சனி, 13 ஜூன், 2009

சைவக்கடை

பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் எண்டு சொன்னதாலைதான் பசி வரமுன்னம் கிள்ளுற வயிற்றை கவனிக்க நான் முன்னுரிமை குடுக்கிறது. சாப்பாடு எண்டது கொழும்பிலை லேசுப்பட்ட விசயமில்லை. கொழும்பிலை மட்டுமில்லை எங்கையும் அது அப்பிடித்தான். எண்டாலும் என்னைப்போல தாவர பட்சணியளுக்கு சுத்த சைவக்கடையை தேடிப்பிடிக்கிறது இப்ப வேணுமானால் சுகமாக இருக்கலாம். ஏனெண்டா சந்திக்கு சந்தி சைவக்கடை இருக்கு. ஆனா நான் வந்த 2000 ஆண்டிலை உந்தளவுக்கு சைவக்கடையள் இருக்கேல்லை எண்டது உண்மை. அதைவிட திக்கும் தெரியாம பாசையும் தெரியாம இருந்த என்க்கு பக்கத்து றோட்டிலை இருந்த கடையை கண்டுபிடிக்கவேபத்துநாளாய்ப் போச்சு.

அப்ப இடியப்பம் ஒண்டு ஒரு ரூபா ஐம்பது சதம். இடியப்பம் எண்டாலும் அது ஆமான இடியப்பம்தான். ஐந்து இடியப்பந் திண்டாலே வயிறு நிரம்பிவிடும். ஆனா பாருங்கோ வரவர எல்லாம் விலையேறுறதுதானே. இப்ப இடியப்பம் ஒண்டு ஆறு ரூபா. விலையேறுறது மட்டுமல்ல எங்கடை சனம் மாதிரி அதுவின்ர சைசும் மெலிஞ்சுகொண்டே போகுது. இப்பிடித்தான் பாருங்கோ ஒருநாள் ஐஞ்சு இடியப்பத்துக்கு ஓடர் பண்ணி விட்டு குந்திக்கொண்டு இருக்க இடியப்பம் வந்து சேர்ந்துது. ஏதோ ஒரு சந்தேகத்திலை எண்ணிப் பார்த்தா நாலு இடியப்பந்தான் இருக்குது. வந்ததே கோபம். இடியப்பம் கொண்டு வந்து வைச்சவனுக்கு சொன்னன். இருந்கோ எங்கை பார்ப்பம் எண்டிட்டு அந்தாள் என்ன மாணம் பண்ணிச்சோ தெரியாது ஒரு இடியப்பத்தை பிடிச்சு உதற அது இரண்டு இடியப்பமானது. இப்ப சரியே எண்டு கேட்டிட்டு அந்தாள் போட்டுது. என்க்கெண்டா பணமா போச்சு. நல்லவேளை அந்த நாலு இடியப்பத்தையும் உந்தாள் உதறி அந்தநாலும் எட்டு இடியப்பமாய் குட்டிபோட்டிட்டுது எண்டால்....
பொக்கட்டிலை வேற காசில்லை. பேந்து தேத்தண்ணியை குடிக்காம தியாகம் செய்துதான் பில் கட்ட வேணும். எங்களுக்கு கொழுப்பொ கொலஸ்ரோலோ சேர்ந்து போடக்கூடாதெண்டு சாப்பாட்டு கடைக்காரருக்கு எவ்வளவு அக்கறை பாருங்கோ. இல்லாட்டா மெலிஞ்ச ஸ்லிம்மான இடியப்பமெல்லாம் எங்களுக்கு தருவினமே?

சிக்கனத்துக்கு பெயர்போனது சைவக்கடையள்தான். முதல்நாள் சோறு அடுத்தநாள் தோசையாகவும் முதல்நாள் வடை அடுத்தநாள் சாம்பாறாகவும் வாற அவதாரங்கள் கடவுள் கூட எடுத்திருக் மாட்டார். இப்பித்தான் ஒருநாள் இட்டலி கேட்க ஒரு வெண்பொங்கல் மாதிரி ஒண்டை கொண்டு வந்து தந்திட்டினம். என்னப்பா இது எண்டு  கேட்டதற்கு அது அரிசி கொஞ்சம் அரைபடவில்லை எண்டு பதில் வந்தது.



என்னோட வெளியிலை சாப்பிட வாறதுக்கு என்ர பிரண்ஸ்க்கு கூட அவ்வளவு விருப்பமில்லை. ஏதாவது காரஞ்சாரமாய் மச்சம் சாப்பிடாமல் எப்ப பார்தாலும் சைவம் சைவம் எண்டு சாகிற என்னை பார்த்து அவங்களுக்கு எரிச்சடீலா தெரியாது.  இதுக்குத்தான் ஒரு நாள் , “வாங்கோடா சாப்பிடுவம்” எண்டு கூட்டிக்கொண்டுபோய் ஒரு சில்லி பரோட்டாவை வாங்கி ( போடேக்கையே நல்லா மிளகு போடச்சொல்லிப்போட்டு) கொடுத்தது தான் ... அண்டையிலை இருந்து ஒருத்தரும் என்னட்டை காரஞ்சாரமாய் சாப்பிட கேட்டதே இல்லை. இதிலையும் வந்து மாட்டுப்பட்ட இப்பாவி ஒருத்தன், சாப்பிடேக்கை தொண்டை எரிந்தாகவும் பிறகு இரவு வயிறு எரிந்ததாகவும் அடுத்தநாள் வெளிவாசல் பற்றி எரிந்ததாகவும் முறைப்பட்டுக் கொண்டான்.



இப்பிடித்தான் பைனல் எக்சாம் அண்டைக்கு சைக்கிளிலிலை ஓடிப்போய் மருதானையிலை சாப்பிட்டிவிட்டு பின்னேரம் வேர்த்து விறுவிறுக்க வந்த என்னைப் பார்த்து எல்லா எக்சாமினரும் பாவம் பெடி எக்ஸாமை கண்டு வேர்த்து விறுவிறுக்குதாக்கும் எண்டு முணுமுணுத்தது என்ர காதுவரை கேட்டது.

எங்கடை வேலைசெய்யிற இடத்துக்கு சிலவேளை கேக் வரும். முட்டை போட்டிருக்கும் எண்டதாலை நான் சாப்பிடுறதில்லை. ஆனா என்ர பேரிலை கேக்கின்ர அரைவாசி முடிஞ்சிடும். எப்பிடி எண்டு கேக்கிறியளோ?! 
அவற்றை துண்டை நான் எடுக்கிறன் எண்டு எல்லாரும் என்ர எக்கவுண்டிலை சாப்பிட்டா அது முடியாம என்ன செய்யும்.!!

நான் சந்தோசமாய் போறதெண்டா தமிழ்க் கல்யாணவீடுகள் தான் பாருங்கோ. சுத்த சைவமாய் சாப்பாடு போட அதுதான் நல்ல இடம். ஆனா பாருங்கோ வந்த கனபேர் திட்டித் திட்டித் தான் சாப்பிடுறவங்கள். இண்டைக்கும் சைவம் சாப்பிட வேண்டி வந்திட்டுது எண்டு.

கேகாலைக்கு வேலைக்கு வரேக்கை ஒரு பயம் இருந்தது. அங்கை சைவக்கடை இருக்குமோ எண்டு. பஸ்ஸாலை இறங்கி தலை நிமிர்ந்து பார்த்தா தட்டுப்பட்டது சைவக்கடை போட்தான்.

தமிழன் எங்கை இருக்கிறானோ அங்கை சைவக் கடையும் இருக்கும்!!!