திங்கள், 28 டிசம்பர், 2009

பழைய பேரூந்தும் புதிய சாரதியும்

கெடி கலங்கிப்போச்சு! இருக்காதாபின்னை? பஞ்சிகாவத்தை சுற்றுவட்டத்திலை நிண்டு கொண்டு எந்தப் பக்கம் வெட்டவேணும் எண்டு கேட்டா! நானும் வந்த புதிசிலை கொழும்பு தெரியாதுதான். கொழும்பு மட்டுமில்லை சிங்களமும். ஆரார் தமிழ் கதைப்பான் ஆரார் சிங்களம் கதைப்பான் எண்டு கண்டு பிடிக்க ஏலாம எல்லாரும் ஒரே மாதிரி இருந்ததாலை ஒருத்தரிட்டையும் கேட்காம எத்தினை ரோட்டை நடந்தே கடந்திருப்பன்!!! யாழ்பாணத்திலை நான் மூண்டு வரிசமா ஒரு பாட்டா செருப்பை பாவிப்பன். கொழும்பிலை அது மூண்டு மாதத்திலை தேஞ்சது எண்டா கொழும்பிலை நான் நடந்த நடைதான் காரணம். எண்டாலும் நானே கொழும்பை பழசிட்டன் எண்டா...நடுச்சாமத்திலை சி ரி பியிலை 45 பேரை ஏத்திக் கொண்டு வெளிக்கிடுற றைவர் முதலாவதாக கொண்டக்டரிட்டை கேட்டு திருப்பினால் வயிறு பகீர் எண்ணாம பாலை வார்த்த மாதிரி குளிந்துபோயா இருக்கும்.




கொட்டேனாவில இருந்து பஸ் எடடா எண்டு வழிகாட்டியதே சுதாதான். கொட்டேனாவிலை இருந்தும் வெள்ளவத்தையிலை இருந்தும் வெளிக்கிடுமடா. நீ கொட்டேனா பஸ் எடு எண்டு சொன்னவன் இந்த பஸ்சிலை பாட்டு போடுவாங்கள் எண்டு சொன்னான். என்ன சீ ரி பி பஸ்ஸிலை பாட்டு போடுறவங்களோ? என்னாலை நம்பேலாம இருந்தது. ஓமடா. அந்த பஸ் றைவர் எம் பி 3 பிளேயர் வைச்சு பாட்டு போடுறவன். சுதித் தமிழ்ப் பாட்டு. சத்தியம் பண்ணாத குறையாக சொன்னான் சுதா. அப்ப நான் ஐ பொட்டை கொண்டு போகத் தேவையில்லையே எண்டு கேட்க உன்னட்டை கிடந்தா கொண்டு போவன் எண்டான் நக்கலாக. குறுக்காலை போவார் என்னட்டை உதுகள் ஒண்டும் இல்லையெண்டதை உவனுக்கு சொல்லிப் போட்டாங்கள் போலை.

எனக்கென்ன? கொழும்பிலை வீடா வாசலா? கொட்டேனாவிலை பஸ் எடுக்கிறதெண்டா நீரோ வீட்டை படுக்கோணும் வெள்ளவத்தையிலையெண்டா அச்சுதன் வீட்டை படுக்கோணும். எல்லாம் ஒண்டுதானே! நிரோ வீட்டையே படுப்பம்.

எடே காலமை நாலுமணிக்கே போய் நிண்டு ரிக்கட் எடுத்துப்போடு என்று குண்டைப் போட்டான் அவன். காலமை நாலுமணியோ? அது நடுச்சாமமெல்லோ எனக்கு! அப்பத்தான் எப்பன் நித்திரையும் கனவும் வாற நேரம்.அவள் பாவி படிப்பு படிப்பு எண்டு திரியுறதாலை என்னவோ கனவிலை கூட லேற்றாத்தான் வருவாள். அதிகாலையிலை கனவு கண்டா பலிக்கும் எண்டு உவங்கள் சொல்லுறதாலை நானும் அவ லேற்றா வாறதைப் பற்றி ஒண்டும் சொல்லுறேல்லை. இண்டைக்கு ரிக்கெட் எடுக்கிறதெண்டா நித்திரையும் போச்சு! கனவும் போச்சு!

ஜீவனிட்டை சொன்னன். எடே என்னை ஒருக்கா நாலுமணிக்கு தட்டிவிடு. ரிக்கட் எடுக்க போகோணும். ஜீவன் அந்தக் காலத்திலை இருந்தே காலமை நாலுமணிக்கு அதுவும் மார்கழி மாதத்திலை குளிச்சுப்போட்டு சேமக்கலம் தட்டிக்கொண்டு பஜனைக் கோஷ்டியோடை போறவன். அதுக்காக அவனை பக்திமான் எண்டு நினைக்கக் கூடாது. நிண்ட நிலையிலை மழைமாதிரி தூசணம் பேசக் கூடியதும் அவன்தான். நான் சிவராத்திரிக்கே நித்திரை முழிக்காத ஆள். அவன் சொன்னான் “இரண்டு தரம் தட்டிப்பார்ப்பன். எழும்பேல்லை எண்டா மூஞ்சியிலை மூத்திரம் அடிச்சுப் போடுவன்”. உம் செய்யக் கூடிய ஆள்தான். ரிக்கட் எடுக்கிற நினைவிலை முழிச்சு முழிச்சு பார்த்திலை என்க்கு முழு இரவும் நித்திரை குழம்பிப் போச்சு!!!

ரிக்கட் எடுத்தாச்சு. 11.30 க்கு பஸ் கொட்டேனாவாலை வெளிக்கிடும். அப்பிடியே போய் பெற்றா பஸ் ஸ்டாண்டிலை நிண்டு இரவு 12.30 க்கு யாழ்ப்பாணம் வெளிக்கிடும் --ரிக்கட் எடுக்கேக்கை சொல்லித்தான் விட்டவை.

11 மணிவரை நித்திரை கொள்ளலாம் எண்டா நித்திரை வராதாம். அவள் வேற படிச்சுக்கொண்டிருப்பாள். அது பாவம் கண் முழிச்சு படிச்சுக் கொண்டிருக்க நான் விசரன் மாதிரி நித்திரை கொள்ளுறதோ! நான் நித்திரை கொள்ளேல்லை. பஸ்ஸிக்கை பார்ப்பம்.

பஸ் ஏறியாச்சு. பாட்டுப் பெட்டிக்கு வைச்சிருந்த இடத்தை கொண்டக்ரர் வாடகைக்கு விட்டிட்டான் போலை. அந்த இடத்தை எலி வாடகைக்கு எடுத்திருந்ததால் றெடியோ பெட்டி கிடக்கிற இடத்திலை பொந்துதான் கிடந்தது. எம் பி 3 கிளேயராயும் காணோம். சுதாக்கு போனைப் போட்டன். என்னடா இப்பிடி செய்து போட்டியே!!! “றைவர் மீசை வைச்ச ஆளோ?”அவன் கேட்டான்.

“ஓமடா”
யாழ்ப்பாண றைவருக்கு மீசை இருக்கிறது ஒரு பெரிய விசயமா!
“டிரௌசர் போட்ட ஆளா?”இது அவன்.

எனக்கு பத்திக் கொண்டு வந்தது. இனி அவர் அண்டவெயார் போட்டிருக்கிறாரோ எண்டு கேட்டாலும் கேட்பான்.!

“என்னடா சத்தத்தை காணேல்ல”

“இல்லை. வெள்ளைச் சாரம் கட்டியிருக்கிறார்.”

“அப்ப உது வேறை பஸ். வேறை றைவர்”

சரி. இனியென்ன செய்யுறது! நித்திரையாவது கொள்ளுவம் எண்டு பார்க்கத்தான் உது நடந்தது.

“உதாலையோ தம்பி வெட்டுறது?” மூன்றாந் தரமும் றைவர் கொண்டக்ரரிட்டை கேட்கேக்கை எனக்கு சுவராய் விளங்கிட்டுது. ஆள் புதுசு! முதன் முதலா கொழும்பு ரூட்டை குடுத்திருக்கிறாங்கள். பேந்தெங்கை நித்திரை கொள்ளுறது!

என்னைப் போலத்தான் எல்லாரும். பஸ் மதவாச்சி பொயிண்டுக்கு பதிலாய் மாத்தறைக்கு போயிடுமோ எண்ட பயத்திலை முழிச்சிருந்தினம். பின் சீட்டுக் காரர்களுக்கு விசயம் வெளிக்கேல்லை அவை நல்ல நித்திரை.

றோட்டுக்கு நடுவிலை பதித்த பூனைக் கண்ணிலை ஏறேக்கை பஸ் குலுங்கியது. முடக்கிலை பிறேக் அடிக்கேக்கை கிறீச்சிட்டது. பழைய வில்லுத் தகடுகள் குலுங்கின. பஸ்ஸிலை இருந்த எல்லாரும் எழும்பியிட்டினம்.

கொண்டக்ரரின் வழிகாட்டிலுடன் பஸ் குருநாகலுக்கால் போய்க்கொண்டிருந்தது. எனக்கு சாதுவா நித்திரை தூக்கியது. அயர்ந்து போனன்.

சர்ர்ர்ர்ர்

மூஞ்சியிலை ஜீவன் மூத்திரம் அடிச்சிட்டான்.
“ எடே நாலு மணியாச்சே!?”

கத்திக்கொண்டே நான் எழும்பியதில் மீண்டும் முழு பஸ்ஸூம் முழித்துக் கொண்டது.

நாலுமணிதான். ஆனால் பெஞ்சது ஜீவன் இல்லை. பஸ் முகடு. மிகிந்தலை. வெளியே மழை பெய்துகொண்டிருந்தது. மழைத்தண்ணி பஸ்ஸின் முகடுக்கால் மூஞ்சியில் வழிந்தது. சேட் நனைஞ்சு காற்சட்டை நனைந்து மூலஸ்தானத்துக்கையும் தண்ணி போட்டுது.

அரைச் சொகுசு பஸ்தானே. அதனாலோ என்னவா ஏசிக்கு பதிலாக ஓசிக் குளியல் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

திருவெம்பாவைதானே தம்பி! காலமை குளிக்க வேணும்! பக்கத்திலை இருந்த அன்ரி நக்கலா சொன்னா!!!!

பஸ்ஸின் முன் கண்ணாடியை துரைக்கும் வைப்பர்கள் வேலை செய்யாததால் பஸ் மெதுவாய் போய்க்கொண்ருந்தது.

தண்ணீர் தாராளமாக முகட்டால் ஒழுகிக் கொண்டிருந்தது.

எனக்கு திருவெம்பாவை சிவராத்திரியாக மாறி கடைசியில் ஆருத்திரா தரிசனம் நடந்துகொண்டிருந்தது.

27 12 2009

5 கருத்துகள்:

hrgunam சொன்னது…

payana video clip super o super.

ஆதிரை சொன்னது…

ரசித்து சிரித்தேன்....

ப்ரியா பக்கங்கள் சொன்னது…

சூப்பர் குரு ..

கிடுகுவேலி சொன்னது…

ம்ம்ம்....குருவுக்கே உரித்தான பாணியிலான பயண அனுபவம்...!!
வாசித்தேன்...!
ரசித்தேன்.....!!

கிருஷ்ணபிள்ளை குருபரன் சொன்னது…

Thanks you all of you