வெள்ளி, 4 செப்டம்பர், 2009

ஒரு காகமும் உஞ்சுவும்

நான் ஒரு கிழமைக்கு லீவு எண்ட உடனேயே அங்கை அல்லோல கல்லோலப் பட்டது. எப்ப ஊருக்கு போறியள் எப்ப வாறியள் எண்டு கேட்டால் நான் என்னத்தை சொல்ல? யாழ்ப்பாணம் போறதெண்டா என்ன சாதாரணமான விசயமே? உந்த குறுக்கால போவாரின்ர பிளைட்டிலை போனா ஒரு மாத சம்பளம் அப்பிடியே கரைஞ்சு போகும் எண்டதாலை நானும் ஆடிக்கொருக்கா அமாவாசைக்கு ஒருக்காதான் வெளிக்கிடுறது.

“யாழ்ப்பாணத்துக்கு பஸ்ஸிலை போறதெண்டா எவ்வளவு நேரம் எடுக்கும்?” கேட்டது ஒண்டுமே தெரியாத சிங்களப் பிளளை எண்டாதாலை சினப்பட முடியாமல் இருந்தது.

அது ஓடுற றைவரையும் பாதையின்ர கொண்டிசனையும் பொறுத்தது என்று பதில் சொன்னேன்.

“எப்பிடியெண்டாலும் கன நேரம் பஸ்ஸுக்கை இருக்க வேணும் என்ன?”

ஓ. குறைஞ்சது 10 மணித்தியாலம்.

“ஆ ஆ அப்ப பஸ்ஸுக்கை எறினா என்ன செய்வியள்?”

இதென்ன கேள்வி? ஒரு மூலைக்கரை சீட்டா பிடிச்சு நல்ல நித்திரை கொள்ளுறதுதான்!!!

“ஏக்கநம் வடன்நா” ( அப்பிடியெண்டா உதவாது)

ஏதோ சுற்றி வளைச்சு ஏதோ விசயத்துக்கு வருகினம் எண்டு விளங்கினாலும் என்ன விசயம் எண்டு பிடிபடவில்லை.

“நீண்ட தூரப் பயணங்கள்தான் உறவுகளை உருவாக்குகிறது. ”

ஆ! விசயம் பிடிபட்டிட்டுது.

“அநியாயத்துக்கு நித்திரை கொள்ளாம யாரையாவது பார்த்துக் கீத்து....”

கல கல எண்டு சிரிக்கேக்கை எல்லாப் பொம்பிளையயும் வடிவுதான்!!!!!!

-- -- -- -- -- -- -- -- -- -- -- -- --- ------------------------------------------

யாழ்ப்பாண புகையிரத நிலையம்.
பஸ் எடுக்கலாம்.
கப்பலுக்கு ஆட்கள் ஏற்றப்படலாம்.
விமானப் பயணிகள் ஏற்றப்படலாம்.

ஆனா புகைவண்டியிலை மட்டும் ஏற ஏலாது.

உது எங்கடை மசுக்குட்டியின்ரை கண்டு பிடிப்பு. மசுக்குட்டியின்ரை உண்மைப் பெயர் எனக்கும் மறந்து போச்சு. உடம்பு முழுக்க மயிர் வளர்ந்து இருந்ததாலை மசுக்குட்டி எண்டாதான்அவனை எல்லாருக்கும் தெரியும்.

மசுக்குட்டியும் நானும் அண்டைக்கு கொழும்புக்கு வெளிக்கிட்டம். ஆறுமணிக்கே வந்திட்டம். பத்து பஸ்ஸிற்கும் சனம் ஏற்றி எல்லா பஸ்ஸும் ஒண்டாதான் வெளிக்கிடும் எண்டதாலை பத்து பஸ் சனமும் சிங்கள மகாவித்தியாலய முன்றலில் திரண்டு இருந்தது.

கிடந்த ஒண்டிரண்டு கதிரையளை தூக்கிப் பாட்டுக் கொண்டு எல்லாரும் கொஞ்சம் நிழல் பக்கமாக ஒதுங்கி இருந்தினம்.

தங்களை விட்டிட்டு பஸ் வெளிக்கிட்டாலும் எண்ட பயமுள்ள ஆக்கள் பஸ்ஸின் நிழலிலேயே குந்தியிருந்தினம்.

நேற்றே டிக்கட் புக் பண்ணியிட்டம் எண்ட துணிவிலை கொஞ்சம் தொலைவாக ஒரு நிழலில் கதிரையை போட்டு ஆசுவாசமாக சாய்ந்தேன். பஸ் வெளிக்கிட இன்னும் 2 மணித்தியாலத்துக்கு மேலே இருந்தது.




கலகலவெண்டு ஒரு சிரிப்புச் சத்தம்!

