வியாழன், 8 ஏப்ரல், 2010

புகைச்சல்! புகைச்சல்!

முதன் முதல் செய்யிறது எண்டா ஒரு பதகளிப்பு இருக்கத்தான் செய்யும். அது எத்தினை தரம் கண்டு கேட்டு உண்டு உயிர்த்திருந்தாலும் அது அப்பிடித்தான்.

மூண்டு வருசம் மட்டும் தேவையில்லை எண்டதாலை நானும் பெரிசா கவனிக்கவில்லை. கண்ணை மூடித் திறக்க முன்னம் மூன்று வருசம் முடிஞ்சு போகும் எண்டு யார் கண்டது! காலம் போற போக்கைப் பாருங்கோ!

அதுவும் ஒரு வகையிலை நல்லதுதான். எங்களுக்கு மேலதிக செலவெண்டாலும் அதாலை மற்றைவையளுக்கு நன்மை எண்டா அதைப் பற்றி கவலைப் படாம வேலையை செய்து போட வேணும்.

உதுக்காகவே நான் யாழ்ப்பாணத்திலை இருந்து கொழும்புக்கு வரவேண்டியதாய்ப் போச்சு! குலுக்கிறது வேணுமெண்டா சினிமாவிலை பார்க்கேக்கை ரசிக்க கூடியதா இருக்கலாம். ஆனா வண்டி குலுக்கினா என்ன நடக்கும் எண்டு வன்னி றோட்டிலை போய்ப் பார்த்தாக்களுக்கு விளங்கும்.
வண்டி குலுங்கினா வண்டியும் நோகும் எண்டது வெளிப்படை உண்மை!



காலைமை செய்தா சுகம் எண்டு மனசுக்குள்ளை ஒரு பட்சி சொன்னதாலை வெள்ளணவே வெளிக்கிட்டன். பதிவுச் சான்றிதழும் கொண்டுபோகவேணுமாம். நல்ல வேளை உவன் சுதன் முதலே சொல்லியிட்டான். இல்லாட்டா அதை எடுக்க திரும்பி வந்திருக்கவேணும்.

செய்துகொண்டு போக எல்லாரும் லைனிலை நிண்டிச்சினம். என்ரை மட்டும்தான் அதுக்கை புதுசு. மற்றதெல்லாம் ஓடிக் களைச்ச சாமான்கள். அவையளும் வென்று காட்டுறம் எண்டு வந்து நிண்டதை பார்க்கத்தான் பெரும் சிரிப்பு!

எனக்கு முன்னாலை நிண்டதின்ரை சொந்தக்காரி ஒரு டொக்டர் போலை கிடந்துது. எங்கடை அம்மம்மாவின்ரை வயதிருக்கும். அப்ப அவ சொந்தமா வைச்சிருக்கிறதும் அவவைவிட வயசா இருந்தா என்ன அதிலை பிழை? ஆனா அது இந்த போட்டி, பரீட்சையிலை எல்லாம் தேறுமா எண்டது எனக்கும் சந்தேகம்தான்.






என்ரை புதுசை வைச்சுக் கொண்டு நானே பயந்துகொண்டிருக்க, அவா அந்த பழசோடை என்னென்று தைரியமாய் எல்லாம் வெல்லுவம் என்ற பாவனையிலை நிண்டாவோ தெரியாது.

அவவின்ரை முறை. தன்ரையோடை உள்ளுக்கை போனா. முக்கிறமாதிரி சத்தம் கேட்டது. ஒரே புகை மயம். பருப்பை திண்டிட்டு எங்கடை குசுமுட்டி விட்டது மாதிரி மணம் வேறை. மலிவானது எண்டதாலை மனிசி மாற்றி விட்டுட்டுதோ என்று எனக்கு ஒரே சந்தேகம். அது அதுக் கெண்டடிருக்கிறதிலை அதை அதை விடோணும் எண்டு ஒருதருஞ் சொல்லிக்குடுக்கேல்லை போலை!

நிச்சயமாய் அது பெயில்தான். அவ என்ன நினைச்சாவோ தெரியாது. விறுவிறு எண்டு கீழை இறங்கி அந்தப் பொடியனின்ரை கைக்குள்ளை ஏதோ வைச்சா. பிறகென்ன அந்தப் புகைவண்டியும் பாஸ்தான்.

கொழும்பு மாநகரில் ஓடும் வாகனங்கள் புகைக்காக பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படும். வானொலி செய்தி சொல்லிக் கொண்டிருந்தது.

இச் இச் இச் - சுவர் பல்லிக்கும் விசர் பிடிச்சிட்டுது.


வாழ்க இலங்கை மணித்திருநாடு!

என்ரை வண்டியும் பாஸ்!