வெள்ளி, 15 ஜூன், 2012

ஏ டபிள்யு டபிள்யு டபிள்யு த? மே டபிள்யு டபிள்யு டபிள்யு த?

கிளைமாக்ஸ் காட்சி ரிவியிலை போகும்போது கரண்ட் நிண்டா வருமே ஒரு விசர் அதுமாதிரித்தான் நெற் பார்க்கேக்கை நெற் அவுட்டானால் வரும் விசரும்! வீட்டை நெற் இருக்கு எண்ட தைரியத்திலை ஒன்லைன் சேவிஸ் ஒன்லைன் பாங்கிங் எல்லாத்துக்கும் பதிஞ்சு போட்டு அரைகுறை கனெக்சனிலை நீங்களும் அல்லாடியிருப்பியள்! வெளிநாட்டிலை இருந்து வந்தவன் சொன்னான் “மச்சான் 18 mbs ஸ்பீட் இன்ரனெட்டை அடிப்படைத் தேவையளுக்கை ஒண்டாக்கப்போறாங்கள் எண்டு! நான் சின்ன வகுப்பு படிக்கேக்கை உணவு உடை உறையுள் இது மூண்டுந்தான் அடிப்படைத்தேவை! இப்ப வரவர இவங்கள் எல்லாத்தையும் கூட்டிப்போட்டாங்கள்!

2000 ஆம் ஆண்டு ராமின்ரை வீட்டைதான் முதன் முதலிலை கண்டனான். மொடம் போட்டு டெலிபோன் லைனிலை கொழுவி அது கீச் டுர் எண்டு சத்தம்போட்டு கனெக்சன் கொழுவி! நாங்கள் இன்ரநெற் கனெக்சனிலை இருக்கேக்கை வேறையாரும் டெலிபோனை தூக்கக் கூடாது! தூக்கினால் கட்!

அப்ப ஜி மெயில் எல்லாம் இல்லை! ஜி மெயிலே இல்லை எண்ணுறன் பேந்து யு ரியுப் எண்ணுறியள்!!! எனக்கு விசர் வரப்போகுது!

ஒரு மெயில் திறந்து பார்க்கவே 5 நிமிசத்துக்கு மேலையாயிடும்! பீக் அவரிலை எண்டா பேந்து டெலிபோன் காசும் இன்ர நெற் காசும் சேர்ந்து.... அப்பாடி இன்ரநெற் வைச்சிருக்க பணக்காறராலைதான் ஏலும்!

பேந்து ஏடிஎஸ்எல் எண்டாங்கள்! அதுக்கும் டெலிபோன் வேணுமே! கொழும்பிலை குச்சுக்கை அட்ரசே இல்லாத எங்களுக்கு ஆர் கனெக்சன் தாறது!!!!!!

பேந்து ஒருமாதிரி சிம் போட்டு டொங்கிளிலை பார்க்கிற காலம் வந்தது! வலு ஸ்பீட் எண்டாலும் காசு தண்ணியா கரைஞ்சு போடும்! அதைவிட யாழ்ப்பாணத்திலை ஜி எஸ் எம் சிக்னலே இல்லாமை எங்கடை வீட்டை மிஸ்ட் கோல் அலேட் அனுப்பிற எங்கடை வீட்டை மொபைல் புரோட்பாண்ட் வேலைசெய்யும் எண்டு நினைக்கிறது பைத்தியக்காரத்தனம்! ஆனா சிக்னல் இருந்தா அதைப்போலை நல்ல சாமான் வேறை ஒண்டுமில்லை!

