செவ்வாய், 4 மே, 2010

வாறியளே உதிலை ஒருக்காப் போட்டு வருவம்??!!!

என்ரை காதல் தோத்ததுக்கு உந்த குறுக்காலை போனவங்களும் ஒரு காரணம் எண்டா நீங்கள் நம்ப மாட்டியள். குறுக்காலை போவார் எண்டு யாரைச் சொல்லுறது எண்ட குழப்பம் உங்களுக்கு வேணுமானால் இருக்கலாம். எனக்கு இல்லை. உந்த கொன்வே எண்ட சாமானைப் போட்டு எங்கடை யாழ்ப்பாணத்திலை இருக்கிற பாதையளை கால நேர கணக்கில்லாம மூடி வைச்சிருந்த புண்ணிவான்களைத்தான் சொல்லுறன். கொன்வே எண்ட உடனை வவுனியாவுக்கு போன பஸ் கொன்வே உங்களுக்கு நினைவு வரலாம். இது அதில்லை பாருங்கோ. அதுக்கு முன்னம் அவங்கள் தங்கடை வாகனம் போறதுக்கு வைச்சிருந்தது.

எனக்கும் கொன்வே எண்டா என்னெண்டு ஒரு இழவும் தெரியாது. அம்மா சொன்னவதான் உவங்கள் பாதையை மூடி விளையாடுவாங்கள் கவனம் எண்டு. உவங்கள் தான் முகமாலை பாதையை மூடிப் போட்டாங்களே! நானே பிளைட்டிலைதானே வந்தனான். பேந்தென்ன பாதை மூடுற விசர்க கதையை மனிசி கதைக்குது எண்டு கோபந்தான் வந்தது.

உன்னாணை விசயம் உண்மைதான் பாருங்கோ! எனக்குத்தான் விசயம் விளங்கேல்லை. நானும் கன காலம் யாழ்ப்பாணப் பக்கம் புழக்கத்திலை இருக்கேல்லைத் தானே! எங்கடை காலத்திலை எண்டா முந்தி ரவுண்டப்பு தலையாட்டி எண்டு சில்லறை விசயங்கள் தான் இருந்தது.

ரவுண்டப் எண்டா எங்களுக்கு சந்தோசம்தான். போவ ஏலா எண்டு கொச்சையிலை கதைக்கிற அவனுக்கு உச்சிப்போட்டு நாள்கள் ரியுசனுக்கு போடுவம் பாருங்கோ! அவன் ஜொப் ஐடியா (JOB ID) எண்டு கேட்டா ஆட்டுறதுதானே தலையை. அப்பிடி அவன் வாங்கிப் பார்த்தாலும் அவனுக்கு இங்கிலிஸ் வாசிக்க தெரியாது எண்டு எங்களுக்கு தெரியும். பேந்தென்ன அவன் ஹரி யன்ன யன்ன எண்டா நாங்க் பண்டை (BUND) கடந்து போறதுதான்.

தற்செயலா பிடிபட்டு ரவுண்டப்புக்குள்ள மாட்டுப்பட்டாலும் அது எங்களுக்கு பெரிய விசயம் இல்லை. யாராவது வாற தலையாட்டி மாறிக்கீறி ஆட்டிப்போட்டா அவங்கள் கொண்டுபோய் போடுற போடிலை குந்தியிருந்து குசு விட்டாக்கூட நோகும் எண்டு சொல்லுறவைதான். ஆனா எங்கைளைப் பார்த்து தலையை ஆட்டினா தலையாட்டிக்குத்தான் விசர் எண்டு அவங்களே சொல்லுவாங்கள். முயல் பிடிக்கிற நாயெண்டா மூஞ்சியிலை பார்க்கவே தெரியும் பாருங்கோ!




ரவுண்டப் எண்டா அவங்கள் காலமையே தொடங்கியிடுவாங்கள். போட்ட உடுப்போடை மாடு சாய்ச்ச மாதிரி எல்லாரையும் கோயிலடிக்கு கொண்டு வந்து போடுவாங்கள். ஞாயிற்றுக் கிழமைதான் ரவுண்டப் வழமையா நடக்கிறது. உப்பிடித்தான் நைட்டியோடை வந்த நிர்மலா அக்காவை பக்கத்து வீட்டு பரமேஸ்வரன் அண்ணை பார்த்து.. அதுவே லவ்வாகி.. ஊரைவிட்டு ஓடுறளவு வந்ததெண்டா ரவுண்டப்பின்ரை பவர் உங்களுக்கு விளங்கியிருக்கும். மூஞ்சை கழுவாம பொம்புளையளைப் பார்த்தா பேயை பார்த்த மாதிரி இருக்கும் எண்டு சொல்லுறவை ஆனா பாருங்கோ நிர்மலா அக்காவை முகம் கழுவாம பார்த்தாக் கூட கிளிப்பிள்ளை மாதிரி நல்ல வடிவு. ஆனா பாவம் நிர்மலா அக்காவின்ரை தம்பிக்கு அக்காவின்ரை வடிவுமில்லை துணிவும் இல்லை. அவனுக்கு இப்ப கூட பிடிச்சு ஒழுங்கா ஒண்டுக்கடிக்கத் தெரியாதெண்டு வினாசித்தம்பி வாத்தியார் சொல்லுறவர். அது உண்மையா இருக்கலாம். ஏனெண்டா அண்டைக்கு தலையாட்டி மாறி பிழையா தலையாட்டி அவனுக்கு கொண்டுபோய்ப் போட்ட பூசையிலை மூத்திரத்தோடை இரத்தம் வந்ததாய் அப்ப கதைச்சவையள்தான்.

ஆனா எங்களுக்கு உந்த கொன்வே தெரியாது பாருங்கோ! அண்டைக்கும் அப்பிடித்தான் தின்னவேலிச் சந்திக்கு இங்காலை ஒரு அலுவலாய் வந்தனான். தாலியை கட்டுவார் கொன்வேயை போட்டுட்டாங்கள். றோட்டுக்கு அங்காலையும் போகவிடானாம். இஞ்சாலையும் வர விடானாம். ஆனா றோட்டாலை ஒரு வாகனமும் போகவும் இல்லை. எப்ப எடா கொன்வேயை திறப்பான் எண்டு கேட்டா அதுவும் தெரியாதாம். எப்ப போடுவான் எண்டதும் தெரியாதாம். மூண்டு மணித்தியாலம் ஆச்சுப் பாருங்கோ சந்தியை கடந்து போக!!!

காதலுக்கும் ஆறாம் நம்பருக்கும் என்ன தொடர்பெண்டு எனக்குத் தெரியாது. சாத்திரத்தை நான் நம்புறதும் இல்லை. ஆனா நீங்கள் ஆறாம் நம்பரோ எண்டு கேட்டு உதுகள் ஒருமாதிரிச் சிரிக்க மனசுக்குள்ளை குறுகுறு எண்டு அரிக்கிறதுதான்.

ஆனாப் பாருங்கோ காதலிக்கிறதுக்கு என்ன வேணும் எண்டு கேட்டா ஒரு பெண் மட்டும் போதும் எண்டுதான் நான் சொல்லுறனான். ஆனா என்னைக் கண்டா என்ரை பெடியளுக்கு பயம். இருக்காதே பின்னை. யாரையாவது பார்த்துவிட்டு உது யாரடா எண்டாலே பயம் பிடிச்சிடும். உவங்களைப்போலை அந்தப் பிள்ளைக்கு அண்ணன் தம்பி இருக்கோ? அவன் அடிதடிக் காரரோ ? எண்டெல்லாம் விசாரிக்குகொண்டுதான் இறங்க வேணும் எண்டா பேசாம பேசியே கலியாணத்தை செய்யலாமே? பேந்தென்ன அதிலை திறில் வேண்டிக்கிடக்கு!!!!





அண்டைக்கு ஜீவன்தான் மாட்டுப் பட்டது. வாவன் ஜீவன் உதிலை ஒருக்காப் போட்டு வருவம் எண்டு சொல்லேக்கை ஜிவனுக்கு விசயம் தெரியாது. விசயத்தை முதலே சொல்ல எனக்கென்ன விசரே? ஜீவனின்ரை மோட்டசைக்கிள் வல்லை காற்றை கிழிச்சுக் கொண்டு ஓடும். விசயத்தை முதலிலேயே சொன்னா ஆள் வறுகியிடும். போகவிட்டுச் சொல்லுவம் எண்டு விட்டிட்டன்.


வெளியின்ரை நடுவிலை மறிச்சுபோட்டாங்கள். எல்லா வாகனமும் நிண்டிட்டுது. முனியப்பரை கும்பிட எல்லா வாகனமும் நிக்கிறது வழமைதான். ஆனா அண்டைக்கு கொண்வே கடக்கும் வரை நிப்பாட்டி வைச்சிருந்த வாகனங்கள்தான் கோயிலடியிலை நிண்டது. இனி யெப்ப கொன்வே திறப்பான் எப்ப போகலாம் எண்டது இந்த முனியப்பருக்குத்தான் வெளிச்சம். அவருக்கும் அது தெரியுமோ தெரியாதோ?

ஜீவன் எங்கை போறம் எண்டு கேட்டான். அவன் இவ்வளவு நேரமும் ஜனா வீட்டை அல்லது சிவம் வீட்டை போறதெண்டுதான் நினைச்சிருந்தவன். ஜனா வீட்டையெண்டா செல்லச்சன்னிதி பாதையிலை போகவேணும். சிவம் வீட்டை எண்டா வல்லிபுரக்கோயில் பாதையிலை போகவேணும். செல்லச் சந்நிதியையும் வல்லிபுரத்தையும் விட்டா எங்களுக்கு உங்காலை ஒரு பக்கமும் தெரியாது.

நான் ”இல்லையப்பா அது வேறை வீட்டை போறம்” எண்டன். ”என்ன புதுசாத் தொடங்கியிட்டீரோ?” எண்டான். உவங்களுக்கு ஒரு நக்கல் பாருங்கோ. நான் ஆரைப் பார்த்தாலும் அதுக்கு ஒரு வருசத்துக்குள்ள வேறை யாரோடாவது கலியாணம் ஆயிடும். அப்பிடி ஒரு ராசி! அப்ப இன்னொண்டைத்தானே பார்க்கோணும். அது உவையளுக்கு நக்காலா கிடக்கு.

“என்ன பெயர்?”

சொன்னன்.

“எந்த ஊர்?”

“...எண்டு தான் நினைக்கிறன் வடிவா தெரியாது.”

“அதிலை எவ்விடத்திலை?”

எனக்கு விசர்தான் வந்தது. அந்த ஊரை இப்பத்தான் கேள்விப்படுறன். அதுக்கு எப்பிடி போறதெண்ட வழியே தெரியாது! அதுக்குள்ள பேந்து எவிவிடத்திலை எண்டா என்ன செய்யுறது?


“அவையின்ரை அப்பாவின்ரை பெயர் என்ன?”

“தெரியாது”

ஜீவன் கோபப்பட்டதுக்கு காரணம் என்ரை பதிலா இருக்க முடியாது. கனநேரம் வெயிலுக்கை நிண்டதுதான் காரணம் எண்டு நினைக்கிறன்.

ஐஸ்கீறீம் வண்டில்காரன் விற்றுக்கொண்டிருந்தான்.

வெய்யிலுக்கு குடிச்சா நல்லாத்தான் இருக்கும். நாங்கள் வரேக்கை ஒரு ஒன்பது மணியிருக்கும். அப்பத்தான் கொன்வேக்கு பாதை பூட்டினதா சொன்னவை. இனி இரண்டு மூன்று மணித்தியாலம் எடுக்கும்.

ஐஸ்கிறீம் முடிஞ்சுதாம். பின்னை அதிலை வந்து மறிபட்டு நிக்கிற சனம் எல்லாம் வேண்டினா முடியாதே? ஜூஸ்தான் இருக்கெண்டான். சரிதாவன் எண்டு வாங்கிக் குடிசாச்சு.

தண்ணியை குடிச்சா போக வேண்டியும் வருந்தானே? உந்தச் சனத்துக்கை எங்கைபோறது? தூரப்போகவும் பயமா இருந்தது. கீழை கிடக்கிறதுதுகள் காலுக்கை வெடிச்சு சிதறிப்போச்செண்டா.......அடக்கிக்கொண்டேன்.


கொன்வே திறக்க 11 30 மணியாச்சு


............................................................................

இதுதான் இந்த ஊர்.
ஏத்திக்கொண்டு வந்த ஜீவன் சொன்னான்.
ம் பிள்ளையைபோலை ஊரும் வடிவாத்தான் இருக்கு!

