ஆமிக்காரன் எண்டு சொன்ன உடனை முந்தி எங்கடை சனம் ஓடுறமாதிரி அந்த மினி வான் வரேக்கையே விளங்கியிட்டுது பின்னாலை ஒரு சீ ரி பி வரூது எண்டு! யாழ்ப்பாணத்திலைதான் இந்தளவுக்கு போட்டி போலை கிடக்கு! யாழ்ப்பாண மினிவான் எல்லாம் உந்த ரோஸா வான்தான். எங்கடை ஒடுங்கின ரோட்டுகளுக்குள்ளை பேயோட்டம் ஓட அந்த பஸ்கள்தான் சரி! ஆனாப் பாருங்கோ அதுக்குள்ளை எஸ் வடிவத்திலை எல் வடிவத்திலை எல்லாம் நிற்க உங்களுக்குத் தெரியோணும். முந்தின உடம்பெண்டா வளைஞ்சு கொடுக்கும் ஆனா அப்ப முத்தின உடம்பு! சளிஞ்சுதான் கொடுக்கும்.
காலை அல்லது உடம்பின்ரை ஏதாவது ஒரு பகுதியை வானுக்கை வைத்துக்கொண்டு மிச்சத்தை நீங்கள் எங்கை வைச்சிருந்தாலும் கொண்டக்ரருக்கு சந்தோசம்தான். அம்மா அங்கை இடமிருக்கு ஆச்சிக்கு சீட்டைக் குடுங்கோ எண்டெல்லாம் பேய்க்காட்டிச் சனத்தை ஏற்றிக்கொண்டு வரேக்கை புட்போட் நிலத்திலை தோய நிவைமாதப் பிள்ளைத்தாய்ச்சி போலத்தான் வான் இருக்கும்!
வானுக்கை ஏறமுன்னம் கையிலை காசை எடுத்துப்போடவேணும் பாருங்கோ! இல்லாட்டா பின்பொக்கற்றிலை பேசை எடுக்கப்போய் தன்ரை இடுப்பிலை கிள்ளிப்போட்டார் எண்டு பொம்பிளைப்பிள்ளையளிட்டை குறை கேட்க வரும். சிலவேளையிலை கையை காலை அசக்கெலா இறுக்கத்திலை நிற்கேக்கையும் கொண்டக்கரர் விலாங்கு மீனைப்பொல வழுக்கிக்கொண்டு வந்து எல்லாரும் ரிக்கட் எடுத்தாச்சோ எண்டு கேட்கேக்கை கனகாலமாய் பேச மறந்திருந்த செந்தமிழ்தான் வாயில வரும் பாருங்கோ!
அதுசரி ரிக்கெட் எடுக்கிறதெண்டா அதுக்கு அர்த்தம் காசைக் குடுக்குறததான். அங்கை ரிக்கெட் ஒண்டுந் தாறேல்லை! ஆனாப்பாருங்கோ ஒரு அண்டர்ஸ்டாண்டிங்தான்! திருப்பி மிச்சங்கேட்கேக்கைதான் இருக்கு விளையாட்டு!
சீரிபி பாருங்கோ ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும் வாடியிருக்குங் கொக்கு! தன்னை முந்திக் கொண்டு போற எல்லா மினிவானையும் விட்டிட்டு ஆறதலா வரும். அதிலை ஏறினா மற்றவையிலை முட்டாம காசு எடுத்துக் கொடுக்கலாம். தவிர என்னைமாதிரி உயரமான பெடியள் வளையாம நெளியாம நிமிர்ந்து நிற்கலாம்!
ஆனாப் பாருங்கோ கலியாணத்துக்கு பொம்பிளை தேடுற மாதிரி சிரிபியை பிடிக்கிறதும் வலுங் கஸ்டம்! பெற்றாவிலை பஸ் வாறமாதிரி ஒண்டுக்குப் பின்னாலை ஒண்டு வருமெண்டா நான் ஏன் பாருங்கோ மோட்டபைக்கிலை ஏறப்போறன்???!!
( படங்கள் இணையத்தில் சுட்டவை)
01.08.2011