Friday, March 15, 2013

அரக்கி இருத்தல்!

கோசலை ரீச்சரைத் தெரியாமல் யாரும் அங்கை படிச்சிருக்க முடியாது. அவவின்ரை பெருத்த உருவம் கண்ணுக்கு தெரியாம போகுததெண்டா ஒண்டில் அவன் அந்தப் பள்ளிக்கூடப்பக்கம் போகாம இருந்திருக்க வேணும் அல்லது அவ ரிடையர் ஆன பிறகு படிச்சிருக்கவேணும். அவவின்ரை காலின்ரை பருப்பம் காரணமாக அவ நடக்கிறேல்லை! அரக்கி அரக்கித்தான் வாறவ! பெடியள் எல்லாம் அரக்கி வாறா எண்டு ஓடி ஒளிஞ்சிடுவாங்கள். ஏனெண்டா அவவின்ரை கையிலை சிக்கினானோ அவன் ஒழிஞ்சான்! அப்ப எல்லாம் எனக்கு இராமாயணம் எல்லாம் தெரியாது. நான் அரக்கி அரக்கி நடக்கிற எல்லாரும் அரக்கியள் எண்டு நினைச்சுக்கொண்டு அவையளெல்லாம் அடிக்கிறதுக்கும் வதைக்கிறதுக்கும் எண்டே பிறந்த ஆக்கள் எண்டு பயந்திருக்கிறன்.


கோசலை ரீச்சர் எண்டா அடி போடுற ஆள் எண்டு எல்லாருக்கும் தெரியும். அதிலும் பெடியளுக்குத்தான் கூட அடி விழுகிறது. ஏனெண்டா அவங்கள் தான் அரக்கி வாறா அரக்கி வாறா எண்டு பிலத்துக் கத்திக் கொண்டு ஓடுறது. பொம்பிளைப் பிள்ளையளும் அரக்கி வாறா எண்டு மற்றாக்களுக்கு சிக்னல் போட்டு உசிப்பிப் போட்டுத்தான் போறவளவை ஆனா பெடியள் மாதிரி பிலத்துக் கத்துறேல்லை.

கோசலைச் ரீச்சர் ஏன் அடிப்பா எண்டு எங்களுக்குத் தெரியாது. ஆனா எப்பிடி அடிப்பா எண்டு நல்லாவே தெரியும். அவ அடிபோடக் காரணங்கள் ஒரு பெரிய பட்டியலில் அடங்கும். நேற்று றோட்டிலை போகேக்கை ஏன் சிரிச்சனி எண்ட கேள்வியிலிருந்து இப்ப ஏன் முழுசிறாய் எண்டது வரை பல்வேறுபட்ட கேள்விகள் அவவிடம் இருந்து வரலாம். சரி நேராப் பார்த்தாத்தான் பிரச்சனை எண்டு கீழே தலை குனிந்து நின்றால் பேந்து நிலத்திலை என்னத்தை நோண்டுறாய் எண்ட கேள்வி வரும். அதுக்குப் பயந்து அண்ணாந்து பார்த்தால் ஏன் முகட்டைப் பார்க்கிறாய் எண்டு கேப்பா! எல்லாக் கேள்விக்கும் விளைவு ஒண்டுதான்! எங்கை பின்னுக்கு திரும்பு எண்டு சொல்லியிட்டு மேசையிலை இருக்கிற பிரம்பாலை காற்சட்டையின்ரை பின்புற தூசு பறக்க அடி போடுறதுதான்! மற்ற ரீச்சர்மார் அடிபோடேக்கை கையிலை தான் அடிப்பினம். அப்ப நோவை குறைக்க காற்சட்டையின்ரை பின்பக்கம் தடவுறனாங்கள்! அரைவாசி பொம்பிளைப் பிள்ளையள் படிக்கிற வகுப்பிலை காற்சட்டைக்கு பின்பக்கம் தடவிக் கொள்வது கொஞ்சம் வெக்கமான வேலைதான் எண்டாலும் அப்பிடிச் செய்து நோவைக் குறைக்காட்டா அடுத்த அடி விழேக்கை தாங்க ஏலாது. கோசலைச் ரீச்சர் அந்தக் குறையை விடுறேல்லை. நேரா காற்சட்டைபின்புறம் தான் அவவின்ரை பிரம்பின்ரை இலக்கு! இப்போது நோகுற பின்புறத்தை எங்கடை கை தடவி விடும்.

அதெல்லாம் ஆண்டு 5 க்கு முன்னான கதையள்! நான் ஒரு நாளும் கோசலை ரீச்சரிட்டை அடிவாங்கேல்லை எண்டு நான் கற்பூரம் அணைச்சு சத்தியம் பண்ணினாலும் நீங்கள் நம்ப மாட்டியள். அதுக்காக நான் ஒண்டும் குழப்படி செய்யாத ஆள் எண்டு நீங்கள் பிழையா விளங்கக் கூடாது. தவிர கோசலைச் ரீச்சரிட்டை அடிவாங்க பிழையெல்லாம் விடத் தேவையில்லை! அப்பிடியிருந்தும் நாங்கள் கொஞ்சப்பேர் அடிவாங்காதது பெரிய அதிசயம் தான்!

நாங்கள் படிச்சு கம்பசுக்குப் போய் வந்த பிறகு மேற்படிப்பெண்டுந் தொடங்கியாச்சு! போன மூண்டு தரமும் இப்பிடித்தான் கோசலை ரீச்சரின்ரை கேள்வி மாதிரி கேட்டு எங்களுக்கு அடி விழுந்ததுதான் மிச்சம்!

இந்தமுறை வைவா!

Now tell me, what is the muscle attached to this red line?

அது இடுப்பு எலும்பின்ரை வெளிப்பக்கம்! உட்பக்கமெண்டா எங்கடை ஏரியா! வெளிப்பக்கம் சேர்ஜன் மாரிரை ஏரியா! விடை தெரியேல்லை.

 Now tell me what is the function of the muscle?

மசில்ஸ் என்ன எண்டே தெரியேல்லை பேந்து அதின்ரை தொழிற்பாடு பற்றிக் கேட்டா....

நான் மேலை பார்த்தேன்

“ஏன் மேலை பார்க்கிறீர்?”

நான் மற்றப் பக்கமாக பார்த்தேன்.
“ஏன் அங்காலை பார்க்கிறீர்?”


எனக்கு சிரிப்பு வந்தது.

கோசலை ரீச்சரின்ரை யாரோ சொந்தக்காறன் PGIM க்குள்ளை பூந்திட்டான்.

வெளியே வந்தேன்.

மச்சான் அது கிரசிலிஸ் மசிலாமடா!


கிரசிலிசோ! அந்த இழவை ஏன் எங்களுக்கு கேட்டவங்கள்! அது லோவர் லிம்ப் மசில்ஸ் எல்லோடா!

மச்சான் உனக்குத் தெரியுமே அதுக்குத்தான் கனக்க மார்க்ஸ் குடுத்திருந்தவங்கள். 10 க்கு 6 அந்தக் கேள்விக்குத்தான்.

ரிசல்ட்ஸ் அவுட்டானது. முந்தி நாங்கள் கோசலை ரீச்சரிட்ட தப்பினமாதிரி இந்த எக்சாமிலும் சிலபேர் பாஸ் பண்ணியிருந்தாங்கள்!!!!!

14..03.2013No comments: