புதன், 15 ஏப்ரல், 2009

கொட்டேக்கை பிடிச்சன் எண்டா....


யாழ் இந்துக் கல்லூரிப் பெடியளுக்கு படிப்பிக்கிறதெண்டா அது ஒரு கலை பாருங்கோ. அதுதான் அந்தக் காலத்தில ஒருபொம்புள ரீச்சரும் அங்க படிப்பிக்க வாறேல்லை. நான் சொல்லுறது 1990- 1998 காலப்பகுதி. அப்ப எனக்குத் தெரிஞ்சு சங்கீதத் ரீச்சரும் அதுக்கு பிறகு 1991 அளவில வந்த பொட்னி ரீச்சரையும் தவிர வேறொருவரும் பொம்பிளை ரிச்சரில்லை. பிரின்சிபல் ஒபிசில இருந்த டைபிஸ்டை தவிர ஒபிசில கூட ஒரு பொம்பிளையளும் வேலை செய்யேல்லை.







சரி பொறுங்கோ

சொல்ல வந்த விசயத்தை விட்டிட்டு நான் வேற எங்கையோ சுத்திறன். ( படிக்கப்போறன் எண்டு சொல்லிப்போட்டு சுத்திப் பழகி இப்ப அந்தப் பழக்கம் விடுகுதில்லை)

படிப்பிக்கவே பயபபடும் இடத்தில உபஅதிபராக இருக்கிறதெண்டா சின்ன விசயமா?

இருந்து காட்டினவர்

எலியர்.

என்னடா ஆசிரியரை அதுவும் ஒரு உப அதிபரை பட்டப்பெயர் சொல்லிக் கூப்பிடுறானே எண்டு கோவிக்காதையுங்கோ. மகேந்திரன் சேர் எண்டு சொன்னா கனபேருக்கு அவரைத் தெரியாது. அதுதான்.

எலியர் நாங்கள் ஆறாம் ஆண்டில 1990 இல போய்ச் சேர்ந்தபோது எங்களளவு உயரத்தில இருந்தவர். நாங்கள் வகுப்பு ஏற ஏற வளர்ந்து கொண்டு போனனாங்கள். பாவம் அவர் உயரத்தில வளரேல்லை.

ஆனாலும் எலியர் வாறார் எண்டா உந்தப் புரளிகாரனும் அடங்கிவிடுவான். காரணம் அவர் முதுகுப்புறமாய் மறைத்து (?!) வைச்சிருக்கிற வால்தான். மன்னிக்கவும் பிரம்புதான். சவல் அடி கிடைக்கிற பயத்திலை எல்லாம் அடங்கியிடும்.
உப்பிடித்தான் ஒருநாள் அதிபர் அலுவலகத்திற்கு அருகிலுள்ள வகுக்கறைகளுக்கு விஜயம்(திக்விஜயம்) செய்துகொண்டிருந்த எலியரின்ர கண்ணிலை பொறி பறந்தது. அது ஆண்டு 11 படிக்கிற அண்ணைமாரின் வகுப்பறை. அதிலை சாப்பிட்டிட்டு எறிய ஒரு குப்பைவாளி வைக்கப்பட்டிருந்தது. சாப்பிட்ட மிச்சங்களை அதுக்குள்ள போடச்சொல்லி பெரிய டிரம் வைச்சிருந்தவர்.

எங்கடை பொடியள் சாப்பிட்டு விட்டு வகுப்பிலிருந்தே எறிய (அதுவும் என்னை மாதிரி இலக்காய் எறிய முடியாத பலபேர் அந்த வகுப்பிலை படிச்சிருக்கும் எண்டு நினைக்கிறன்) அந்த குப்பையெல்லாம் வாளிக்கு வெளியே சிதறிக்கிடந்நதது.

யாரடா வெளியில கொட்டினது

வகுப்பே மௌனம்.

கொட்டேக்க பிடிச்சனெண்டா.... பிறகு தெரியுந்தானே.....

வகுப்பே கொல் எண்டு சிரிச்சது.

பிறகு என்ன நடந்தது எண்டே கேக்கிறியள்.






ஒண்டா இரண்டா எண்ணுறதிற்கு?

முதுகு பழுத்துபோச்சு முழு வகுப்பிற்கும்.

விளங்காம நீங்களும் முழுசிறியளே....

மிச்சத்தை வெளியிலை கொட்டேக்கை பிடிச்சனெண்டா அடிப்பன் எண்டு அவர் சொல்ல வந்தது டைமிங்கில வேறமாதிரி ஆகி....
சரி விடுங்கோ இன்னும் விளங்கேல்லை யெண்டா

புதன், 18 மார்ச், 2009

18.03.2000

தலைப்பை பார்த்த உடனே இது என்ர பிறந்த நாளோ அல்லது அவளை முதல் முதல் கண்ட நாளோ இல்லை அல்லது அவவின்ர பிறந்தநாளோ ( ம். நிறைய குறும்பு உங்களுக்கு) எண்டு நினைச்சிடாதையுங்கோ. எனக்கு ஏதோ நேற்று நடந்த மாதிரிக் கிடக்கு. அண்டைக்குத்தான் நான் முதன்முதலிலை விமானம் ஏறினது. விமானம் எண்டா ஏதோ லண்டனுக்கு போற போயி்ங் அல்லது கனடாவுக்கு போன ஜெட் எண்டெல்லாம் கண்ட பாட்டுக்கு கற்பனையை அவிட்டு விட்டிட்டு கஸ்டப் படாதையுங்கோ. நானே சொல்லுறன். அதுபாருங்கோ எங்கடை யாழ்ப்பாணம் கொழும்பு பிளைட்தான். இப்ப விளங்கியிருக்கும் உங்களுக்கு - இது லண்டன் பிளைட்டை விட விசேசமானதெண்டு.

கொழும்புக்கு வாறதெண்டா தமிழனுக்கு எப்பவும் பிரச்சனைதான். எங்கடை அப்பு , முட்காவின்ர ( முட்கா யார் எண்டு உங்களுக்கு தெரியாது தானே- அது எங்கட அம்மா சாட்சாத் செல்வராணியே தான்.) இன்ர சிட்டி ரெயினிலை செகண்ட கிளாஸ் வாரண்டிலை அதிஷ்டம் கிடைச்சா சிலிபிறேற்று சீட்டிலை போன காலம் ஒண்டு இருந்தது எனக்கும் சாடையா ஞாபகம். ஆனாப் பாருங்கோ எனக்கு நினைவில நிக்கிறதெல்லாம் பாஸ் எடுத்து கொழும்பு போறதுதான். அதுவும் 1990 -1995 காலப்பகுதியெண்டா அவயிற்றையும் 1996 இலிருந்து இப்பவரை இவையிற்றையும் பாஸ் எடுத்தாதான் கொழும்பு போகலாம். அவையிவை யாரெண்டு தெரியாத ஆக்கள் பேசாமல் மூடிவைச்சிட்டு நித்திரையை கொள்ளுங்கோ. எனக்கு விசர் வந்திடும். நாட்டு நிலை தெரியாத நீஙகள் எல்லாம் மனிசரே? சரிசரி. ஏதோ என்ர வயித்தெரிச்சலிலை நானும் “வள்சுள்” எண்ணுறன் எண்டுட்டு கோபிச்சு கொண்டு போயிடாதையுங்கோ. உங்களை விட்டா எனக்கு வேற யார் இருக்கினம்?







அது ஒருபெரிய கதை பாருங்கோ. நான் கடைசியா கொழும்பு வந்தது 1989 இல.அப்ப வந்தது ரெயினிலை. அப்ப வந்து முந்தி நான் படிச்ச மூர் றோட்டு நேசரி, அப்பாவோட வேலை செய்த குசும் அன்ரி இப்பிடி கொஞ்ச ஞாபகங்களை புதுப்பிச்சு போட்டு போனதுதான். குசும் அன்ரியை என்னெண்டு நினைவு வச்சிந்தாய் எண்டு கேளாதையுங்கோ. பருப்பு திண்டா வாறதுக்கும் அவவின்ர பெயருக்கும் கிட்டத்தட்ட கனெக்சன் ஒண்டு இருக்கிறமாதிரி ஒரு ஹலுசினேசன்தான்.

1996 இல காங்கேசன்துறையிலை இருந்து திருகோணமலைக்கு தமிழ் தினத்துக்கு கப்பலிலை ( ஓசியிலதான்) போனது ஒரு பயணம். அதுக்குப்பிறகு 2000 இலதான் யாழ்ப்பாணத்தால குடிபெயர்ந்தது.



சரி வந்த விசயத்தை விட்டிட்டு...
1998 இல ஏ எல் பாஸ் பண்ணினாலும் 2000 ம் ஆண்டுவரை சும்மா றோட்டிலை திரிஞ்சதுதான் வேலை. ஏனெண்டா கம்பஸ் 2000 ம் ஆண்டு ஓகஸ்டு 21 தான் துவங்கினது. அப்ப என்னத்துக்கு உந்த மூதேவி மார்ச்சிலையே வெளிக்கிட்டது எண்டு நீங்கள் கேட்கக்கூடாது. பாஸுக்கு நான் ஜனவரியிலேயே அப்ளை பண்ணிப்போட்டன். ஏதோ கடவுள் புண்ணியத்திலை மிக விரைவாக (??!!) மார்ச்சிலையே கிடைத்துவிட்டது. பாஸ் எடுத்தா ஒருமாதத்துக்குள்ள வெளிக்கிட்டிட வேணும். இல்லாட்டா பேந்து புதுப் பாஸ் எடுக்க வேணும். தவிர இங்கிலிசு கோஸ் ஏப்ரலிலை துவங்கும் எண்டு யாரோ சொன்னதால மார்சிலையே வெளிக்கிட்டாச்சு.

பாஸ் எடுக்கிறதெண்டா அதுக்கு போம் இருக்கு. அதை நிரப்பி விதானையாரிட்டை சைன் வாங்கி ( அது வாங்கேக்கை குடும்ப காட் கொண்டு போகவேணும்) பிறகு ஏ ஜீ ஏ யிட்டை சைன் வாங்கி பிறகு உடுவில் காம்பிலை குடுக்கவேணும். அவன் பேநது கொக்குவில் காம் காரணுக்கு அனுப்ப அவங்கள் கிளியர் பண்ணி திரும்பி அனுப்புவாங்கள். அதுக்கு பிறகு பேப்ரிலை பெயர்வரும். அந்தப் பெரிய லிஸ்டிலை என்ர பேரை தடவிப்பிடிச்சு ( எப்பவரும் எண்டு தெரியாததால ஒவ்வொருநாளும் பேப்பர் வாங்கிப் பார்க்கோணும்) பிறகு நாலாம் குறுக்குத்தெருவுக்கு போகவேணும். அங்கைதான் டோக்கன் எடுக்கிறது. டோக்கன் கிடைச்சா கிட்டத்தட்ட விசா கிடைச்ச மாதிரித்தான். பிறகு டோக்கனை கொண்டு கிளியரண்ஸ் எடுக்கோணும். அந்த கிளியரண்சை கொடுத்தா ஒரு டேட்டிலை டிக்கட் போட்டு தருவினம். கையோட காசையும் கொண்டு போக வேணும். டிக்கட் எடுத்தா பிறகு பிளைட் ஷுவர்தான். எண்டாலும் பேப்பரை பார்க்கவேணும் பிளைட் நிப்பாட்டி போட்டாங்களோ இல்லை ஓடுதோ எண்டு.

எம்பெருமானின் அளப்பெரும் கருணையாலும் நாங்கள் செய்த பூர்வ ஜென்ம புண்ணியத்தாலும் பிளைட் கான்சல் ஆகேல்லை. 18ம் திகதி பிளைட்.

18.03.2000
அப்ப ஓடின பிளைட் லயன் எயார் எண்டு நினைக்கிறன். சரியா ஞாபகம் இல்லை.
செகண்ட் பிளைட்.

காலை 6மணி.
நாலாம் குறுக்குத் தெரு.
தெருச் செக்கிங்.(இராணுவம்)
பொடி செக்கிங்.

சிவில் அலுவலகம் - நாலாம் குறுக்குத்தெரு யாழ்ப்பாணம்.
மீண்டும் செக்கிங்.( மிரிடரி பொலிஸ்)

பஸ்சுக்கு காத்திருப்பு.
பஸ் வருகை.
செக்கிங் ( விமானப்படை)

பஸ் ஏறி தெல்லிப்பளை பயணம். (அப்ப தெல்லிப்பளைதான் பொயிண்டு- கப்பல் எண்டா என்ன பிளைட் எண்டா என்ன)

பஸ் மாற்றி ஏற்றப்படல். (யாழ்ப்பாண பஸ் தெல்லிப்பளைக்கு அங்கால போகாது)
ஸ்கொட்டுக்காக காத்திருப்பு ( ஸ்கொட் என்பது பாதுகாப்புக்காக பஸ்ஸை சுற்றி வரும்வாகனங்கள்.)

பஸ் எல்லாம் வெளியே பார்க்க முடியாதவாறு கறுப்படிச்ச கண்ணாடி. ஜன்னல் திறக்க முடியாது. பஸ்ஸில் ஏ சியோ பானோ இல்லை.

காலை 9 மணி
பலாலியை அடைதல். (வாழ்க்கையில் முதன்முதல் பலாலியில் கால்வைத்த நாள்)

காத்திருத்தல் காத்திருத்தல் காத்திருத்தல்.

பகல் 2 மணி
செக்கிங் முடிந்து உள்ளே போதல்.

பசி பசி பசி
அம்மா கட்டித்தந்த புட்டுப் பாசலை நானும் அப்பாவுமாக வெட்டல்.
பேச்சுத் துணைக்கு நிசாந்தன்.
நிஷாந்தன் யாரெண்டு தெரியாதென்ன. அவன்தான் மட்ஸிலை டிஸரிறிக் பெஸ்ட்.( மாவட்டத்திலை முதலாம் பிள்ளை எண்டு தமிழிலை சொல்லடா என் நீங்கள் குளறுவது எனக்கும் கேட்குது)

மாலை 3 மணி.
பிளைட்டுக்கு ஆக்களை எடுத்தல்.

மாலை 3.30 மணி
பிளைட் வெளிக்கிடல்.

மாலை 4.30 மணி
கட்டுநாய்ககாவை அடைதல் ( அப்ப இரத்மலானையிலை இறக்கிறதில்லை)

மாலை 5.00 மணி
அழகான ஏ சி ரூரிஸ்ட் பஸ்ஸில் ஏற்றப்படல்.
( இவ்வளவு நேரமும் வெயிலிலை காய்ந்து வேர்த்து விறுவிறுத்த எங்கடை உடம்பின்ர வாசம் எங்களுக்கே தெரியதொடங்கியது.)
இந்த கட்டுநாயக்கா கொழும்பு பயணத்திற்கு பிறிம்பா 75 ரூபா வாங்கினது வேற கதை.
எண்டாலும் ஏசி சொகுசு பஸ்ஸில் முதல் அனுபவம். அதுவும் கண்ணாடி கறுப்பில்லை. வெளியே பார்க்கமுடியும்.

பஸ் கொழும்பின் நரகமான டிரபிக்கில் சிக்கிக்கொண்டது.

மாலை 7.30.00
கொழும்பு றீகல் தியேட்டர் வாசலிலை இறக்கிவிடப்படல்.கவனிக்க தியேட்டர் வாசல்.
( இது லேக் ஹவுஸ் முன்னே உள்ளது.)

மாலை 7.30.01
முச்சக்கர வண்டி சாரதிகளால் சூழப்படல்.

ஒரு ஓட்டோ காறனிடம் அப்பா சிங்களத்தில்..

இந்த இடத்துக்குபோக எவ்வளவு...

ம். ஐயா நீங்கள் இப்ப நிக்கிறது கொழும்பு 02 (அதெண்டா உண்மைதான்) இது கொழும்பு 13 ( செக்கட்டித்தெரு) ஒரு 500 ரூபா தாங்கோ.

வேண்டாம். நாங்கள் நடந்தே போறம்.

ம். 25 நிமிடங்கள் நடந்து செக்கடித்தெருவுக்கு வந்துவிட்டோம்!!!!!

1995 இல 10 மைல் நடந்தே இடம்பெயர்ந்த எங்களிடமா?

ஹாஹாஹா

கொழும்பு பொல்லாத ஊர்தான் என்ன??????!!!!

18.03.2009

ஞாயிறு, 15 மார்ச், 2009

நகம் கழட்டின கதை

வேலை செய்யும்போது ஒவ்வொருவருக்கும் கட்டாயம் நிறைய அனுபவங்கள் வரும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொருமாதிரியானவை. அப்போது நான் காசல் வீதி மகளிர் மருத்துவ மனையில் வேலை செய்துகொண்டிருந்தேன். உள்ளக மருத்துவ பயிற்சிக் காலம் (இன்ரேண்சிப்) என்றது இளமருத்துவர்களைப் பொறுத்தவரை சக்கை பிழிந்து வேலை செய்ய வேண்டிய காலம். அதுவும் காசல் வீதியில் என்றா எள் என்ன முன்னம் எண்ணையா நின்று வேலை செய்ய வேணும். எல்லா இடமும் அப்பிடித்தானே அதிலை என்ன காசல் ஸ்பெசல் எண்டு நீங்கள் கேட்கலாம். 5 எஸ் என்கிற முறையோடு நல்ல ஒரு ஸ்ராண்டட்டில் இயங்கின ஒரு வைத்தியசாலை காசல். பொறுங்கோ நான் சொல்ல வந்த விசயத்தை மறந்துபோட்டு வேற ஏதோ உளறுறன்.



வோட் 5 மற்றும் 6 இல் வேலை செய்தவர்களுக்கு டொக்ரர் தயானந்தா என்றா தெரியாமா இருக்காது. ஒரு சிடுமூஞ்சி என்று பெயர் இருந்தாலும் ஆள் பயங்கர கெட்டிக்காரன. கலியாணம் கட்டாம இருக்கும் அவருக்கு எங்கடை நேசுகள் பல கதைகள் சொன்னாலும் நாங்கள் அதை பொருட்படத்திறதில்லை. அது அவரவர் சொந்த விசயம் தானே. கிட்டத்தட்ட தூசணத்தில பேசக்கூடிய ஒரு கோபக்காரன் என்றாலும் அப்ப கொன்சல்டண்ட் ஆக இருந்த டொக்ரர் வர்ணகுலசூரிய உட்பட பலரும் பெருமதிப்பு வைத்திருந்தது தயானந்தாவிலதான். அந்தாளின்ர ஸ்கானிங் எல்லாம் அந்தளவு திறம். இப்பிடி இருந்ததால அவர் வந்தாலே ஒரு பயபக்தியுடன் கூடிய அமைதி அந்த இடத்திலை இருக்கும். ஆனாலும் கொஞ்சம் பஞ்சி பிடித்த மனிசன். குறிப்பிட்ட நேரத்தை விட மேலதிகமாக வேலை செய்ய கொஞசம் பஞ்சிப்படும்.







