சனி, 23 ஜனவரி, 2010

கவலையில் பங்கெடுத்தல்

தரித்திரம். மூதேவி...( இன்னும் இரண்டு கெட்ட வார்த்தைகளுடன்) சனியன் நீ விழுந்து சாகிறதுக்கு என்ரை வாகனமே அம்பிட்டது? இப்படி பேசியிருக்கலாம். ஆனால் அதற்கான காலம் அவகாசம் இருக்கவில்லை. அப்பிடிப் பேசுவது சரியோ எண்டும் தெரியவில்லை. ஆனால் எல்லாரும் அப்பிடி பேசுறவைதானே.


அதுக்கும் என்ன பிரச்சனையோ தெரியாது. வீட்டை அம்மா பேசியிருக்கலாம். தண்டச்சோறு என்று தகப்பன் திட்டியிருக்கலாம். அண்ணன்காரன் அல்லது தம்பிக் காரன் எதையாவது புடுங்கிக் கொண்டு போயிருக்கலாம். அக்காக் காறி அல்லது தங்கச்சி எதுக்காவது திட்டியிருக்கலாம். அல்லது தங்கச்சியின் பிரண்ட்ஸ்க்கு கடிதம் கொடுத்து பிடிபட்டு வீட்டிலை தலை காட்டேலாம றோட்டிலை நிண்டிருக்கலாம்.

ஆக்களுக்கு முன்னாலை கடி வாங்கி மானம் போயிருக்கலாம். அல்லது இவர்ரை அது சின்னன் எண்டு யாராவது இங்கிதம் தெரியாதது ஆட்களுக்கு முன்னாலை போட்டுடைத்து இருக்கலாம்.

அல்லாட்டி பக்கத்து வீட்டுப் பெட்டையை சைட் அடிக்க இரவுதான் நல்ல நேரம் எண்டு நினைச்சிருக்கலாம். அல்லது துவக்கோடை மதிலுக்கை நிண்ட ஆமிக்காரனை கண்டு பயந்து ஓடிவந்திருக்கலாம்.

வீட்டு யோசனையிலை நிண்டிருக்கலாம். இரவு சாப்பாடு கிடைக்காம பசி மயக்கத்திலை சாப்பாடு தேடி ஓடியிருக்கலாம். இல்லாட்டா பக்கத்துவீட்டிலை நிண்டவவின்ர சிக்னலை கண்டிட்டு அவசரத்திரல பாஞ்சிருக்கலாம்.





என்னவோ தெரியாது திடீரெண்டு என்ரை மோட்ட சைக்கிளுக்கிள்ளை அது பாய்ந்திட்டுது. அது தற்கொலை முயற்சி எண்டும் சொல்லமாட்டன். தப்பி வந்து விழுந்தது எண்டும் சொல்ல மாட்டன். அது தற்கொலைத் தாக்குதலாகவும் இருக்கமுடியாது. ஏனெண்டா அதுக்கும் என்க்கும் முன்விரோதம் இல்லை. அது விரும்பி சாப்பிடும் சாப்பாடு களை நான் விரும்பிச் சாப்பிடுவதில்லை. எந்த விதத்திலும் அதின்ர வழியிலை நானோ என்ரை வழியிலை அது வோ இதுக்கு முந்தி குறுக்கிட்டதில்லை.

இரவு நேரம். எனது வாகனத்தின் விள்க்கு வெளிச்சம் பண்களில் பட்டதில் கண்கள் மின்னியது. பூனைக் கண் பூனைக் கண் எண்டு சொல்லிக்கொண்டு றோட்டு முழுக்க பதிச்சு வைச்ச கல்லு மாதிரியே அதுவும் மினுங்கியது. இனிப் பூனைக்கண் எண்டு சொல்லுறதை மாத்தவேணும்.

மினுங்கின கண்ணிலை தெரிந்தது பயமா? வெறியா? அப்பாவித்தனமா எனக்குத் தெரியவில்லை.

நாய் சில்லுக்குள் குதித்துவிட்டது. நான் இறுக்கி அடித்த ஹோண் சத்தம் சங்கூதினமாதிரி ஊரை எழுப்பிவிட்டது.

வாள் எண்டு அது கத்தின சத்ததிலை நான் கத்தவேண்டிய ஐயோ எண்டது எனக்கு மறந்துபோச்சு. சில கணப்போழுதுகள் நிலத்தை முகம் முத்தமிடமுன் இழுபடடுச் சென்ற சில மீட்டர் தூரம் பல கிலோ மீட்டர்கள் மாதிரி தோன்றியது.

அண்ணை வாங்கோ தூக்குங்கோ...சொன்னபடி நிறையபேர் ஒடி வந்தனர். அட இரவு 9 மணிக்கும் எங்கடை சனங்கள் அலேட்டாத் தான் இருக்குது.

மொக்கத உணே? வேலிக்கால் நிண்ட ஆமிக்காரனும் ஓடிவந்தான்.

என்னைத் தூக்காதையுங்கோடா மோட்ட சைக்கிளை நிமுத்துங்கோ! பெற்றோல் வேற வெளியிலை ஓடப்போது...பின்னை பெற்றோல் விக்கிற விலையிலை.

அண்ணை சைக்கிளை நிமித்திப்போட்டம் நீங்கள் எழும்புங்கோ.

எங்கையப்பன் அந்த நாய்? எழும்பியவுடன் கேட்டேன்.

அந்தச் சனியன் ஓடியிட்டுது.

“பாவம் அதுக்கும் காயம் கீயமோ தெரியாது. ..”

பெடியனுக்கு அடிச்ச அடியிலை மூளை கலங்கியிட்டுது. ஆசுபத்திரிக்கு ஏத்துங்கோடா.... நின்ற வயசானதொண்டு சொன்னது.

இல்லையில்லை. சிராய்ப்பு காயந்தான். நான் வாறன்.

நாய்க்கு ஏதும் காயமோ?

நீங்கள் சொல்லுங்கோ எனக்கு விசர் பிடிச்சிட்டுதே?