புதன், 26 மே, 2010

வீதியோட்டம்.

உவர் குண்டனுக்கு உதெல்லாம் ஏலாது எண்ட கதைதான் என்னையும் உசுப்பேற்றி விட்டது. பின்னை என்ன! எந்த நேரம் பார்த்தாலும் உவையளுக்கு ஒரு நக்கல்!

சபாபதியர் என்ன பாவம் செய்தாரோ தெரியாது. அவர் பாவம் செத்துப் போனார். அவருக்கு எங்கடை முகமோ அல்லது எங்களுக்கு அவரின்ரா முகமோ தெரியாது. முகந்தெரிஞசுதான் நன்மை தீமை செய்ய வேணுமே என்ன! பாவம் எங்கடை முழு வகுப்பிலுமே சபாபதி ஹவுசுக்கு தெரிபட்ட ஆக்களை நீங்கள் பாத்தியள் எண்டா எப்பவோ செத்துப்போன அவருக்காக கண்ணீர் விட்டிருப்பியள். அல்லது அவர் உயிரோடை இருந்திருந்தா அவர் செத்துப்போயிருப்பார்!!!!

நான் ஸ்கந்து பூஸ்டர் எண்டுவடிகட்டி எடுத்த பிள்ளையளை வைச்சு கொண்டு ( எங்கடை பள்ளிக்கூடமே வடிகட்டித்தான்பிள்ளையளை எடுக்கிறது. ஆனா வடியிலைமிஞ்சி இருக்கிற சக்கையளா நாங்கள் இருந்ததுக்கு நான் என்ன செய்யுறதுஃ??!!!) எபபிடி இவண்டுகள் நடத்துறது எண்டு எங்கடை ஞானக்குட்டான் ஞானதேசிகன் சேர் முடியை பிய்ச்சு கொண்டதிலை மிச்ச சொச்சமாய் இருந்த அவரின்ர மயிரும் காணாமப் போட்டுது!

குணடனாய் இருந்தா குண்டெறியலாம் எண்டு யாரோ தப்பாச் சொல்லியிட்டாங்கள். குண்டெறியிறவனெல்லாம் குண்டனாய் இருக்கலாம் ஆனா குண்டன்கள் எல்லாரும் குண்டெறிய முடியாது எண்டு என்னைப் பார்தபிறகுதான் அவையளுக்கு விளங்கியிருக்கும். நானும் எதிர்பார்க்கேல்லை அது அப்பிடி நடக்கும் எண்டு! எறிஞ்ச குண்டு காத்திலை சுழலும் எண்டு நான் கனவிலும் நினைக்கேல்லை! பின்னை அது என்னெண்டு முன்னாலை எறிய, போய்ப் பின்னாலை விழுந்தது எண்டும் எனக்குத் தெரியாது! நல்லவேளை பின்னாலை நிண்ட பெடியள் தப்பியிட்டாங்கள். ஆர்ரையும் காலிலை விழுந்திருந்தா..... முரளியின்ர டூஸ்ரா பந்து நான் உறிஞ்ச பட்சொட்டிலை இருந்துதான்அந்தாள் படிச்சதெண்டா நீங்கள் என்ன நம்பவாபோறியள்!

குண்டெறியிற ஆக்கள் ஜவலினும் எறியோணுமாம். என்னையும் எடுத்துப்போட்டாங்கள்! கிளீனர் காண்டி பயந்து கொஞ்ச நேரம் அந்த இடத்திற்கே வரேல்லை! ஜவலினிலை அவன்தான் கடைசியிலை சம்பியன்! ஆனா அவனுக்கு பீப்பயம்! வராதா பின்னை! நான் எறியிறது எங்கை போகுமம் எண்டு எனக்கே தெரியாத போது அவனுக்கும் அது எப்பிடித் தெரியும். பின்னாலை முன்னாலை நிக்கேக்கை வந்து ஏறியிட்டுது எண்டா??!! கடைசியிலை நான் எறிஞ்ச ஒண்டும் லாண்ட் பண்ணவே இல்லை!!!!

