எங்கடை வீட்டு பசுக் கன்றுகளுக்கு தமிழ் நல்லா விளங்குமெண்டு நான் சொன்னால் எனக்கு விசர் முத்திப்போச்செண்டு நீங்கள் சொல்லுவியள். ஆனா எங்கடை வீட்டு கன்றுக் குட்டிக்கு கண்டு வரூது எண்டு நான் கத்தினால் வலுஞ் சந்தோசம். வந்து ஒரு உம்மா கொடுத்து விட்டு போகும். உண்மையை சொன்னா உம்மா வாங்குவதற்கு நான் செய்யிற தந்திரந்தான் அது.
பொறுங்கோ உங்களுக்கு ஒரு அறுப்பும் விளங்கேல்லை எண்டு எனக்குத் தெரியும்.அதுதான் வாறன் விசயத்திற்கு. வீட்டிலை மாடு கன்று வளர்த்திருந்தியள் எண்டா இது நல்லா விளங்கும். அதுக்காக வீட்டிலை மாடு எண்டுதானே திட்டு வாங்கிறனாங்கள். அப்ப எங்கடை அப்பா அம்மாவும் மாடு வளக்கினம்தானே எண்டு கதைச்சியள் எண்டா நான் ஒண்டுஞ் செய்ய ஏலாது.
எங்கடை வீட்டிலை முதன் முதல் மாடு வாங்கினது 1985 இல எண்டு நினைக்கிறன். அப்ப எனக்கு ஆறு வயது. முன்னாலே ஒழுங்கையிலை இருந்த கந்தையரிட்டைதான் மாடு அவிழ்த்தது. பாவம் பெடியன் ஊரிலை விற்கிற தண்ணி கலந்த பாலை குடிக்காம நல்ல பால் குடிக்கோணும் எண்டு நல்ல நோக்கத்திலை மாடு வாங்கி பிறகு மாடு ஒரு நேரம் கறக்கிற ஆறு போத்தில் பால் ஆறுநேரம் குடிச்சாலும் முடிக்கேலாதெண்டு தெரிஞ்சு ஊரில வீடு வீடாய் பால்கொண்டுபோய் விக்கிற வேலையும் என்ரை தலையிலைதான் கடைசியாய் முடிஞ்சது வேற கதை.
முதலிலை வாங்கின மாட்டுக்கு சூரி எண்டு பெயர் வைத்தாயிற்று.சூரிக்குட்டி கன்னி நாகு. அது போட்ட கன்றுதான் லச்சுக்குட்டி. இலட்சுமி என்று அழகாக பெயர்வைத்தாலும் லச்சு எண்டு கூப்பிட்டாதான் அதுக்கு விளங்கும் எண்ட படியா லச்சு என்று சுருக்கியாச்சு. ( அதுக்கு பிடிச்சத பிடிக்காதது விளங்கினது விளங்காதது எல்லாம் எப்பிடி உமக்குத்தெரியும் எண்டு கேட்டு நீங்கள் எனக்கு கரைச்சல் குடுக்கக் கூடாது. அது அப்பிடித்தான்)
எங்கடை வீட்டை வளந்த மாடுகள் எல்லாமே நல்லவை. ஒரு சின்னப்பெடின் கூட போய் பால் கறக்க விடும். அது மட்டுமில்லாமல் அசைந்தால் பால்வாளி இடறிவிடும் எண்டு தெரிஞ்சு அசையாமல் நிற்கும்.ஆனாலும் இலையான் கலைக்க வாலை நன்றாகவே விசுறும். மாட்டு வால்தானே எண்டு சும்மா நினையாதையுங்கோ. சும்மா முதுகில பட்டால் தான் தெரியும் சவுக்கால அடிச்ச மாதிரி. எனவே பின்னங்கால்களையும் கட்டி அதோட வாலையும் கட்டி மடி கழுவுற வேலையை அப்பா பார்ப்பார். அப்ப எனக்கு என்ன வேலை எண்டு கேட்கிறியளோ? அங்கை ரெடியான உடனே கன்றை அவிட்டு விடுகிற வேலை எனக்குத்தான்.
