ஞாயிறு, 15 மார்ச், 2009

நகம் கழட்டின கதை

வேலை செய்யும்போது ஒவ்வொருவருக்கும் கட்டாயம் நிறைய அனுபவங்கள் வரும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொருமாதிரியானவை. அப்போது நான் காசல் வீதி மகளிர் மருத்துவ மனையில் வேலை செய்துகொண்டிருந்தேன். உள்ளக மருத்துவ பயிற்சிக் காலம் (இன்ரேண்சிப்) என்றது இளமருத்துவர்களைப் பொறுத்தவரை சக்கை பிழிந்து வேலை செய்ய வேண்டிய காலம். அதுவும் காசல் வீதியில் என்றா எள் என்ன முன்னம் எண்ணையா நின்று வேலை செய்ய வேணும். எல்லா இடமும் அப்பிடித்தானே அதிலை என்ன காசல் ஸ்பெசல் எண்டு நீங்கள் கேட்கலாம். 5 எஸ் என்கிற முறையோடு நல்ல ஒரு ஸ்ராண்டட்டில் இயங்கின ஒரு வைத்தியசாலை காசல். பொறுங்கோ நான் சொல்ல வந்த விசயத்தை மறந்துபோட்டு வேற ஏதோ உளறுறன்.



வோட் 5 மற்றும் 6 இல் வேலை செய்தவர்களுக்கு டொக்ரர் தயானந்தா என்றா தெரியாமா இருக்காது. ஒரு சிடுமூஞ்சி என்று பெயர் இருந்தாலும் ஆள் பயங்கர கெட்டிக்காரன. கலியாணம் கட்டாம இருக்கும் அவருக்கு எங்கடை நேசுகள் பல கதைகள் சொன்னாலும் நாங்கள் அதை பொருட்படத்திறதில்லை. அது அவரவர் சொந்த விசயம் தானே. கிட்டத்தட்ட தூசணத்தில பேசக்கூடிய ஒரு கோபக்காரன் என்றாலும் அப்ப கொன்சல்டண்ட் ஆக இருந்த டொக்ரர் வர்ணகுலசூரிய உட்பட பலரும் பெருமதிப்பு வைத்திருந்தது தயானந்தாவிலதான். அந்தாளின்ர ஸ்கானிங் எல்லாம் அந்தளவு திறம். இப்பிடி இருந்ததால அவர் வந்தாலே ஒரு பயபக்தியுடன் கூடிய அமைதி அந்த இடத்திலை இருக்கும். ஆனாலும் கொஞ்சம் பஞ்சி பிடித்த மனிசன். குறிப்பிட்ட நேரத்தை விட மேலதிகமாக வேலை செய்ய கொஞசம் பஞ்சிப்படும்.







அண்டைக்கும் அப்பிடித்தான். நாங்கள் தியேட்டருக்குள்ள. தியேட்டர் என்றால் அது ஒப்பிரேசன் தியேட்டர். காசல் வீதியில மருதானை சினி சிட்டி மாதிரி மூன்று தியேட்டர் ஒரே நேரத்தில ஓடும். அதால தான் அதை தியேட்டர் கொம்பிளக்ஸ் எண்ணுறது. தியேட்டர் ஏயும் பீயு்ம் பக்கத்து பக்கத்தில. இரண்டிலும் எங்கடை வோட் படம்தான் ஓடிக்கொண்டிருந்தது. ஏ பக்கம் சீசர். பீ பக்கம் மற்ற ஒப்பிறேசனுகள். ஏ பக்கம் டொக்டர் தயானந்தாவும் உதவிக்கு நானும். பீ பக்கம் பாபுவும் சியாமளன் அண்ணையும்.

எங்கடை பக்கம் அண்டைக்கு வேலை வெள்ளண முடிஞ்சுது. சியாமளன் அண்ணை ஒன்றிரண்டு சின்னக்கேஸ் இங்கால போட்டு செய்யலாமே எனக் கேட்க.... ஓம் செய்யலாம்தான். ஆனா தயானந்தாவிட்ட ஆர் கேட்கிறது எண்டது பிரச்சனை. நான் எதுக்கும் துணிஞச கட்டை எண்டதால போய் கேட்டன். அந்தாள் மணிக்கூட்டை பார்த்துது. மத்தியானம் 12 மணிக்கு இன்னும் 10 நிமிடங்கள் தான் இருந்தது. பசியாக்கும். மேலையும் கீழையும் யோசித்துவிட்டு மாட்டன் எண்டு தலையாட்டி விட்டது. 

12 மணி விசிட்டிங் அவர். பேசண்டுகளை பார்க்க விசிட்டர்ஸ் வரும் நேரம். தியேட்டர் வாசலில் பெரிய சத்தம்.