அண்டைக்கும் அப்பிடித்தான். நாங்கள் தியேட்டருக்குள்ள. தியேட்டர் என்றால் அது ஒப்பிரேசன் தியேட்டர். காசல் வீதியில மருதானை சினி சிட்டி மாதிரி மூன்று தியேட்டர் ஒரே நேரத்தில ஓடும். அதால தான் அதை தியேட்டர் கொம்பிளக்ஸ் எண்ணுறது. தியேட்டர் ஏயும் பீயு்ம் பக்கத்து பக்கத்தில. இரண்டிலும் எங்கடை வோட் படம்தான் ஓடிக்கொண்டிருந்தது. ஏ பக்கம் சீசர். பீ பக்கம் மற்ற ஒப்பிறேசனுகள். ஏ பக்கம் டொக்டர் தயானந்தாவும் உதவிக்கு நானும். பீ பக்கம் பாபுவும் சியாமளன் அண்ணையும்.

எங்கடை பக்கம் அண்டைக்கு வேலை வெள்ளண முடிஞ்சுது. சியாமளன் அண்ணை ஒன்றிரண்டு சின்னக்கேஸ் இங்கால போட்டு செய்யலாமே எனக் கேட்க.... ஓம் செய்யலாம்தான். ஆனா தயானந்தாவிட்ட ஆர் கேட்கிறது எண்டது பிரச்சனை. நான் எதுக்கும் துணிஞச கட்டை எண்டதால போய் கேட்டன். அந்தாள் மணிக்கூட்டை பார்த்துது. மத்தியானம் 12 மணிக்கு இன்னும் 10 நிமிடங்கள் தான் இருந்தது. பசியாக்கும். மேலையும் கீழையும் யோசித்துவிட்டு மாட்டன் எண்டு தலையாட்டி விட்டது. 

12 மணி விசிட்டிங் அவர். பேசண்டுகளை பார்க்க விசிட்டர்ஸ் வரும் நேரம். தியேட்டர் வாசலில் பெரிய சத்தம்.

பார்த்தால் வந்த விசிட்டர் ஒருவரின் கால் பெருவிரல் நகம் கழண்டு இரத்தம் ஒழுகிபக் கொண்டிருந்தது. அது தியேட்டர் நேர்ஸின் உறவினரோ தெரியாது - ஒருக்கால் மருந்து கட்டுவம் எண்டு தியேட்டர் வாசலுக்கு வந்திருந்தா. சும்மா மருந்து கட்டப்போன் நேர்ஸ் பார்த்துவிட்டு பயந்து டொக்ரர் இது நகம் கழட்ட வேண்டிய கேஸ்போல இருக்கு ஒருக்கா பாருங்கோ எண்டது. நேர்ஸ் கேட்டு டொக்ரர் மாட்டன் எண்ணுறதா. பார்த்தால் நகம் அரைவாசி பிய்ந்து தொங்கிக்கொண்டிருந்தது. நடந்தது என்னவெண்டால் அந்தப் பெண்மணியின் கணவர் வோட்டுக்கு போகும் அவசரத்தில் உள்ளே போக, இன்னமும் 12 மணியாகவில்லை சற்று பொறுங்கள் எண்டு வாயில் காவலன் தடுக்க, பின்னாலே ஒரு அடியெடுத்து சைத்தவர் வைத்தத தனது மனைவியின் பெரு விரலில்.

என்னதான் 5000 ரூபாவுக்கு வாங்கிய நல்ல சூ வாக இருந்தாலும் காலை மிதித்தால் நகம் பிய்யத்தானே செய்யும். பிய்ந்து விட்டது. அவர்கள் வந்த வாட்டு 9 தியேட்டருக்கு அருகில் இருந்ததால் காயத்துக்கு மருந்து போட உள்ளே வந்த பெண்மணியின் நகத்தை பிய்க்கும் பொறுப்பு மன்னிக்கவும் நகத்தை லோக்கல் அனஸ்தீசியாவில் கழட்டும் பொறுப்பு என் தலையில். மாட்டன் என்று சொல்லியிருக்கலாம். பசிவேறு. ஆனாலும் சொல்லவில்லை.

டிரெசிங் செட் தயாராகி வந்தது. அந்த நேரம் பார்த்து தியேட்டர் உடுப்பை மாற்றிவிட்டு வந்த தயானந்தாவின் பார்வையும் இதில் விழுந்தது. தான் கழட்டி தருவதாக சொல்லி வேலையை துவங்க எனது தலைப் பாரம் குறைந்தது. ஆனால் தியேட்ர் நேர்ஸ்மாருக்கு கலக்கம் கூடிவிட்டுது. ஏனென்றால் ஏதாவது சின்னப் பிழை விட்டாலும் சப்பல் பேச்சு பேசும் மனிசன். எல்லாம் ரிப்டொப்பாக வேலை நடந்தது. விறைப்பு ஊசிமருந்து ஏற்றிவிட்டு நகம் பிடுங்கவேண்டும். ஊசியை கண்டதும் வெலவெலத்து அந்தப் பெண்மணி என் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டார். ஊசியேற்றும்போதோ சொல்லவே வேண்டாம். ஒரு பெரிய குரலில் குழறி என்னை ஒரு தூண் என நினைத்து கட்டிப் பிடித்துக் கொண்டார். அட அந்த நேரம் பார்த்தா மற்ற தியேட்டர் வேலை முடிஞசு சியாமளன் அண்ணை வரவேணும்?. பிடித்தது சனி!!!

எட நான் ஒரு சின்ன கேஸாவது செய்து தாங்கோடா என கேட்க மாட்டன் எண்டு போட்டு ஆரோ ஒரு வடிவான பெட்டைக்கு ( அட அதுக்கு பிறகுதான் பார்த்தன் - உம் உண்மையிலை வடிவுதான்.) நகம் புடுங்கிக் கொண்டிருக்கிறாங்கள்!!!

நகம் பிடுங்கி முடிந்து மருந்து போட்டு அந்தப் பெண்மணி வெளியே போயும் ஆயிற்று. ஆனா சின்ன ஒப்பிறேசனுக்கு உதவாமல் வெளியில வந்து நகம் பிடுங்கின கதை சிறந்த கதை வசனம் மற்றும் டைரக்க்ஷனில் உருவாகி விட்டது.

பேந்தென்ன வந்த போன நேர்ஸ் எல்லாம் டொக்டர் நகம் புடுங்குவமே என கேட்டு கேட்டு (உம் வேற யாரை கேட்கமுடியும் டொக்ரர் தயானந்தாவையா?) அறுத்து தள்ளிவிட்டார்கள்.

தியேட்டர் முழுதிலும் இவ்வாறு எனது படமே ஓட்டப் பட்டுக்கொண்டிருந்ததால் நான் ஒரு கிழமை தியேட்டர் பக்கம் போகவே இல்லை!!!!

2007






செவ்வாய், 10 மார்ச், 2009

பஞ்சாமிருதம்





நான் கோயிலுக்கு போறதுக்கு ஒரு காரணம் அங்கை தாற பஞ்சாமிருதமும் தான். நான் மட்டுமல்ல எனது காலத்தில குஞ்சு குருமானாய் இருந்த எல்லாரும் கோயில் வருறதுக்கு காரணம் பஞ்சாமிருதம் எண்டா நீங்கள் கோவிக்கக் கூடாது. அப்ப பஞசாமிருதம் எண்டா ஊரிலை இருந்த மிக அழகான பெண்மணி என்று தப்புத்தப்பா நீங்கள் நினைச்சுப்போடக் கூடாது எண்டதுக்காகவே முதலே இதைச்சொல்லோணும். அப்ப எங்களுக்கு ஒரு ஏழு எட்டு வயதிருக்கும்.



ஐயர் தருகிற விபூதி சந்தனத்திற்கு கையை நீட்டுறமோ இல்லையோ பஞ்சாமிருதத்திற்கு இரண்டு தரம் நீளும். பஞசாமிருத்ம் குடுக்கிற ஆளும் லேசுப் பட்டதோ? கையிலை முதல் தரம் வாங்கி நக்கின ஈரத்தை கண்டு பிடிச்சு இரண்டாம் தரம் கிடைக்கிறது சிலவேளை மறுக்கப்படும். நாங்களும் பின்னை வேசுப்பட்ட ஆக்களே? முதல் தரம் வலது கையை நீட்டினா பிறகு இடது கையை நீட்டுறது.

இல்லாட்டா கோயில் தூணிலை ஒரு அப்பு அப்பீட்டு வெறுங்கையை காட்டுறது. பின்னை என்ன இவ்வளவு ருசியான சாமான் குடுக்கேக்கை...ஆனா உந்தக் கள்ளங்களை பிடிக்கவோ என்னவோ இடது கைக்குமேலே வலது கையை வைச்சு இரண்டுகையாலையும் மரியாதையாக வாங்கவேண்டும் எண்டு கோவில் ஐயா சின்னப்பெடியளுக்கு சொல்லுவார். திருநீறு சந்தனம் தீர்த்தம் வாங்கவெண்டா சரி. மரியாதை குடுக்கோணும். பஞ்சாமிருதத்திற்கு என்னத்திற்கு...
வெட்கத்தை தூக்கி கக்கத்திற்கை வைச்சுக்கொண்டு அணணை அண்ணை எண்டு பஞ்சாமிருத சட்டியை கலைச்சுக்கொண்டு....
அதையேன் கேட்கிறியள். ரேஸ்தான.


சிலவேளை பஞ்சாமிருத ஜக்பொட் அடிக்கும். யாரும் வயதுபோனவை தாங்கள் வாங்கின பஞ்சாமிருத்தையும் இந்தாடா மோனை எண்டு தந்திட்டு போவினம். அன்பிலையோ அல்லது அவைக்கு சீனி வருத்தமோ யாருக்கு தெரியும்! அதுவா எமக்கு முக்கியம்!

கொஞசம் வளர்ந்த பிறகு பஞ்சாமிருதத்திற்கு கை நீட்ட வெட்கம். அதுவும் அண்ணை அண்ணை எண்டு கலைச்சுக்கொண்டு போக முடியுமே? அதுக்கும் ஒரு வழி கண்டு பிடித்தம். கோவிலிலை தீவட்டி காவினா அல்லது தீவட்டிக்கு எண்ணைச் சட்டி காவினா கட்டாயம் கடைசியில பஞ்சாமிருத்ம் கிடைக்கும். கடவுளின்ர அருள் கிடைக்குதோ இல்லையோ பஞ்சாமிருத்ம் கிடைப்பதில் நாங்கள் வலுங் கவனம். வாழைப்பழம் மாம்பழம் பிலாப்பழம் முந்திரிகை வத்தல் தேன் சிலவேளை கசுக்கொட்டை தேசிக்காய் எல்லாம்போட்டு பஞ்சாமிருதம் படு ஜோராக இருக்கும்.

கொழும்பு வந்த புதிதில் என்ர பழைய சிநேகிதன் ஒருத்தன் எம் சிக்கு கூட்டிக்கொண்டு போனான். அங்கை மூணன்று பஞசாமிருதத்திற்கு மன்னிக்கவும் இங்கை அதன் பெயர் புரூட் சலட்டாம் - ஓடர் பண்ணினான். 
ஐயற்றை பஞ்சாமிருத்ம் மாதிரி அது ரேஸ்டும் இல்லை. பில்லை கண்ட எனக்கு மூச்சும் இல்லை. 

கோயிலிலை சும்மா நாங்கள் வேண்டிற பஞ்சாமிருத்திற்கு இங்கை 60 ரூபா ( 2000 ஆம் ஆண்டில்) எடுத்துப்போட்டான்.

கொழும்பிலையும் நாங்கள் கன்க்க கோயில் கட்டோணும்.

வெள்ளி, 6 மார்ச், 2009

கண்டூ வரூதூ


எங்கடை வீட்டு பசுக் கன்றுகளுக்கு தமிழ் நல்லா விளங்குமெண்டு நான் சொன்னால் எனக்கு விசர் முத்திப்போச்செண்டு நீங்கள் சொல்லுவியள். ஆனா எங்கடை வீட்டு கன்றுக் குட்டிக்கு கண்டு வரூது எண்டு நான் கத்தினால் வலுஞ் சந்தோசம். வந்து ஒரு உம்மா கொடுத்து விட்டு போகும். உண்மையை சொன்னா உம்மா வாங்குவதற்கு நான் செய்யிற தந்திரந்தான் அது.

