வியாழன், 4 மே, 2017

ஆச்சி பயணம் போறா!

ஆச்சி போறாவாம்! அந்தளவில் சந்தோசம்!
பேய்ச்சி பிடாரி பெருங்கரைச்சல்க் கோதாரி!
ஆச்சி போறாவாம்! அந்தளவில் சந்தோசம்!

செத்ததுக்கு சிரிக்கின்ற சின்னவனாய் போயினனோ?
கத்திபிடிச்சாலும் காயப்பட்டு விழுந்தவனை
ஒத்தியெடுத்து உயிர் ஓம்புகின்ற வழிப்பிறந்தும்
செத்ததுக்கு சிரிக்கின்ற சின்னவனாய்ப் போயினனோ?

சத்தியமாய்ச் சொல்கிறன் சாகேல்லை மனிசியின்னும்!
சுற்றி மதில்வைத்த சுகமான வீட்டை விட்டு
ஆச்சி போறாவாம்! அந்தளவில் சந்தோசம்!

ஊருக்கை ஆச்சீன்ரை உபத்திரவம் கொஞ்சமில்லை
பேருக்கு யாரும் பிடிக்கேல்லை எண்டு சொன்னா
தூர்வார்ந்து மனிசி துவைச்செடுக்கும்! குமருகளின்
பேர் கெடுத்துப் போடும்! பேந்தெங்கை கலியாணம்?

கல்லுக்குற்றல் அதின்ரை கைராசி! மனிசி தன்ரை
சொல்லுக்கு  ஆடாட்டா சுழன்றடிக்கும்! அயலுக்கு
நல்லதொண்டு அதனால் நடந்ததில்லை! அதனாலே
ஆச்சி போறாவாம்! அனைவருக்கும் சந்தோசம்!

ஆச்சி கைநாட்டு! ஆனாலும் அடுத்தவைக்கு
ஏ எல் முடிச்சிட்டன் எண்டு சொல்லும்!
ஏ எல் முடிச்சிட்டு ஏன் கம்பஸ் இல்லையெண்டா,
ஊரின் பிரச்சனையை ஒரு சாட்டாய் உலுப்பிவிடும்!

ஆச்சியாலை எல்லாம் அரியண்டம் எண்டாலும்
“ஆச்சி வருமெண்டு ”அச்சுறுத்தி என் பெடிக்கு
சீத்தும் என் மனிசி சிரிக்கும்!  எப்போதும்
ஊத்தையிலை கூட உபயோக மிருக்கெண்டு!

விடுப்பு விண்ணாணம், வேலையில்லாப் பெடியளின்ரை
தொடுப்பு, ஈதெல்லாம் துலக்கித் துப்புத்தர
ஆச்சியை விட்டா ஆரிருக்கார்! ஆரிருக்கார்!

ஆச்சி போகேக்கை அவ வளர்த்த சேவல்களைத்
தூக்கிக் கொண்டு போவாவோ? துலையட்டும்! நாளைக்கு
ஆற்றையன் சேவல் வந்து அதிகாலைத் துயிலெழுப்பும்!
போட்டு வா ஆச்சி! புழுக்கம் தணியட்டும்!

🇨வாயுபுத்திரன்










கருத்துகள் இல்லை: