கிக்கொண்டிருந்தது. நடந்தது என்னவெண்டால் அந்தப் பெண்மணியின் கணவர் வோட்டுக்கு போகும் அவசரத்தில் உள்ளே போக, இன்னமும் 12 மணியாகவில்லை சற்று பொறுங்கள் எண்டு வாயில் காவலன் தடுக்க, பின்னாலே ஒரு அடியெடுத்து சைத்தவர் வைத்தத தனது மனைவியின் பெரு விரலில்.

என்னதான் 5000 ரூபாவுக்கு வாங்கிய நல்ல சூ வாக இருந்தாலும் காலை மிதித்தால் நகம் பிய்யத்தானே செய்யும். பிய்ந்து விட்டது. அவர்கள் வந்த வாட்டு 9 தியேட்டருக்கு அருகில் இருந்ததால் காயத்துக்கு மருந்து போட உள்ளே வந்த பெண்மணியின் நகத்தை பிய்க்கும் பொறுப்பு மன்னிக்கவும் நகத்தை லோக்கல் அனஸ்தீசியாவில் கழட்டும் பொறுப்பு என் தலையில். மாட்டன் என்று சொல்லியிருக்கலாம். பசிவேறு. ஆனாலும் சொல்லவில்லை.

டிரெசிங் செட் தயாராகி வந்தது. அந்த நேரம் பார்த்து தியேட்டர் உடுப்பை மாற்றிவிட்டு வந்த தயானந்தாவின் பார்வையும் இதில் விழுந்தது. தான் கழட்டி தருவதாக சொல்லி வேலையை துவங்க எனது தலைப் பாரம் குறைந்தது. ஆனால் தியேட்ர் நேர்ஸ்மாருக்கு கலக்கம் கூடிவிட்டுது. ஏனென்றால் ஏதாவது சின்னப் பிழை விட்டாலும் சப்பல் பேச்சு பேசும் மனிசன். எல்லாம் ரிப்டொப்பாக வேலை நடந்தது. விறைப்பு ஊசிமருந்து ஏற்றிவிட்டு நகம் பிடுங்கவேண்டும். ஊசியை கண்டதும் வெலவெலத்து அந்தப் பெண்மணி என் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டார். ஊசியேற்றும்போதோ சொல்லவே வேண்டாம். ஒரு பெரிய குரலில் குழறி என்னை ஒரு தூண் என நினைத்து கட்டிப் பிடித்துக் கொண்டார். அட அந்த நேரம் பார்த்தா மற்ற தியேட்டர் வேலை முடிஞசு சியாமளன் அண்ணை வரவேணும்?. பிடித்தது சனி!!!

எட நான் ஒரு சின்ன கேஸாவது செய்து தாங்கோடா என கேட்க மாட்டன் எண்டு போட்டு ஆரோ ஒரு வடிவான பெட்டைக்கு ( அட அதுக்கு பிறகுதான் பார்த்தன் - உம் உண்மையிலை வடிவுதான்.) நகம் புடுங்கிக் கொண்டிருக்கிறாங்கள்!!!

நகம் பிடுங்கி முடிந்து மருந்து போட்டு அந்தப் பெண்மணி வெளியே போயும் ஆயிற்று. ஆனா சின்ன ஒப்பிறேசனுக்கு உதவாமல் வெளியில வந்து நகம் பிடுங்கின கதை சிறந்த கதை வசனம் மற்றும் டைரக்க்ஷனில் உருவாகி விட்டது.

பேந்தென்ன வந்த போன நேர்ஸ் எல்லாம் டொக்டர் நகம் புடுங்குவமே என கேட்டு கேட்டு (உம் வேற யாரை கேட்கமுடியும் டொக்ரர் தயானந்தாவையா?) அறுத்து தள்ளிவிட்டார்கள்.

தியேட்டர் முழுதிலும் இவ்வாறு எனது படமே ஓட்டப் பட்டுக்கொண்டிருந்ததால் நான் ஒரு கிழமை தியேட்டர் பக்கம் போகவே இல்லை!!!!

2007