பொறுங்கோ உங்களுக்கு ஒரு அறுப்பும் விளங்கேல்லை எண்டு எனக்குத் தெரியும்.அதுதான் வாறன் விசயத்திற்கு. வீட்டிலை மாடு கன்று வளர்த்திருந்தியள் எண்டா இது நல்லா விளங்கும். அதுக்காக வீட்டிலை மாடு எண்டுதானே திட்டு வாங்கிறனாங்கள். அப்ப எங்கடை அப்பா அம்மாவும் மாடு வளக்கினம்தானே எண்டு கதைச்சியள் எண்டா நான் ஒண்டுஞ் செய்ய ஏலாது.

எங்கடை வீட்டிலை முதன் முதல் மாடு வாங்கினது 1985 இல எண்டு நினைக்கிறன். அப்ப எனக்கு ஆறு வயது. முன்னாலே ஒழுங்கையிலை இருந்த கந்தையரிட்டைதான் மாடு அவிழ்த்தது. பாவம் பெடியன் ஊரிலை விற்கிற தண்ணி கலந்த பாலை குடிக்காம நல்ல பால் குடிக்கோணும் எண்டு நல்ல நோக்கத்திலை மாடு வாங்கி பிறகு மாடு ஒரு நேரம் கறக்கிற ஆறு போத்தில் பால் ஆறுநேரம் குடிச்சாலும் முடிக்கேலாதெண்டு தெரிஞ்சு ஊரில வீடு வீடாய் பால்கொண்டுபோய் விக்கிற வேலையும் என்ரை தலையிலைதான் கடைசியாய் முடிஞ்சது வேற கதை.

முதலிலை வாங்கின மாட்டுக்கு சூரி எண்டு பெயர் வைத்தாயிற்று.சூரிக்குட்டி கன்னி நாகு. அது போட்ட கன்றுதான் லச்சுக்குட்டி. இலட்சுமி என்று அழகாக பெயர்வைத்தாலும் லச்சு எண்டு கூப்பிட்டாதான் அதுக்கு விளங்கும் எண்ட படியா லச்சு என்று சுருக்கியாச்சு. ( அதுக்கு பிடிச்சத பிடிக்காதது விளங்கினது விளங்காதது எல்லாம் எப்பிடி உமக்குத்தெரியும் எண்டு கேட்டு நீங்கள் எனக்கு கரைச்சல் குடுக்கக் கூடாது. அது அப்பிடித்தான்)

எங்கடை வீட்டை வளந்த மாடுகள் எல்லாமே நல்லவை. ஒரு சின்னப்பெடின் கூட போய் பால் கறக்க விடும். அது மட்டுமில்லாமல் அசைந்தால் பால்வாளி இடறிவிடும் எண்டு தெரிஞ்சு அசையாமல் நிற்கும்.ஆனாலும் இலையான் கலைக்க வாலை நன்றாகவே விசுறும். மாட்டு வால்தானே எண்டு சும்மா நினையாதையுங்கோ. சும்மா முதுகில பட்டால் தான் தெரியும் சவுக்கால அடிச்ச மாதிரி. எனவே பின்னங்கால்களையும் கட்டி அதோட வாலையும் கட்டி மடி கழுவுற வேலையை அப்பா பார்ப்பார். அப்ப எனக்கு என்ன வேலை எண்டு கேட்கிறியளோ? அங்கை ரெடியான உடனே கன்றை அவிட்டு விடுகிற வேலை எனக்குத்தான். 

பசியோடை எப்படா அவிழ்த்து விடுவான் எண்டு பார்த்துக் கொண்டு கன்று சுற்றிச் சுற்றி வரும். கையை நக்கும். முகத்தோடை முகம் உரசும். கெஞ்சும். நானென்ன செய்ய. அப்பா அங்கை ரெடியாகும் மட்டும் ஒண்டும் செய்ய முடியாது. அதுமட்டும் பொறு பொறு எண்டு சொல்லிப் பார்க்கிறது. கேட்டாத்தானே. பழையபடி வந்து கையை நக்கும். பார்க்க பாவமாய் இருக்கும். 

அங்கையெல்லாம் ரெடி எண்டவுடன் கண்டூ வரூதூ எண்டு கத்திப்போட்டு கட்டை அவிட்டு விடுவன். பேந்தென்ன. துள்ளிக் குதிச்சு ஓட்டந்தான்.

கன்று பால் குடிச்சு முடிஞ்சவுடன் வாலைத்தூக்கிக் கொண்டு வளவெல்லாம் குதிக்கும். அந்த நேரம் அதோட சேந்து குதிக்கிறதுதான் எனக்கு வேலை. எங்கடை வீடு றோட்டுப் பக்கம் எண்டதாலை கன்றுக்குட்டிக்கு றோட்டுப் புதினம் காட்ட கூட்டிக் கொண்டு போறதும் நான்தான்.

கன்றுக் குட்டியின் நெற்றியில் கொஞ்சுறதெண்டா எனக்கு நல்ல விருப்பம். ஆனா கண்டுக் குட்டிக்கு அது பிடிக்காது. தலையை அங்கையும் இங்கையும் ஆட்டும். நெற்றியிலை கொஞ்சவேணும் எண்டு நினைத்தா.... கண்டு வருது எண்டு கத்த அதுக்கு பழைய நினைவு வர ... பேந்தென்ன என்ரை வேலை வெற்றிதான்.

ஆனா பாருங்கோ பால் குடிச்ச கண்டை பிடிச்சுக் கட்டடா எண்டு அப்பா சொன்னா போங்கப்பா படிக்கிற வேலை கிடக்கு எண்ட சாட்டை சொல்லி கன்றை கட்ட போறதில்லை. கன்றைக் கட்டி அதின்ர கோபத்தை சம்பாதிச்சு பிறகு கண்டு வருது எண்டதிற்கு கிடைக்கிற கொஞ்சலை இழக்க எனக்கு என்ன விசரே???

செவ்வாய், 22 ஜூலை, 2008

உலக சுகாதார தினம் 2006



உலக சுகாதார ஸ்தாபனத்தில் வேலை செய்த காலத்தில் உலக சுகாதார தினம் கொழும்பு இன்ரகொன்டினண்ட் ஓட்டலில் கொண்டாடப்பட்டது. அதில் எடுக்கப்பட்ட படங்கள் தான் இவை!