பசியோடை எப்படா அவிழ்த்து விடுவான் எண்டு பார்த்துக் கொண்டு கன்று சுற்றிச் சுற்றி வரும். கையை நக்கும். முகத்தோடை முகம் உரசும். கெஞ்சும். நானென்ன செய்ய. அப்பா அங்கை ரெடியாகும் மட்டும் ஒண்டும் செய்ய முடியாது. அதுமட்டும் பொறு பொறு எண்டு சொல்லிப் பார்க்கிறது. கேட்டாத்தானே. பழையபடி வந்து கையை நக்கும். பார்க்க பாவமாய் இருக்கும்.
அங்கையெல்லாம் ரெடி எண்டவுடன் கண்டூ வரூதூ எண்டு கத்திப்போட்டு கட்டை அவிட்டு விடுவன். பேந்தென்ன. துள்ளிக் குதிச்சு ஓட்டந்தான்.
கன்று பால் குடிச்சு முடிஞ்சவுடன் வாலைத்தூக்கிக் கொண்டு வளவெல்லாம் குதிக்கும். அந்த நேரம் அதோட சேந்து குதிக்கிறதுதான் எனக்கு வேலை. எங்கடை வீடு றோட்டுப் பக்கம் எண்டதாலை கன்றுக்குட்டிக்கு றோட்டுப் புதினம் காட்ட கூட்டிக் கொண்டு போறதும் நான்தான்.
கன்றுக் குட்டியின் நெற்றியில் கொஞ்சுறதெண்டா எனக்கு நல்ல விருப்பம். ஆனா கண்டுக் குட்டிக்கு அது பிடிக்காது. தலையை அங்கையும் இங்கையும் ஆட்டும். நெற்றியிலை கொஞ்சவேணும் எண்டு நினைத்தா.... கண்டு வருது எண்டு கத்த அதுக்கு பழைய நினைவு வர ... பேந்தென்ன என்ரை வேலை வெற்றிதான்.
ஆனா பாருங்கோ பால் குடிச்ச கண்டை பிடிச்சுக் கட்டடா எண்டு அப்பா சொன்னா போங்கப்பா படிக்கிற வேலை கிடக்கு எண்ட சாட்டை சொல்லி கன்றை கட்ட போறதில்லை. கன்றைக் கட்டி அதின்ர கோபத்தை சம்பாதிச்சு பிறகு கண்டு வருது எண்டதிற்கு கிடைக்கிற கொஞ்சலை இழக்க எனக்கு என்ன விசரே???
4 கருத்துகள்:
பாவம் பெடியன் ஊரிலை விற்கிற தண்ணி கலந்த பாலை குடிக்காம நல்ல பால் குடிக்கோணும் எண்டு நல்ல நோக்கத்திலை மாடு வாங்கி பிறகு மாடு ஒரு நேரம் கறக்கிற ஆறு போத்தில் பால் ஆறுநேரம் குடிச்சாலும் முடிக்கேலாதெண்டு தெரிஞ்சு ஊரில வீடு வீடாய் பால்கொண்டுபோய் விக்கிற வேலையும் என்ரை தலையிலைதான் கடைசியாய் முடிஞ்சது வேற கதை//
அப்ப உஙட சைஸுக்கு இதுதான் காரணமா????
இதுவும் ஒரு காரணம்
//கன்றுக் குட்டியின் நெற்றியில் கொஞ்சுறதெண்டா எனக்கு நல்ல விருப்பம். ஆனா கண்டுக் குட்டிக்கு அது பிடிக்காது//
அண்ணை! பல்லுத்தீட்டாமப் பால் கறக்கப்போனாக் கண்டும் பாவம்தானே? எண்டாலும் நீங்கள் எழுதினதை வாசிக்கேக்க ஊர் ஞாபகங்கள் வருது. நன்றியண்ணை...
ம்
கண்டும் என்னைபோலத்தான்.
பல்லுத்தீட்டுறதில்லை
கருத்துரையிடுக