அப்பான்ரை பேரும் தெரியாம வீட்டுக் குறிப்பும் தெரியுயாம என்னெண்டு வீடு கண்டுபிடிக்கிறது?

பொறுங்கோ ஜீவன் இப்ப அது அவசரமில்லை!

“அப்ப எது அவசரம்? ”ஜீவனுக்கு கொஞ்சம் கோபம் வந்திருக்க வேணும்! அதுக்கு நானென்ன செய்யுறது. அப்பவே வேறை அவசரம் எனக்கு! போதாக்குறைக்கு ஜூஸ் வேறை குடிச்சாச்சு! முட்டிப் போச்சு!

நிப்பாட்டுங்கோ வண்டியை. நான் பெஞ்சிட்டு வாறன்.

“எங்கை உதிலையோ?” ஜீவனுக்கு வெட்கம் பிடிங்கித் தின்றது!

பெரிய மரமெண்டா அது வசதி பாருங்கோ! மரத்தின்ரை இடுக்குக்குள்ளை அல்லது கோறைக்கை அடிச்சிட்டு வரலாம்!

தற்செயலா உந்த நேரத்திலை அவையள் வந்தா?

ஜீவனின் பயம் நியாயமானது எண்டாலும் எந்த 12 மணி வெயிலுக்கை யார் வரப்போறா?

யாரோ வருகினமப்பா - பாதி வேலை நடந்துகொண்டிருக்கேககை ஜீவன் கத்தினான். பெய்யேக்கை கத்தினா அது நிண்டிடும். அதுக்குதான் உவர் வேலை காட்டுறார்.

எதுக்கும் எண்டு தலை திருப்பிப் பார்த்தன்.

ஓம் பாருங்கோ யாரோ பொம்பிளைப் பிள்ளையள் கூட்டமா வந்து கொண்டிருந்தினம். ஐயோ யாரோ பொம்பிளைப் பி்ள்ளையள் இல்லை. அது அநதப் பிள்ளையப்பா.
அவசரத்திலை இழுத்த இழுப்பிலை சிப்புக்குள் சிக்கிக் கொண்டது. என்ரை ஐயோ! வேதனையில் உயிர் போனது.

வயிறு இன்னமும் முட்டி நொந்து கொண்டிருந்தது.

......................................................................................................................

கனக்க கதைச்சுக் கொண்டு நில்லாதையும் பின்னேரமும் கொன்வே போடுவான். ஜீவன் சொன்னான்.

கொன்வேயோ?

நாங்கள் இப்பவே வெளிக்கிடுவம்.


அந்தப் பிள்ளைக்கும் கெதியா நிச்சயமாகிவிட்டது. என்ரை ராசி நல்லாத்தான் வேலைசெய்துகொண்டிருக்கு!

.....................

இந்தப் பிள்ளை யாரடா?

ஐயோ ஆளை விடு சாமி... ஜீவன் ஓடியே போய்விட்டான்.

இப்ப கொன்வே இல்லையாம்!

வாறியளே உதிலை ஒருக்கா போட்டு வருவம்????



















5 கருத்துகள்:

ஆதிரை சொன்னது…

ரசித்தேன்

Shiva சொன்னது…

Nice da Guru..

அருண்மொழிவர்மன் சொன்னது…

எனக்கு இந்த கொன்வே என்ர பேரே புதுசாக் கிடக்கு,

தட்டாதெருவில ஒரு தம்பிமார் அடிச்ச குண்டு டவுசரக் கிழி கிழிரென்று கிழிக்க, பின்னங்கால் பிடறியில் அடிக்க யாழ்ப்பாணத்த விட்டு ஓடியவங்கள் தானே நாங்கள்


நல்லா இருக்கடா...

கிடுகுவேலி சொன்னது…

ரவுண்டப்....இது பற்றி நிறைய பகிர்ந்து கொள்ளலாம். “கொன்வே” இதால கனபேரின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது என்றே சொல்லலாம். ம்ம்ம்ம்ம் என்ன செய்வது...இனி இவை இல்ல என்ற பெருமூச்சு மட்டும் எச்சம்.

“உங்கள் காதலைப் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை”

கிருஷ்ணபிள்ளை குருபரன் சொன்னது…

நன்றி நன்றி