செவ்வாய், 15 ஜூலை, 2008

மறக்க முடியாத நினைவுகள்

படிச்ச இடத்திலே பணிபுரிவது ஒரு அலாதியான அனுபவம் . அது enathu பல்கலை கழகத்திலும் கிடைத்தது. டெமோ ஆகி பணி புரிந்த எல்லாரையும் சேர்த்து படம் எடுக்க என்னை விட்டார்கள். வாங்கடா எட்டுமணிக்கு என்றால் ஒன்று எட்டு மணிக்கும் ஒன்று ஒன்பது மணிக்கும் வரும் . இந்த கரைச்சலை எல்லாம் தாண்டி ஒரு மாதிரி பத்து மணிக்கு படம் எடுத்து முடிச்சாச்சு !

ரை கட்டும் சுரஞ்ச , சூ லேஸ் கட்டும் சுரங்க , பார்த்து சிரிப்பது கவிங்கா .



ஏக்கம் மிகுந்த இனிய நினைவுகள்





இந்தப் படங்கள் எங்கே எடுக்கப் பட்டது என தெரியுமா ?



முறி கண்டியை மறந்து இருக்க மாட்டியள் தானே?



இப்ப சொல்லுங்க 9 திறக்குமா என்ற ஏக்கம் உங்களுக்கும் இருக்கு தானே?

சட்டி சுட்டாலும் கை விடாது!

தோசை சுடுவமா ?


சாப்பிட தயாரான நிலையில் நெய்த் தோசை

சமையல் செய்வது என்பது ஆண்களுக்கு ஒரு பெரிய விடயமல்ல. வெளி நாடுகளில் இருக்கும் நண்பர்கள் சமைத்து ஒரு கிழமை சாப்பாடை குளிரூட்டியில் வைக்கும் கதை நாமறிந்தது.



ஆனாலும் சமையல் என்பது அலுப்பு பிடிச்ச விடயம் தான்.

சரி நாமும் தான் சமைச்சு பாப்பமே என வெளிக்கிட்ட எனது கதை இது. சட்டி சுட்டாலும் இன்னும் கை விட வில்லை ( சமையலை)

செவ்வாய், 8 ஜூலை, 2008

எமது இரத்த வங்கி

காலை கடமையில் இருந்த எனது ஆளணியினர்
களைச்சுப் போனிங்கள் டாக்டர் , Anchor குடியுங்கள்
அடுத்த வருசமும் வரவேணும் என்ன?


வெள்ளி, 4 ஜூலை, 2008

கந்தான மலை பயணம்

எமது பல்கலை கழகத்துக்கு ஒரு மரபு உள்ளது . ஒரு புது அணி உருவானதும் அதன் முதல் சுற்றுலா கந்தான மலை ( கண்டி) ஏறுவதுதான் . எமது மருத்துவ பீட அணியும் கந்தான மலை ஏறியது. அந்த சுற்றுலாவில் வழமையாக யாரவது வழி மாறி போவது உட்பட பல கலாட்டாக்கள் நடக்கும். பல புது சோடிகள் உருவாவதும் அங்கு தான். நல்ல வேலையாக எமது அணியில் யாரும் மலையில் தொலைய வில்லை . ஆனாலும் என்ன, போன மூன்று பஸ் களில் எமது பஸ் முன் லைட் எரியாது . அட கடவுளே , பின்னால் வந்த பஸ் இன் உதவியுடன் மலை இறங்கி வர வேண்டியதாய் ஆயிற்று. faculty வந்து சேரும் போது இரவு பதினோரு மணி என்று ஞாபகம் .

கந்தான மலை உச்சியில் உள்ள தொலை தொடர்பு கோபுரம்

மலை ஏறிய தமிழ் மாணவர் அணி

திங்கள், 30 ஜூன், 2008

கனவு நனவாகும் காலம் !

ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கி சுத்திதிரியுறது எண்டா பொடியளுக்கு சந்தோஷம் தான். சைக்கிளே ஓடத் தெரியாத வயதில் யாருடைய வண்டியிலாவது ஏறி படம் எடுப்பது பொழுது போக்கு !
இரவல் பைக் இல் ஏறி இருந்த சந்தோஷம்

சொந்தக் காசில் வாங்கிய பைக்

அறை எண் 78 இல் கடவுள்

அறை எண் 305 இல் கடவுள் படத்தை நீங்கள் பார்த்திருக்க கூடும். எங்களது பல்கலை கழக வாழ்க்கையில் விடுதி வாழ்க்கை மறக்க முடியாதது. அதுவும் முதன் முதலாக கிடைத்த அறை எண் 78 . அதில் நானும் ரூம் மேட் இநோஷானும் பட்ட அவலங்கள் கொஞ்சம் இல்லை என்றாலும் எமது விடுதி வாழ்கை சந்தோசமாகவே கழிந்தது .

ஒரு பிரமச்சாரியின் அறை


அலுப்படிக்குது !

யாழ் இந்து மேலை தேய வாத்திய குழு

யாழ் இந்து கலூரிக்கு பல சிறப்புகள் இருந்தாலும் அந்தக் காலத்தில் இருந்த வெஸ்டர்ன் பேண்ட் ட்ரூப் பிரபலமானது . அந்தக் காலத்தில் yamaka இசை உபகரணங்களுடன் இருந்த ஒரே ஒரு பாடசாலை யாழ் இந்து தான் . ஒவ்வொரு வருடமும் விளையாட்டுப்போட்டியில் தான் புதிய band majar உடன் புதிய அணி களம் இறங்கும்.

மேஜர் தவபாலன் உடன் எமது அணி


அட்சரம் பிசகாத அணி வகுப்பு


leep forward நடவடிக்கைக்கு முதல் நாள் எமது விளை யாட்டுப் போட்டி


இது அந்த நாள் ஞாபகம்


செவ்வாய், 17 ஜூன், 2008

சொன்னா வெட்ககேடு சொல்லாட்டா மானக்கேடு !




ஒரு நிறுவனத்துக்கு பொறுப்பு அதிகாரியா வாறதெண்டால் ஒரு பெரிய விசயந்தான் . ஆனாலும் ஒருத்தரும் இல்லாத கட்டத்தில் பதவி கீழ உள்ளவர்களுக்கு கிடைக்கிறது என்றால் அது ஒரு கேலிக் கூத்து ! ஆலை இல்லா ஊருக்கு இலுப்பை பூ சக்கரை (சர்க்கரை )


ஆனாலும் என்ன கீழே உள்ளவனுக்கு இரத்த வங்கியின் பொறுப்பு கிடைத்தது
இரத்த தானம் செய்யும் கொடையாளர் தினம் வந்த போது சிறிய விழா கொண்டாடப் பட்டது .