பெரிய அவமானம். சபாபதி இல்லம் கடைசி! ஒரு வருசம் இரண்டு வருசம் இல்லை தொடர்ந்து 3 தரம்!


வெறி வந்திட்டுது! ஹவுசுக்கு குறைஞ்சது ஒரு புள்ளியாவது பெற்றுக் குடுக்கிறதெண்டு! என்ன செய்யலாம்???!!!

றோட் ரேஸ்தான் நல்ல வழி! குறிச்ச நேரத்திலை ஓடிமுடிச்சா ஒரு புள்ளி கிடைக்கும். ஆனா அதுவும் லேசுப்பட்ட விசயம் இல்லை! 5 கிலோமீட்டரை 20 நிமிசத்திலை ஓடவேணும்.

கனக்க தூரம் ஓடுறது எண்டது எங்களுக்கு ஒரு பிரச்சனை இல்லை! எத்தினை நாள்எத்தினை மைல் நாங்கள் சைக்கிளை மூசி மூசி உழக்கியிருப்பம். தூரமெண்டது பெரிய பிரச்சனையே இல்லை. ஆனா டைமுக்கை முடிக்கிறதெண்டா கொஞ்சம் கஸ்டந்தான்.

நான் றோட்றேசுக்கு பெயர் கொடுக்கேக்கை வகுப்பிலை பெரிய சிரிப்பலை! நாலெட்டு நடந்தாலே மூச்சு வாங்கிற பெடியன் றோட் ரேசிலை ஓடுறதெண்டா. ....
இன்னொரு அம்புலன்சுக்கும் சொல்லி வையுங்கோடா.... பெடியள் நக்கலுக்கு சொன்னவங்களோ அல்லது கரிசனையிலை சொன்னவங்களோ எனக்குத் தெரியாது.

நான் ஓடுறதெண்டு தீர்மானம் எடுத்திட்டன்.

தனிய ஒரு நாளும் ஓடேலாது. ஓடுறதெண்டா சோடி தேவை. பஞ்சிப் படேக்கை ஊக்குவிக்கவும் பயிற்சி எடுக்கவும் யாராவது தேவை!


மஞ்ஞாதான் உதுக்கு சரியான ஆள்! மயுரன் எண்ட பெயர் மஞ்ஞா எண்டு மாத்தினது யாரெண்டு தெரியாது! ஆனா மஞ்ஞா எல்லாத்துக்கும் ஓமெண்டு வாற ஆள் எண்டு எல்லாருக்கும் தெரியும்.

மஞ்ஞா அஞ்சு மணிக்கே வந்து வாசலிலை பெல் அடிக்கும். மஞ்ஞாவும் என்னைப்போலத்தான். அஞ்சு மணிக் கருக்கலிலை முகந்தெரியாது. ஆனா அவன் சிரிப்பான். மஞ்ஞான்ரை பல்லு என்ரையை மாதிரி காவிபடிஞ்ச பல்லுகள் இல்லை. இருட்டிலை சிரிச்சாலும் தெரியும்.

அவன் பெல் அடிக்கேக்கை தான் நான் எழும்புறது. வாயை மட்டும் அலம்பிப்போட்டு காற்சட்டை ரீசேட் போட்டுக் கொண்டு போறதுதான். அந்த காலத்திலை ரக் சூட் எண்டாலோ பம் சூ எண்டாலோ எங்களுக்கு தெரியாது.

எங்கடை கிரவுண்டிலை இருந்துதான் ஓடத் தொடங்குறது. காலைமை ஓடுறதும் ஒரு விறுவிறுப்புதான் பாருங்கோ! காலமை எண்டா ஓடேக்கை மம்மல் இருட்டிலும் நல்லா கண் தெியோணும் பாருங்கோ! கிடங்கு முடங்குகளிலை விழுந்தெழும்பாம மட்டுமில்லை காலங்காத்தாலை தெருவுக்கு கோலமிட்டு வைச்சிருக்கிற எங்கடை வைரவரின்ரை வாகனத்தின்ரை வாய்ப்பனிலை உழக்காம ஓடவுந்தான்!