இப்பிடி இருக்கேக்கைதான் அந்த விளம்பரம் போனது! வெள்ளைச் சட்டை போட்ட பெடியள் சேந்து WWW எழுத்தை எழுத பாடுபடுற மாதிரி! மழைக்கும் வெயிலுக்கும் நில வெடிப்புக்கையும் அவையள் படூற பாடு! ருவென்ரி ருவென்ரி மட்சுக்கு இடையிலை அலுப்படிக்கிறமாதிரி உந்த அட்வடிஸ்மெண்ட் வந்தாலும் அதையும் பார்க்கிறதுதான்! இவ்வளவு பிள்ளையள் சேர்ந்து செய்ததுக்கு ஒரு மதிப்பு குடுக்கோணும் பாருங்கோ!

நானும் புரோட்பாண்ட் அப்பிளை பண்ணினன். சும்மா சொல்லக் கூடாது ஸ்பீட் ஸ்பீட்தான்! ஆனா டொங்கிளை மாதிரி கரண்ட் கட்டான நேரங்களிலை வேலை செய்யாது. ரவுட்டருக்கு கரண்ட் வேணுந்தானே! யாழ்ப்பாணத்திலை எங்கடை பகுதியளிலை ஒண்டவிட்ட ஒருநாளைக்கு கரண்ட் கட்!

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் எண்டு சொல்லுவினம்! ஆனா இன்ரநெற்றிலை ஆசையும் மோகமும் யாருக்கும் குறையாது பாருங்கோ!

முப்பது நாளுக்குள்ளையே தொடங்கியிட்டுது பிரச்சனை! கரண்ட் கட்டாகி வந்தா பிறகு லைன் வேலை செய்யாது! ஹொட் லைனுக்கு அடிச்சா அங்கையிருந்துகொண்டு அவை எந்தெந்த பலுப்பு டவுட்டரிலை பத்துது எண்டு   கேட்டிட்டு டவுட்டரை restart பண்ணுங்கோ எண்ணுவினை! பத்துதோ எண்டு கேப்பினை! பத்திக்கொண்டுவரும் .. எனக்குத்தான்!

போன மூண்டு கிழமையா ஒரே பிரச்சனை! கரண்ட் கட் பண்ணி வாற பிரச்சனை சரியாகி இப்ப வேறை பிரச்சனை! மழை புயல் ஒண்டும் இல்லாமலே கனெக்சன் கட்டாகி போகும்! கட்டென்றால் ஒரு பத்து நிமிசத்துக்கை நாலைஞ்சு தரம் ! Refresh refresh பண்ணியே F5 பட்டன் தேஞ்சு போச்சு!

ஹொட் லைனுக்கு அடிச்சா இந்தா பார்க்கிறம் அந்தா பார்க்கிறம் எண்டு சொல்லி சொல்லி கடைசியிலை ஒருநாளும் வந்து பார்த்திட்டு “ஓம் அப்ப உண்மையாவே பிரச்சனை இருக்குத்தான்!” எண்டு கண்டு பிடிச்சினம்! ஆனா என்ன பிரச்சனை எண்டு தெரியேல்லையாம்!

எப்பிடியும் சரி படுத்திவிடுவம் எண்டு போனவைதான்! பேந்து வரவும் இல்லை! கனெக்சன் சரியாகவும் இல்லை!

உந்த புரோட் பாண்டிலை ஜி மெயிலை படிக்கவே 10 நிமிசம் எடுக்குது! அதுக்குள்ளை பத்துத் தரம் கனெக்சனும் கட்டாகுது! ( நான் டயல் அப் கனக்சனிலையே இருந்து 5 நிமிசத்திலை மெயில் பார்த்திடுவன்)

அம்மணமா இருக்கிறவன் ஆடையை அணியோணும்! அதுக்குப் பிறகுதான் அருகிலிருக்கிறவன் காற்சட்டை சிப் கழண்டு கிடக்கு எண்டு நக்கல் அடிக்கோணும்! விளம்பரம் தயாரித்த அந்தப் புண்ணியவானுக்கு இது சமர்ப்பணம்!

ஏ WWW த? மே WWW த? எர்ரா கல்லை! ரிவிப் பெட்டியை உடைப்பம்!