ஏதோ என்னால இயண்டது இது என்று செய்த விழாவின் படங்கள் கீழே




ஒன்பது மணிக்கு லேட் ஆக வந்த அதிகாரி !




போஸ்டர் ஒட்டவும் நாங்களே போகவேணும்!



செஞ்சிலுவை சங்க உதவி



என் கூட வேலை செய்பவ !




எல்லாம் நடந்தது 14.06.2008 அன்று !







செவ்வாய், 10 ஜூன், 2008

மருத்துவ பீட சுற்றுலா

மருத்துவ பீட சுற்றுலா

கொழும்பு மருத்துவ பீடத்தில் படித்த ( அல்லது படிக்கிற மாதிரி நடித்த ) ஐந்து வருடங்களில் கிடைத்த ஒரு சந்தர்ப்பம் தான் இந்த பேருவளை சுற்றுலா.
பீடத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களும் ஒரு புகைவண்டி பிடித்து அந்த விசேட வண்டியில் கடற்கரைக்கு போகும் அனுபவம் மறக்க முடியாதது!
இந்த காலத்தை போல் பயணம் என்றால் குண்டின் பயம் இன்றி போன நந்தவன நாட்கள் அவை!

இந்த படங்கள் நண்பன் தினேஷின் பேனை புகைப்பட கருவியால் பிடிக்கப்பட்டவை .




சீனியர் கலை சாப்பாட்டு பொதியுடன்!


திரும் ப போக வண்டி வருமா என் ஏங்கும் புது முக பிரிவு ( அது அப்ப)

தலைவர் என்றால் இப்படித்தான் !

தலைவராக முன்னர் அருணன் திருக் கேதீச்வரம் போனபோது நள்ளிரவில் நடந்தது ! ( எத்தனையாவது முறை குடிக்கிறார் என கேட்க கூடாது! )





தலைவர் ஆனா பிறகு கனக்க தரம் குடுக்க வேணாம் எனும்போது !


தலைவர் என்றால் இப்படித்தான் !

வியாழன், 8 மே, 2008

மலையும் பள்ளத்தாக்கும் !










இரண்டு மலை

இடையில் பள்ளத்தாக்கு

ஒரு மலையில் என் வேலைத் தளம்

மறு மலையில் என் குடியிருப்பு

இரண்டு மலைகளிலும் மேக முந்தானைகள்

பள்ளத்தாக்கின் ஊடாக என் பாதை

இப்படித் தான் எழுதவேண்டி வரும் என் இருப்பிடம் பற்றி சொன்னால்

என்றாலும் இன்னும் இரட்டை அர்த்தத்தில் கவி சொல்வதாக அவள் கோவிக்க கூடும்

படத்தை பாருங்கள் நான் சொன்னது உண்மை என புரியும்







செவ்வாய், 6 மே, 2008

மடுவுக்கு போன மனிதர்கள்

இந்த படத்தைப் பார்த்திட்டு ஏதோ இந்த வெங்காயங்கள் போய் மடுவை பிடிசிடுதுகள் என்று தவறாக எண்ண வேண்டாம் .இது சிவராத்திரிக்கு திருகேதீச்வரம் போகேக்கை மடுவுக்கும் போய் எடுத்த படம் . 2005 ஆம் ஆண்டு எடுத்த படம். கொழும்பு பல்கலை கழக தமிழ் மன்றம் ஏற்பாடு செய்த பயணம் அது !

மருத்துவ பீடத்தால் போன மருத்துவ மாணவர்கள்

பயணம் செய்த பஸ் . என்ன பகிடி என்றால் இந்த இரண்டு பஸ் உம் மடு வர முடியவில்லை. பாதை பயண அனுமதி இல்லாததால் இவை இரண்டும் உள்ளே செல்ல படையினரால் அனுமதி மறுக்கப்பட்டது . எனவே மூன்றாவதாக பிடித்த பஸ் இனுள் மூன்று பஸ் சனத்தையும் அடைத்து போன பயணம் மறக்க முடியாதது !

புதன், 30 ஏப்ரல், 2008

சைக்கிள் ஓட பழகிய கதை

எனக்கு ஆண்டு ஆறு படிக்கும் வரை சைக்கிள் ஓட தெரியாது என்பது அவமானத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. அந்த வயதில் குஞ்சு குருமான் எல்லாம் பெரிய சைக்கிளை கூட பாருக்கால் கால் விட்டு ஒடக்கூடியதாக இருக்கையில் எனக்கு அரை சைக்கிள் வாங்கி தந்தும் ஒடதெரியாதது அவமானம் தானே? என்றாலும் பக்கத்து கோயிலில் சூடு விழுந்தான் பிள்ளையார் கோவிலில் பின் சீட்டை அப்பா பிடிக்க , தத்தி தத்தி சைக்கில் ஓட பழகியதை இன்றும் மறக்க முடியாது.

இது இப்படி இருக்க , ஒரு நாள் சைக்கிளில் தனியா போகும்போது சந்தியை கடக்கவேண்டி வந்தது . சைக்கிளை மிதிக்கவும் பிரேக் பிடிக்கவும் மட்டும் தெரிந்த எனக்கு போக்கு வரத்து விதிகள் எதுவும் தெரியாது. சந்தியை கடக்கும் போது முன்னாலே பிரதான வீதியில் ஒரு வயதான மருத்துவ மாது வந்துகொண்டிருந்தா . என்ன செய்வது என்று தெரியாததால் கண்களை இறுக்கி மூடிக்கொண்டேன் . டமால் என்று சத்தம் மட்டும் கேட்டது . நாங்கள் இருவரும் தெருவில் விழுந்து இருந்தோம். பிழை முழுதும் என் பக்கம் தான் என்றாலும் எனக்கு ஒன்று பேசாமல் என்னை தூக்கிவிட்டு தம்பிக்கு காயமா என கேட்ட அந்த அம்மாவை மறக்க முடியாது .

அதுசரி இங்கே கொழும்பிலே இன்னும் சைக்கில் பலன்சு பண்ணி ஓட தெரியாம இருந்த என் நண்பனை பார்க்கும் போது எனக்கு சந்தோசம். என்னை விட கீழேயும் ஒருவன் இருக்கிறான் !