செவ்வாய், 10 மார்ச், 2009

பஞ்சாமிருதம்





நான் கோயிலுக்கு போறதுக்கு ஒரு காரணம் அங்கை தாற பஞ்சாமிருதமும் தான். நான் மட்டுமல்ல எனது காலத்தில குஞ்சு குருமானாய் இருந்த எல்லாரும் கோயில் வருறதுக்கு காரணம் பஞ்சாமிருதம் எண்டா நீங்கள் கோவிக்கக் கூடாது. அப்ப பஞசாமிருதம் எண்டா ஊரிலை இருந்த மிக அழகான பெண்மணி என்று தப்புத்தப்பா நீங்கள் நினைச்சுப்போடக் கூடாது எண்டதுக்காகவே முதலே இதைச்சொல்லோணும். அப்ப எங்களுக்கு ஒரு ஏழு எட்டு வயதிருக்கும்.



ஐயர் தருகிற விபூதி சந்தனத்திற்கு கையை நீட்டுறமோ இல்லையோ பஞ்சாமிருதத்திற்கு இரண்டு தரம் நீளும். பஞசாமிருத்ம் குடுக்கிற ஆளும் லேசுப் பட்டதோ? கையிலை முதல் தரம் வாங்கி நக்கின ஈரத்தை கண்டு பிடிச்சு இரண்டாம் தரம் கிடைக்கிறது சிலவேளை மறுக்கப்படும். நாங்களும் பின்னை வேசுப்பட்ட ஆக்களே? முதல் தரம் வலது கையை நீட்டினா பிறகு இடது கையை நீட்டுறது.

இல்லாட்டா கோயில் தூணிலை ஒரு அப்பு அப்பீட்டு வெறுங்கையை காட்டுறது. பின்னை என்ன இவ்வளவு ருசியான சாமான் குடுக்கேக்கை...ஆனா உந்தக் கள்ளங்களை பிடிக்கவோ என்னவோ இடது கைக்குமேலே வலது கையை வைச்சு இரண்டுகையாலையும் மரியாதையாக வாங்கவேண்டும் எண்டு கோவில் ஐயா சின்னப்பெடியளுக்கு சொல்லுவார். திருநீறு சந்தனம் தீர்த்தம் வாங்கவெண்டா சரி. மரியாதை குடுக்கோணும். பஞ்சாமிருதத்திற்கு என்னத்திற்கு...
வெட்கத்தை தூக்கி கக்கத்திற்கை வைச்சுக்கொண்டு அணணை அண்ணை எண்டு பஞ்சாமிருத சட்டியை கலைச்சுக்கொண்டு....
அதையேன் கேட்கிறியள். ரேஸ்தான.


சிலவேளை பஞ்சாமிருத ஜக்பொட் அடிக்கும். யாரும் வயதுபோனவை தாங்கள் வாங்கின பஞ்சாமிருத்தையும் இந்தாடா மோனை எண்டு தந்திட்டு போவினம். அன்பிலையோ அல்லது அவைக்கு சீனி வருத்தமோ யாருக்கு தெரியும்! அதுவா எமக்கு முக்கியம்!

கொஞசம் வளர்ந்த பிறகு பஞ்சாமிருதத்திற்கு கை நீட்ட வெட்கம். அதுவும் அண்ணை அண்ணை எண்டு கலைச்சுக்கொண்டு போக முடியுமே? அதுக்கும் ஒரு வழி கண்டு பிடித்தம். கோவிலிலை தீவட்டி காவினா அல்லது தீவட்டிக்கு எண்ணைச் சட்டி காவினா கட்டாயம் கடைசியில பஞ்சாமிருத்ம் கிடைக்கும். கடவுளின்ர அருள் கிடைக்குதோ இல்லையோ பஞ்சாமிருத்ம் கிடைப்பதில் நாங்கள் வலுங் கவனம். வாழைப்பழம் மாம்பழம் பிலாப்பழம் முந்திரிகை வத்தல் தேன் சிலவேளை கசுக்கொட்டை தேசிக்காய் எல்லாம்போட்டு பஞ்சாமிருதம் படு ஜோராக இருக்கும்.

கொழும்பு வந்த புதிதில் என்ர பழைய சிநேகிதன் ஒருத்தன் எம் சிக்கு கூட்டிக்கொண்டு போனான். அங்கை மூணன்று பஞசாமிருதத்திற்கு மன்னிக்கவும் இங்கை அதன் பெயர் புரூட் சலட்டாம் - ஓடர் பண்ணினான். 
ஐயற்றை பஞ்சாமிருத்ம் மாதிரி அது ரேஸ்டும் இல்லை. பில்லை கண்ட எனக்கு மூச்சும் இல்லை. 

கோயிலிலை சும்மா நாங்கள் வேண்டிற பஞ்சாமிருத்திற்கு இங்கை 60 ரூபா ( 2000 ஆம் ஆண்டில்) எடுத்துப்போட்டான்.

கொழும்பிலையும் நாங்கள் கன்க்க கோயில் கட்டோணும்.