கம்பஸ் பிள்ளையள் மாதிரி இருந்தது.

“சும்மா போற வாற வழி எல்லாம் நித்திரை கொண்டா வேலையில்லை!!!” அண்டைக்கு அதுகள் சொன்னது நினைவுக்கு வந்தது.

காதைத் தீட்டிக் கொண்டேன்.

ஒரே சிரிப்பும் கும்மாளமுந்தான்.
மூன்று பேர்.

கைக்கெட்டும் தூரத்திலேதான் கதிலை போட்டு இருந்தார்கள் என்றாலும் நான் மற்றப்பக்கமாக இருந்ததிலை வடிவாத் தெரியேல்லை.

“கையை கழுவிப்போட்டு வாறமடி”

ஒருத்தியை காவலுக்கு வைத்துவிட்டு இரண்டு பேர் போனார்கள்.
போற போக்கிலை எனக்கம் ஒர பார்வை வீசிப் போனார்கள்.

நீங்கள் அமரர் கல்கி எழுதின பொன்னியின் செல்வன் நாவலிலை வாற வந்தியத் தேவனை கண்டிருக்கிறியளா?
அப்பிடியில்லை எண்டா என்னை பார்த்துக் கொள்ளலாம்.
வந்தியத்தேவனுக்கு அடிக்கடி கிளுகிளுப்பு வாற மாதிரித்தான் எனக்கு அண்டைக்கு!!

கையை கழுவிவிட்டு வந்த இரண்டும் கதிரையை இழுத்துப்போட்டுக் கொண்டு சாப்பாட்டு பாசலை அவிழ்க்கத் தொடங்கியது.

ம்ம்
புட்டும் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பும். பார்க்காமலே வாசனையை வைத்து தெரிந்து கொண்டேன்.

கையை கழுவாம நிண்டது கையை பிசைஞ்சு கொண்டு நிண்டது. இனி கையை கழுவப்போனா திரும்பி வாறதுக்கு இடையிலை எல்லாம் முடிஞ்சு போம் எண்டு பயத்திலையாக்கும்.

மற்ற இரண்டும் புட்டை பிசைந்து , “ ம், ஆக்காட்டு ” என்று ஒரு வாய் ஊட்டி விட்டுதுகள்.

ம்.

நாங்கள் உனக்கு ஏன் சீத்தினனாங்கள் தெரியுமே?

புட்டு வாய்க்குள்ள இருந்ததாலை வாயைத் திறக்காமலே தலையை அப்பிடியும் இப்பிடியும் ஆட்டினது.

அம்மா சொன்னவா சாப்பிடத் தொடங்கமுன்னம் காக்காக்கு போட வேணும் எண்டு!!!

ஹாஹாஹா

வெடிச்சிரிப்பு சிரித்ததில் புட்டுச் சன்னங்கள் எனக்கு அருகிலும் வந்தன.

இரண்டு அன்னங்களும் காக்காவும் ( அதுதான் பாருங்கோ ஒராள் கறுப்பு மற்ற இரண்டும் கொஞ்சம் வெள்ளை) பிறகு சண்டை பிடியாமல் சாப்பிட்டு முடித்தன.

சாப்பிடும் போதும் கல கல எண்டு சிரிப்புத்தான்.


சாப்பாடு காணுமோடி?- மூன்றிலை ஒன்றுதான் கேட்டிருக்க வேணும்.

“ம்.ம்” இது மற்ற இரண்டும்.

அப்பிடியெண்டா மிச்சத்தை உஞ்சுவுக்கு எறியுங்கோ! அப்பவிலை இருந்து பார்த்தக் கொண்டிருக்குது!!!

நான் கதிரையை தள்ளிப்போட்டு உட்கார்ந்து கொண்டேன்.

நல்லவேளை! மசுக்குட்டி தண்ணி குடிக்கப் போயிருந்தான்!!







5 கருத்துகள்:

Unknown சொன்னது…

ம். சூப்பர் அண்ணா பின்னுறீங்க..

அதில பாருங்கோ நான் பக்கத்தில இல்லயே எண்டு வருத்தமா இருக்கு..

கிருஷ்ணபிள்ளை குருபரன் சொன்னது…

நன்றி ஜெயா
வருகைக்கும் வாழ்த்துக்கும்

நிலாமதி சொன்னது…

கலகலவென சிரிப்பு கேட்டு நீண்ட நாளாச்சு தொடர்ந்து எழுதுங்கோ ....

கிருஷ்ணபிள்ளை குருபரன் சொன்னது…

நன்றி நிலாமதி!!!

Ananthan சொன்னது…

உண்மைக்கும் உஞ்சு எண்டுதான் சொன்னவையோ ? ஏதும் எழுத்துப்பிழை இருக்கா ?