கிரவுண்டிலை தொடங்கி அப்பிடியே கஸ்தூரியார் றோட்டை பிடிச்சு நாலவர் நோட்டாலை திரும்பி அப்பிடியே பிறவுண் ரோட் பிடிச்சு பேந்து கலட்டிச் சநிதியிலை இருந்து இராமநாதன் றோட்டாலை நாச்சிமார் கோயில் வந்து..பேந்து அப்பிடியே அரசடிபோய் சிவப்பிரகாசம் றோட்டை பிடிச்சு மானிப்பாய் றோட்டு வந்து ஓட்டு மடத்தாலை பழையபடி கிறவுண்டுக்கு வந்து ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு நிற்கோணும். இதுதான் முழு ரூட்டும்.

முதல் நாள் ஓட்டம் பாருங்கோ. பிறவுண் றோட்டிலேயே களைச்சிட்டுது. அப்பிடியே அரசடி றோட்டாலை திரும்பி வந்ததுதான். அடுத்தநாள் நாச்சிமார் கோயிலடி! மூண்டு நாளுக்கு பிறகுதான் முழு றவுண்டுமே ஒரே ஓட்டத்திலை ஓட முடிஞசுது. எவ்வளவு நேரத்திலை எண்டே கேக்கிறியள். சொன்னா வெக்கக்கேடு! ஒண்டரை மணித்தியாலம் பிடிச்சுது. உந்த தூரத்தை 20 நிமிசத்திலை ஓடுறதெண்டது கொஞ்சம் கஷ்டமான காரியம் போல தெரிந்தாலும் நாங்கள் முயற்சியை கைவிடவில்லை.

முதல் இரண்டுநாளும் பிரச்சனை அவ்வளவு இல்லை. மூண்டாம் நாள் தான் அது தொடங்கினது. அண்டைக்கு எண்டு பார்த்து மஞ்ஞாவும் சுணங்கிப்போனான். நாங்கள் சிவப்பிரகாசம் வீதியை தொடேக்கை விடிஞ்சிட்டுது.

எங்கடை பெட்டையள் காலங்காத்தாலை எழும்பி வாசலிலை விளக்குமாத்து போட்டு கூட்டுமளவு முன்னேறியிருக்கும் எண்டு நான் கனவிலும் நினைக்கேல்லை. அதுகள் கேற்றை திறந்து கொண்டு வர அதுக்குப் பின்னாலை அவையளின்ரை வீட்டுநாயளும் வெளியிலை வந்திடும்.

பேந்தென்ன கலைபாடுதான். அதுகள் உஞ்சு உஞ்சு எண்டு கூப்பிட்டாலும் அவையளின்ரை நாயள் எங்கடை குஞ்சுகளை புடுங்காம விடுறதில்லை எண்டு கலைச்ச கலையல்!!! அப்பப்பா! எங்களை ஒரு கோச்சும் அப்பிடி ரெயின் பண்ணி இருக்கேலாது.

ஒரு மாதிரி அந்த நாளும் வந்திட்டுது. டே மச்சான் களைச்சுதெண்டா வா வந்து அம்புலன்சிலை ஏறு எண்டு உவன் பேக்கரன் கூட வெறுப்பேத்தினான்.

வெறி வந்திட்டுது.

நாயளின்ரை ரெயினிங்.. பெட்டையளின்ரை சிரிப்பு... அவனின்ரை நக்கல்...

ஓட்டம் சொல்லி வேலையில்லை.

பெல் அடிக்க முந்தி வந்து சேந்திட்டம்.

சபாபதி ஹவுசுக்கு என்னாலை ஒரு புள்ளி.

அந்த முறை சபாபதி ஹவுஸ் கடைசியிலிருந்து கடைசிக்கு முன்னதாக முன்னேறியிருந்தது.










1 கருத்து:

sinmajan சொன்னது…

நானும் இரு தடவை ஓடி முடித்திருக்கிறேன்..பெரும்பாலும் என்னுடைய அனுபமும் இதே தான் அண்ணா..