பார்த்தால் வந்த விசிட்டர் ஒருவரின் கால் பெருவிரல் நகம் கழண்டு இரத்தம் ஒழுகிபக் கொண்டிருந்தது. அது தியேட்டர் நேர்ஸின் உறவினரோ தெரியாது - ஒருக்கால் மருந்து கட்டுவம் எண்டு தியேட்டர் வாசலுக்கு வந்திருந்தா. சும்மா மருந்து கட்டப்போன் நேர்ஸ் பார்த்துவிட்டு பயந்து டொக்ரர் இது நகம் கழட்ட வேண்டிய கேஸ்போல இருக்கு ஒருக்கா பாருங்கோ எண்டது. நேர்ஸ் கேட்டு டொக்ரர் மாட்டன் எண்ணுறதா. பார்த்தால் நகம் அரைவாசி பிய்ந்து தொங்கிக்கொண்டிருந்தது. நடந்தது என்னவெண்டால் அந்தப் பெண்மணியின் கணவர் வோட்டுக்கு போகும் அவசரத்தில் உள்ளே போக, இன்னமும் 12 மணியாகவில்லை சற்று பொறுங்கள் எண்டு வாயில் காவலன் தடுக்க, பின்னாலே ஒரு அடியெடுத்து சைத்தவர் வைத்தத தனது மனைவியின் பெரு விரலில்.

என்னதான் 5000 ரூபாவுக்கு வாங்கிய நல்ல சூ வாக இருந்தாலும் காலை மிதித்தால் நகம் பிய்யத்தானே செய்யும். பிய்ந்து விட்டது. அவர்கள் வந்த வாட்டு 9 தியேட்டருக்கு அருகில் இருந்ததால் காயத்துக்கு மருந்து போட உள்ளே வந்த பெண்மணியின் நகத்தை பிய்க்கும் பொறுப்பு மன்னிக்கவும் நகத்தை லோக்கல் அனஸ்தீசியாவில் கழட்டும் பொறுப்பு என் தலையில். மாட்டன் என்று சொல்லியிருக்கலாம். பசிவேறு. ஆனாலும் சொல்லவில்லை.

டிரெசிங் செட் தயாராகி வந்தது. அந்த நேரம் பார்த்து தியேட்டர் உடுப்பை மாற்றிவிட்டு வந்த தயானந்தாவின் பார்வையும் இதில் விழுந்தது. தான் கழட்டி தருவதாக சொல்லி வேலையை துவங்க எனது தலைப் பாரம் குறைந்தது. ஆனால் தியேட்ர் நேர்ஸ்மாருக்கு கலக்கம் கூடிவிட்டுது. ஏனென்றால் ஏதாவது சின்னப் பிழை விட்டாலும் சப்பல் பேச்சு பேசும் மனிசன். எல்லாம் ரிப்டொப்பாக வேலை நடந்தது. விறைப்பு ஊசிமருந்து ஏற்றிவிட்டு நகம் பிடுங்கவேண்டும். ஊசியை கண்டதும் வெலவெலத்து அந்தப் பெண்மணி என் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டார். ஊசியேற்றும்போதோ சொல்லவே வேண்டாம். ஒரு பெரிய குரலில் குழறி என்னை ஒரு தூண் என நினைத்து கட்டிப் பிடித்துக் கொண்டார். அட அந்த நேரம் பார்த்தா மற்ற தியேட்டர் வேலை முடிஞசு சியாமளன் அண்ணை வரவேணும்?. பிடித்தது சனி!!!

எட நான் ஒரு சின்ன கேஸாவது செய்து தாங்கோடா என கேட்க மாட்டன் எண்டு போட்டு ஆரோ ஒரு வடிவான பெட்டைக்கு ( அட அதுக்கு பிறகுதான் பார்த்தன் - உம் உண்மையிலை வடிவுதான்.) நகம் புடுங்கிக் கொண்டிருக்கிறாங்கள்!!!

நகம் பிடுங்கி முடிந்து மருந்து போட்டு அந்தப் பெண்மணி வெளியே போயும் ஆயிற்று. ஆனா சின்ன ஒப்பிறேசனுக்கு உதவாமல் வெளியில வந்து நகம் பிடுங்கின கதை சிறந்த கதை வசனம் மற்றும் டைரக்க்ஷனில் உருவாகி விட்டது.

பேந்தென்ன வந்த போன நேர்ஸ் எல்லாம் டொக்டர் நகம் புடுங்குவமே என கேட்டு கேட்டு (உம் வேற யாரை கேட்கமுடியும் டொக்ரர் தயானந்தாவையா?) அறுத்து தள்ளிவிட்டார்கள்.

தியேட்டர் முழுதிலும் இவ்வாறு எனது படமே ஓட்டப் பட்டுக்கொண்டிருந்ததால் நான் ஒரு கிழமை தியேட்டர் பக்கம் போகவே இல்லை!!!!

2007






2 கருத்துகள்:

கிருஷ்ணா சொன்னது…

எண்டாலும் நீ செய்தது சரியி்ல்லை. மற்றவைக்கும் ஒரு சான்ஸ் வாங்கிக் குடுத்திருக்க வேணும்...

கிருஷ்ணபிள்ளை குருபரன் சொன்னது…

என்ன சான்ஸ்.
போங்கப்பா.